- ஜெம்ஸித் அஸீஸ்
ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டித்தது.
தாக்குதலில் பலியான அப்பாவி பொதுமக்களுக்காக கண்ணீர் வடித்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. சாய்ந்தமருதில் மறைந்திருந்த தீவிரவாதிகளை படைத் தரப்புக்கு காட்டிக் கொடுத்தது. தற்கொலைத் தாக்குதல்தாரிகளின் உடலை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க மறுத்தது. முஸ்லிம்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை என்றது.
அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிக் கிரியை நடத்த நாம் தயாரில்லை என்றது.
இன்று வரை அவர்களை சரி காண ஒரு முஸ்லிமேனும் முன்வரவில்லை.
அந்த ஈனச் செயலைப் புரிந்தவர்கள், துணை நின்றவர்களையெல்லாம் சபித்து வருகிறது முஸ்லிம் சமூகம்.
முஸ்லிம் தனவந்தர்களும் முஸ்லிம் வியாபார நிலையங்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினூடாக முஸ்லிம் மக்களும் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் காயப்பட்டவர்களுக்கும் தம்மாலான நிதி உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தனைக்குப் பிறகும், முழு முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதப் பட்டம் கொடுக்க பலரும் முயற்சிக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் அனைவருமே குற்றவாளிகள். அவர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கும் தோரணையுன் நடந்து கொள்கிறார்கள். சில இனவாத ஊடகங்கள் அதற்கு எண்ணெய் வார்க்கின்றன.
முஸ்லிம்களின் முதுகெலும்பை முறித்துப்போட இதனைவிட வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. குட்டையோ நன்றாக கலங்கியிருக்கிறது. மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி நிற்கிறார்கள் பலர்.
விளைவாக முஸ்லிம்களும் குற்ற உணர்வோடு கூனிக் குறுகி நிற்கிறார்கள். அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். தம்மை முஸ்லிம்களாக இனங்காட்ட வெட்கப்படுகிறார்கள் சிலர். இந்த நாட்டில் இனியும் வாழலாகாது. நாடு துறந்து வேறெங்காவது சென்று வாழ்வதுதான் நல்லது என்று சிந்திப்பவர்களும் இல்லாமல் இல்லை.
முஸ்லிம் சமூகத்தினரே! இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் அஜண்டாவுக்கு விலை போனவர்கள் செய்த வேலை இது. அவர்களது பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக இருப்பதனால் நாங்கள் எப்படி குற்றவாளிகளாக முடியும்?
தேசத் துரோகம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் மாபியா, கடத்தல், பாதாள உலக குழுவினரின் அட்டகாசம் என்று பஞ்சமா பாதகங்கள் தினம் தினம் நடக்கின்றன. தனி மனிதர்களாகவும் குழுக்களாகவும் அவை அரங்கேறுகின்றன. அவர்களது குற்றங்களுக்கு அவர்கள் சார்ந்த இனமோ மதமோ பொறுப்பல்ல.
எனவே, அநாவசியமாக நாம் குற்ற உணர்வோடு வாழ வேண்டியதில்லை. குற்றமிழைத்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதே நமது கடமை.
என்றாலும், இந்தத் தாக்குதல் மதத்தின் பெயரால் நடந்திருப்பதனால் சூழ்நிலை சற்று சூடாகவே இருக்கிறது. அதனைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் குறி வைக்கப்படலாம். அநாவசிய கெடுபிடிகளுக்கு உள்ளாகலாம். துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடலாம். சின்னச் சின்ன விடயங்கள் பூதாகரப்படுத்தப்படலாம். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வஞ்சிக்கப்படலாம். வெறுக்கப்படலாம். முன்பு புன்முறுவல் பூத்தவர்கள் இப்போது முறைத்துப் பார்க்கலாம். நெருக்கமாக பழகியவர்கள் தூர விலகிச் செல்லலாம். எந்தக் காரணமின்றியும் சோதனையிடப்படலாம்.
இந்த சந்தர்ப்பங்களில் நாம் பொறுமைகாக்க வேண்டும். ஆவேசப்படுவதற்கும் ஆத்திரத்தைக் கொட்டுவதற்குமான சந்தர்ப்பமல்ல இது. நிதானமிழக்காது சமயோசிதமாக நடந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். முதலில் இந்த சூழலை எதிர்கொள்ளத் தேவையான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணர்வுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு அறிவுபூர்வமாக பேசவும் கலந்துரையாடவும் செயற்படவும் வேண்டும். முரண்பாட்டுக்கு வழிவகுக்கும் விடயங்களைத் தவிர்க் வேண்டும். விதண்டாவாதம் வேண்டவே வேண்டாம். படைத் தரப்பினருக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் ஆதாரமற்ற விடயங்களையும் எமக்குத் தெரியாதவற்றையும் பொய்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுகின்ற கருத்துக்களை ஒருபோதும் பகிர்ந்துவிடக் கூடாது.
இலங்கை எமது தாய் நாடு. நாம் இங்கு இரண்டாம் தரப் பிரஜையல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை எமக்கும் உண்டு. மத சுதந்திரத்தை எமது நாட்டின் சட்ட யாப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் இங்கு வெளிநாட்டவர்கள் போல் வாழ வேண்டியதில்லை. அந்நியப்பட்டு பிரிந்து நிற்க வேண்டியதில்லை. நாட்டு நலன்தான் எமது நலன். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. நாட்டைப் பாதுகாப்பது எமது கடமை. ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து போராடியவர்களின் வாரிசுகள் நாம் என்பதை ஒருபோதும் நாங்கள் மறந்துவிடக் கூடாது.
ஒரு முஃமின் சோதனைகள் வரும்போது அதனை எவ்வாறு எதிர்கொள்கின்றான் என்பதனை அல்லாஹுத் தஆலா பார்க்கின்றான். பரிசோதிக்கின்றான். தற்போதுள்ள சூழலை மையமாக வைத்து நாம் எதிர்காலம் குறித்து அச்சமடையவோ நம்பிக்கையிழக்கவோ தேவையில்லை. மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள், பண்பாடுகள், நற்குணங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை.
ஆனால், கடந்த காலங்களில் நாம் மார்க்கத்தின் பெயரால் விட்ட தவறுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதிலிருந்து பாடம் கற்கவும் வேண்டும்.
நபியவர்களது காலத்தில் முஸ்லிம்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் இது உங்களது தவறுகளால் நடந்த தோல்வி என்பதை சுட்டிக்காட்டி அல்லாஹ் அவர்களது தவறுகளை திருத்த சந்தர்ப்பமளித்தான்.
எனவே, நாம் எங்கு சமூகமாக தவறிழைத்திருக்கின்றோம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் இது. எமது பண்பாடுகள், நடத்தைகள், வெளித் தோற்றங்கள், முஸ்லிம் சமூகத்தினருடனான உறவு, மாற்றுக் கருத்து தெரிவிப்போருடனான தொடர்பு, சகோதர மதத்தவர்களுடனான உறவு முதலானவற்றில் எமது கடந்த கால அனுபவங்களை மீட்டிப் பார்த்து படிப்பினை பெற வேண்டிய காலம் இது.
இந்த நெருக்கடியான கால கட்டத்திலும் நாம் எமது உள்வீட்டுச் சண்டையை சந்திக்கு கொண்டு வரக்கூடாது. இயக்க, கட்சி பேதங்களால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறக்க வேண்டிய தருணம் இது. பழைய வெறுப்புணர்வும் காழ்ப்புணர்வும் பழிவாங்கும் உணர்வும் எம்மை வழிநடத்தலாகாது.
பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் ரமழான் கற்றுத் தரும் அரிய பாடங்கள். சோதனைகளை பொறுமையுடன் எதிர்கொள்வதில் வெற்றி இருக்கிறது.
சோதனைகள் பொதுவாக இரண்டு வகையான எதிர்விளைவுகளை நோக்கி ஒரு மனிதனை நகர்த்தி விடும்.
- மதச் சார்பின்மை
- தீவிரவாதம்
இந்தக் கட்டத்தில், மார்க்கத்தைப் பின்பற்றுவதனால்தான் எமக்கு இந்த சோதனை என்று கருதி மார்க்கத்தை விட்டும் தூரமாகி நிற்க சிலர் முயற்சிப்பர். அதற்கான காரணங்களையும் பட்டியலிடுவர். தமது வாதத்தை நிறுவ முயற்சிப்பர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மார்க்கத்திலிருந்து விலகி மார்க்கத்தின் அடிப்படையிலிருந்தே தூரமாகி விடுவர். மற்றவரையும் தூரமாக்கும் முயற்சியில் ஈடுபடுவர். இது ஆபத்தானது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
மறுபக்கம், சோதனைகளும் தொடர்ந்தேச்சியான அடக்குமுறையும் தீவிரவாதத்தின்பால் மற்றும் சிலரைத் தள்ளி விடும் அபாயமும் இருக்கிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விடும்.
இந்த இரு திசைகளின்பால் முஸ்லிம் சமூகத்தை நகர்த்துவதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெறலாம். இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
குறிப்பாக முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். நவீன யுகத்தில் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், சமூக வலைத்தளங்களில் அவர்களது நண்பர்கள் யார், எவ்வாறான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், யாருடன் தொடர்பிலிருக்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க கடமைப்பட்டுள்ளனர். தீவிரவாத சிந்தனையின்பால் தமது பிள்ளைகள் கவரப்படுவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துவது பெற்றோரின் பாரிய பொறுப்பு.
சமூக ஒழுங்கு, சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கின்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்குரியது. ஊர் மட்ட, தேசிய மட்ட சமூக சன்மார்க்க தலைமைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் நாட்டு சட்டங்களை மதித்து நடக்கவும் வேண்டும்.
ஏனைய சமூகத்தினருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஊர், பிரதேசம், மாவட்டம், தேசிய மட்டங்களில் அரச இயந்திரத்துடன் இணைந்தும் சமூகநலப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கிராம சேவகர், மாவட்ட அதிகாரி, பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர், நகர சபை, மாநகர சபை என்று எங்கெல்லாம் அரச நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பணகளில் ஈடுபட முடியுமோ அங்கெல்லாம் எமது ஒத்துழைப்பை வழங்குவது கட்டாயம்.
இனியும் நாம் தனியாகவோ தனித்தோ இயங்க முடியாது. இணைந்து பணியாற்றுவதில்தான் பலன் அதிகம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
-Vidivelli