நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் அனைத்தும் வீரியம் மிக்கவையாக அமைந்தமைக்கு பாதுகாப்பு பிரிவினரும் காரணமாக இருந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு வன்செயல்களின் பின்பும் சுமத்தப்பட்டு வந்துள்ளது. வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களும் வன்முறைகளின்போது பதிவு செய்யப்பட்ட காணொலிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்பே அவை தொடர்பில் பொலிஸாருக்கும் இராணுத்தினருக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் அது விடயத்தில் பாதுகாப்பு பிரிவினர் அசமந்தப் போக்கிலேயே செயற்பட்டுள்ளனர். அளுத்கம, அம்பாறை மற்றும் கண்டி – திகன பகுதிகளில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு முன்பே அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பொலிஸார் உரிய நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காத காரணத்தினாலேயே உயிர்ச் சேதங்களும் சொத்து அழிவுகளும் ஏற்பட்டன.
அண்மையில் குருணாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களும் இதே பாணியிலேயே நடந்தேறியுள்ளன.
வடமேல் மாகாணத்தில முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்தும், மினுவாங்கொடை பகுதியில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்தும் வன்முறையாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அவை இடம்பெற சிலமணி நேரத்துக்கு முன்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றைத்தடுக்க எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை’ என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடுகம, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்தக் கடிதத்தில் வன்முறைகளை சீர்செய்ய இன்றுவரை உருப்படியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தாமும் தனது குழுவினரும் வன்முறைகள் நடந்த இடங்களுக்கு நேரில்சென்று தகவல் திரட்டியதாகவும் இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிகமாக அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள், பொலிஸார், இராணுவ வீரர்கள் எனப் பலரிடம் கருத்துப்பதிவு செய்ததாகவும் அதிலிருந்தே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறையாளர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
வன்செயல்களுடன் தொடர்புபட்ட பொலிஸாரினால் பெரும் எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர். மினுவாங்கொடையில் இவ்வாறு கைதான 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
பலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் உறுதிப்படுத்துகிறது. குளியாப்பிட்டிய, பிங்கிரிய பகுதிகளில் கைது செய்யப் பட்டவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்டதாக அந்தப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதிவிட்டுள்ளமையையும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றைத்தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, வன்செயல்கள் சில பகுதிகளில் அவர்களின் முன்னிலையிலே அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் பாரதூரமான விடயமாகும். வன்செயல்களுக்கு அவர்கள் இடமளித்திருக்கிறார்கள். சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தபோதே வன்முறைகள் நடந்தேறியிருக்கின்றன. எனவே பாதுகாப்பு அமைச்சும் நாட்டின் தலைவரும் இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் இந்நிலைமை தொடராதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
-Vidivelli