நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முஸ்லிம் வர்த்தகர்களின் பங்களிப்பு மகத்தானதாகும்
நிதியமைச்சர் மங்கள பாராளுமன்றத்தில் உரை
இந்நாட்டிலுள்ள 90 வீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் அவர்களால் காட்டித் தரப்பட்டதாலேயே தான் எமது இராணுவத்தினரால் மிக விரைவில் பயங்கரவாதிகளைக் கைது செய்யவும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடிந்தது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தொடரில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சியினரே நாட்டில் மீண்டும் கலவரநிலை ஒன்றைத் தோற்றுவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள – முஸ்லிம் மோதல் ஒன்றை ஏற்படுத்தவே இவர்கள் தூபமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சிறு குழுவொன்று செய்த வேலையை இவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக காட்டவே எத்தனிக்கிறார்கள்.
மகசோன் பலகாய அணியினர் இனக்கலவரத்தை தூண்டிக் கொண்டு நாட்டை அழிக்கும் வேலையையே செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் பயங்கரவாதிகள்.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயலால் நாட்டின் பொருளாதாரத்திற்கே பாரிய அடிவிழுந்துள்ளது. அழித்து தீக்கிரையாக்கப்பட்ட மிகப் பாரிய தொழிற்சாலை உரிமையாளர் முஸ்லிமாக இருந்தபோதிலும் அங்கு 95 வீதத்திற்கும் மேலாக சிங்கள ஊழியர்களே தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வகையில் மூன்றே மூன்று பேர்தான் முஸ்லிம் தொழிலாளர்கள் அங்கு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்று தொழில் இல்லை. இதேபோன்றுதான் இந்நாட்டில் முஸ்லிம்களால் நடத்தப்படும் பெரிய நிறுவனங்களில் எல்லாம் பெரும்பாலான சிங்கள தொழிலாளர்களே வேலைக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 4800 பேர் வேலை செய்யும் ப்ராண்டிக்ஸ் நிறுவனத்தில் 75 வீதம் சிங்களவர், 1200 பேர் பணியாற்றும் ஹமீதியா நிறுவனத்தில் 80 வீதம் பேர் சிங்களவர்கள். எமரல்ட் நிறுவனத்தில் 90 வீதம் சிங்களவர்கள். மெலிபன் தொழிற்சாலையில் 90 வீதத்திற்கு மேல் சிங்களவர்கள் உள்ளார்கள். இவ்வாறு சிங்களத் தொழில் நிறுவனங்களில் அதிகமானோர் வேலை பார்க்கும் அதே நிலையில் முஸ்லிம் நிறுவனங்களிலும் அதே அளவு சிங்கள தொழிலாளர்களாலேதான் நிரம்பி வழிகின்றதை அவதானிக்க முடிகிறது. இவை தாக்கப்படும்போது சிங்களவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருவதில் முஸ்லிம் வர்த்தகர்கள் பாரிய பங்களிப்புச் செய்கிறார்கள். சிலோன் டீ நிறுவனத்தை ஈண்டு குறிப்பிடலாம். இது முஸ்லிம் வர்த்தகருக்குரியதே. இத்தகைய நிறுவனங்களைத் தாக்கியழிப்பதன் மூலம் நாட்டுக்குத்தான் நாசத்தை விளைவிக்கச் செய்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு அதலபாதாளத்திலிருந்த நாட்டை நாம் ஒருவாறு கரை சேர்த்துக் கொண்டு வந்தோம். 2016, 2017 இல் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எமது பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. தொடர்ந்தும் நாம் ஈடுகொடுத்து முன்னேறி வரும்போது 2018 ஒக்டோபர் 26 களில் யாப்பை மீறி ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை எதிர்கொண்டோம். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின்படி நாம் பதவிக்கு வந்து சீராகும்போது ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் முன்னர் நிகழ்ந்த பொருளாதாரப் பாதிப்பை விடவும் பாரிய வீழ்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டோம். நல்ல வருமானம் ஈட்டித் தந்த உல்லாசப் பயணத்துறைக்கும் பாரிய நஷ்டத்தையே உண்டு பண்ணியுள்ளது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் நாட்டை வீழ்த்தும் வேலைகளிலேதான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரின் விஜேராமவிலுள்ள வாசஸ்தலத்திற்குச் செல்லும் பாதைகளை மூடி அவர் பெரும் பீதியிலேயே உள்ளார். எமது பிரதமரின் வாசஸ்தலத்தைப் பாருங்கள் அது சுதந்திரமாக விடப்பட்டுள்ளது.
இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்றே நோக்குகின்றனர். ஆனால் இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் ஒருங்கமைந்த அமைதியை விரும்பும் ஒரு மதமாகும்.
இந்நாடு சகல மக்களுக்கும் உரிய நாடு என்பதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது சேறு பூசுகிறார்கள். நான் பௌத்த விரோதி என்று பிரசாரம் செய்கிறார்கள். நான் எனது நிதியமைச்சிலிருந்து பெருந்தொகைப் பணத்தை பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கே ஒதுக்கியுள்ளேன். கிறிஸ்தவ, ஹிந்து, முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்கு அதைவிட குறைந்த பணத்தையே ஒதுக்கியுள்ளேன். நான் பௌத்த மத விரோதியல்ல பௌத்த தர்மத்தைப் பறைசாற்றும் முன்மாதிரிமிக்க பௌத்தன். பௌத்த மதக் கோட்பாட்டின் படி சகல இன மக்களையும் அனுசரித்து வாழ்பவன். நாட்டை நேசிப்பவன். எனவே ஒரு சில குற்றவாளிகளின் செயற்பாட்டுக்காக முழு இனத்தின் மீது விரலை நீட்டுவதை விட்டு விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு கைகோர்க்க வேண்டும்.
-Vidivelli