வட மேல், மினுவாங்கொடை வன்முறைகள்: தகவல் வழங்கப்பட்டும் தடுப்பதற்கு தவறியுள்ளனர்
பொலிஸார், முப்படையினரை சாடி மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்
வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்தும் மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அவை இடம்பெற சில மணி நேரத்துக்கு முன்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கைகளும் அவர்களால் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த வன்முறைகள் தொடர்பில் அவற்றை சீர்செய்ய இன்றுவரை உருப்படியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
தாமும் தமது குழுவினரும் வன்முறைகள் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று தகவல் திரட்டியதாகவும், இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிகமாக அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் எனப் பலரிடம் தாம் கருத்து பதிவு செய்ததாகவும் அதிலிருந்தே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடுகம தனது கடிதத்தில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
23.05.2019 என்ற திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தில், வடமேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறையாளர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
அதேநேரம் தமது குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில், குளியாப்பிட்டி -– கரந்திபொல பகுதியில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்கள் சிலரும், பிங்கிரிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட பிங்கிரிய பொலிஸ் பிரிவின் வன்முறைகளுடன் தொடர்புடைய சிலரும் அவ்வந்த பொலிஸ் நிலையங்களால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டது எப்படியென மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தான் ஆராய்ந்து பார்த்ததாகவும், அந்த விடுவிப்புக்களும் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்கள் மே 15 ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், கொஸ்வத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய விடுவித்ததாக பதிவிட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன ரீதியிலான வன்முறைகள் என இதனை அடையாளப்படுத்தியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, அது தொடர்பில் வன்முறையாளர்களை மேல் நீதிமன்றால் மட்டும் பிணை வழங்க முடியுமான சிவில், அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்துக்கு முரணாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli