‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்டவுடனே எனக்கு மரண பீதியே ஏற்பட்டது. எமது கதை முடிந்து விட்டதென்றே எண்ணினோம். எமது முன்வீட்டு சுஜீவனீ தங்கை எங்களை அவரது வீட்டுக்குள் எடுத்து பாதுகாக்காவிட்டால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்பத்துடன் இந்த வீட்டில் மூன்று குடும்பங்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்தது’’ இவ்வாறு நாத்தாண்டியா, தும்மோதரையைச் சேர்ந்த ஏ.கே. ஹலீமா என்ற பெண் கூறினார்.
கடந்த 13 ஆம் திகதி மேற்படி பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையின் போது சிங்கள வீடொன்றில் தமது குடும்பத்துடன் மூன்று முஸ்லிம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டமை குறித்து, பீ.பீ.ஸீ. சிங்கள ஊடக சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஹலீமாவின் குடும்பம் உள்ளிட்ட மூன்று குடும்பங்கள் சம்பவ தினத்தைத் தொடர்ந்து சில தினங்கள் பாதுகாப்புக்கருதி அதே சிங்கள வீட்டிலே தங்கியிருந்துள்ளனர்.
நேர்காணலில் ஹலீமா மேலும் விபரிக்கையில்,
குண்டர்கள் குழு எமது வீட்டைத் தாக்க முனைந்தபோது, ‘அது சிங்கள வீடு சிங்கள வீடு’ என்று சிங்கள அன்பர் ஒருவர் கூச்சலிட்டே எமது வீட்டைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றினார்.
இவர்கள் எங்களையும் எங்கள் வீடுகளையும் காப்பாற்றித் தந்தது மட்டுமன்றி எங்களுக்கு உண்ணவும், குடிக்கவும் தந்தார்கள். இப்போதும் (பேட்டி எடுத்த சந்தர்ப்பத்தில்) தேநீர் தந்தார்கள்.
உதவிகளை நன்றியுணர்வோடு ஹலீமா வெளியிடுகையில், இவர்களைப் பாதுகாத்த வீட்டுப் பெண் சுஜீவனீ சந்தியா கூறியதாவது, “நான், உள்ளிட்ட எனது வீட்டார்கள், எமது அயலவர்களைக் காப்பாற்ற தேவையான சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொண்ட பணிகள் குறித்து மனநிறைவடைகிறோம்.
சிங்களவர்கள் தாக்க வரும்போது ஹலீமாவின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் ஏனைய முஸ்லிம் குடும்பத்தவர்களும் நிர்க்கதிக்குள்ளாகியதைக் கண்டோம். இவர்களைக் காப்பாற்றினால் எமக்கும் பிரச்சினை வரும் என்ற நிலையில் அதனையும் பொருட்படுத்தாது, எங்கள் உயிரையும் துச்சமாக மதித்து இவர்கள் உயிரைக் காப்பாற்றினோம்.
எமது ஊடகத்துக்கும் செவ்வியளிக்க சுஜீவனீ ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். தனக்கும் ஆபத்து நேரலாம் என்பதால்தான் அவர் அவ்வாறு தயங்கியதாகக் கருதுகிறோம்.
அவரது கூற்றுக்கமைய இங்கு ஊர் மக்களின் அனுசரணையோடு இத்தாக்குதல் இடம்பெறவில்லை என்பது தெளிவு.
வந்தவர்கள் முஸ்லிம் வீடுகளைத் தாக்கி விட்டுப்போன பின்னர் எமது நிலை குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. நாம் பல வருடங்களாக எத்தகைய பிரச்சினைகளுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இப்போது நடந்த சம்பவத்தால் எமக்குப் பிரச்சினைதான்’’ என்று சுஜீவனீ அதிருப்தியை வெளியிட்டார்.
சுஜீவனீயின் குடும்பத்தால் காப்பாற்றப்பட்ட மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது ரிஸ்வி கூறுகையில்,
‘‘குழப்பக்காரர்கள் நாலா பக்கங்களிலிருந்தும் கூச்சலிட்டுக்கொண்டு வருவதைக் கண்டு ஓடி ஒளிந்துகொள்வதற்கு இடமின்றித் தவித்துக் கொண்டிருந்தோம். இக்கட்டான இச்சந்தர்ப்பத்திலேதான் சுஜீவனீயின் கணவர் குமார எங்கள் வீட்டுக்கு ஓடி வந்தார். நாலா புறங்களிலிருந்தும் தாக்குதல் நடத்திக்கொண்டு வருகிறார்கள். நீங்கள் அவசரமாக எங்கள் வீட்டுக்குள் வாருங்கள் என்றார். உடனே நானும் மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும் சுஜீவனீயின் வீட்டுக்குச் சென்றோம். அங்கு ஏற்கனவே வந்திருந்த இரண்டு முஸ்லிம் குடும்பங்களும் இருந்தன. அவர்கள் சிறிய அறையொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் எமது குடும்பத்தையும் உள்ளேயனுப்பி கதவை மூடிவைத்தனர். அவ்வறையில் மூன்று குடும்பங்களையும் சேர்ந்த 14 பேர் தங்கியிருந்தோம். இருட்டறை, வெளியே பயங்கரக் கூச்சல் இவற்றால் சிறு பிள்ளைகள் அழுது புலம்பினர். நாம் இயன்றவரை பிள்ளைகளின் வாயை மூட வைத்தோம். எமது வீட்டுக்கு தீ வைக்க முயன்றபோது எமது அயல் வீட்டு சிங்கள சகோதரர் கலகக் காரர்களுக்கு கும்பிடு போட்டு, அவ்வீட்டுக்குத் தீ வைக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுள்ளார். இதனால் ஆவேசக்காரர்கள் அடங்கி அகன்று சென்றுள்ளனர். இதனால் எனது வீடு தப்பியுள்ளது’’ என்றார் ரிஸ்வி.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனுதாபம் தெரிவித்தும் நினைவு கூர்ந்தும் தும்மோதர மெல்லகெலே பகுதியில் இடம்பெற்ற விளக்கெரியச் செய்யும் நிகழ்வில் ரிஸ்வி உட்பட முஸ்லிம்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்கொலைத் தாக்குதலைக் கண்டித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெனரும் வெள்ளைக் கொடியும் ஊர்ப்பள்ளியிலும் மற்றும் இடங்களிலும் இப்போதும் காணக்கூடியதாக உள்ளன.
ரிஸ்வி கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது மனைவி பாத்திமா ரிஸ்வியா கூறியதாவது,
‘‘இவர்களால் நாங்கள் காப்பாற்றப்படவில்லையானால் கொட்டாரமுல்லையில் நடந்தது போன்று இங்கும் மரணங்கள் சம்பவித்திருக்கும். எங்களுக்குப் பாரிய அழிவுகள் நிகழ்ந்தாலும் கூட இங்குள்ள சிங்கள மக்கள் அதற்கு பொறுப்பு தாரிகள் அல்ல என்பதையும் நாம் அறிவோம். இங்குள்ள சிங்கள மக்களுடன் எமக்கு எத்தகைய குரோதங்களும் இல்லை’’ என்று அப்பெண்மணி கூறினார்.
நாத்தாண்டிய தும்மோதர மற்றும் மெல்லேகலே பகுதியில் வசிக்கும் சிங்கள – முஸ்லிம் மக்கள் நல்லிணக்கத்துடனே வாழ்கிறார்கள். ஆனாலும் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற வன்செயல் காரணமாக இனநல்லுறவில் ஒரு பெரும் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாகவே இப்பகுதி மக்களின் கருத்தாகவுள்ளது.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ள இப்பகுதியைப் பார்வையிடுவதற்காக சிலாபம் அருட்தந்தை வெலன்ஸ் சென்றுள்ளார். அதன் போதே தும்மோதர கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சுமித் பிரேமகுமார, அருட்தந்தையிடம் சிங்கள குடும்பம் ஒன்றால் முஸ்லிம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் எமது முகத்தைப் பார்க்க முடியவில்லையென்று ஹலீமா கூறிக் கொண்டிருந்தார். எங்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் இன்று எங்களால் ஹலீமாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. நான் இப்போது அவரிடம் எமது எல்லா மக்கள் சார்பாகவும் இரு கை கூப்பி கும்பிட்டுக் கேட்கிறேன் எங்களை மன்னித்து விடுங்கள் என்றே.”
இதற்கு சில தினங்களுக்கு முன்னர், சுமித் பிரேமகுமாரவின் தலைமையில் தும்மோதர விகாரையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரதேச மக்களைக் காப்பாற்றுவது தொடர்பாகவே இக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கொந்தளிப்பான சந்தர்ப்பங்களில் ஊரின் பாதுகாப்புக் கருதி, வெளி இடங்களிலிருந்து ஊருக்குள் வரும் கலகக் காரர்களை உள்ளே பிரவேசிக்கச் செய்யாது தடுக்கும் செயற்திட்டமொன்றை உருவாக்கல்.
2. இலக்கு வைக்கப்படும் தரப்பினரைக் காப்பாற்ற ஏனைய தரப்பு நடவடிக்கை எடுத்தல்.
இவ்வாறிருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் ஒன்று திரண்டு படையெடுத்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டோம். வெளியூர்களிலிருந்து எமது ஊருக்குள் பிரவேசிக்கும் குழப்பக்காரர்களைத் தடுக்க நாம் இயன்ற வரை முயற்சித்தோம். கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால் எமது முயற்சி கை கூடவில்லை. அவர்கள் வந்த மாத்திரத்திலேயே பரபரவென வீடுகளை உடைத்துக் கொண்டே முன்னேறினர். இரண்டு பள்ளிவாசல்களையும் தாக்கினர். இதனால் எமது முஸ்லிம் மக்களை எங்கள் வீட்டுக்குள் நுழைத்து கதவை மூடிக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவே எங்களால் முடியுமாக இருந்தது. அது போன்று ஒரு சில முஸ்லிம் வீடுகளை இது சிங்கள வீடுகள் என்று கூறிக் காப்பாற்றவும் எங்களால் முடிந்தது. வந்தவர்கள் முஸ்லிம் வீடுகள், பள்ளிகளை மட்டுமல்ல எங்கள் உள்ளங்களையும் உடைத்து சிதைத்தே சென்றுள்ளனர்’’ என்று சுமித் பிரேமகுமார சோகத்தோடு கூறினார்.
இப்போது மோதர பகுதியில் கடற்படை அதிகாரிகளால் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று மூன்று வாரங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பலைகள் மோதச்செய்தமை அரசியல் தேவையை ஈடுசெய்யும் ஓர் உபாய நடவடிக்கையென்றே சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒரு தரப்பு மீது மற்றொரு தரப்பு அச்சம், சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் ஒருசில ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிட்டமையும் இத்தகைய விபரீதங்கள் தலைதூக்கக் காரணமென ஒரு சில ஊடகங்கள் மீதும் விரல் நீட்டப்படுகின்றன.
எண்பத்திமூன்று கறுப்பு ஜூலைக்கு ஈடாக அண்மையில் முடுக்கி விடப்பட்ட தாக்குதல்களிலும் பகற்கொள்ளையும் கச்சிதமாக அரங்கேறியதான முறைப்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.
vidivelli