சட்ட்டத்தை மதிப்போம்
முகத்தை மூடிச் சென்றதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த இளம் கர்பிணிப் பெண்ணும் 3 மத குழந்தையின் தாயும்
வழமையாக வாடிக்கையாளர்களினால் களைகட்டியிருக்கும் அபாயா விற்பனை நிலையங்கள் இன்று வெறிச்சோடிப்போயுள்ளன. அபாயா விற்பனை நிலையங்களிலும், ஆடையகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புர்கா, நிக்காப்கள் அகற்றப்பட்டுவிட்டன.
புர்கா மற்றும் நிகாப்புடன் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்களைக் காண முடியவில்லை. கறுப்புநிற அபாயாவுடனான பெண்களையும் வெளியில் குறைந்த எண்ணிக்கையிலே காணமுடிகிறது.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால் வந்தவினை இது. முஸ்லிம் தீவிரவாதிகளின் அடையாளம் முகத்தை மூடி அணியும் ஆடை என்பது இப்போதல்ல நீண்டகாலமாகவே பெரும்பான்மை இன இனவாதக் குழுக்களால் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா, நிகாபுக்கு மாத்திரமல்ல அபாயா, ஹிஜாபுக்கும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது.
முகத்தை மூடி அணிவதை இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தன. தீவிரவாதிகள் முகத்தை மறைத்து ஆடையணிந்து மேலும் தாக்குதல்களை நடாத்தலாம் என அதற்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இம்மாத ஆரம்பத்தில் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் முகத்திரை அணிய தடைவிதித்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவது தொடர்பில் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்கியது.
‘ஒருவரது அடையாளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்தையும் மூடக்கூடிய எந்தவொரு ஆடையையும் பொது இடங்களில் அணியமுடியாது. முழுமுகம் என்பது ஒருவரது காதுகள் உள்ளிட்ட முழு முகத்தையும் குறிப்பதாக அமையும். பொது இடம் எனக்குறிப்பிடுவது பொதுவீதிகள், கட்டடங்கள், அடைக்கப்பட்ட அல்லது திறந்த வெளிகள், வாகனங்கள் அல்லது ஏனைய போக்குவரத்துச் சாதனங்களைக் குறிப்பதாக அமையும். பொதுவீதிகள் என்பது வீதிகளுடன் தொடர்புபடும் பொதுப்பாலத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடைபாதைகள், வாய்க்கால், ஏரிக்கரை, சாக்கடை என்பவற்றையும் உள்ளடக்கும்’ என்று ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் தெரிவித்தது.
‘காதுகள் வெளித்தெரிய வேண்டும்’ என்ற வர்த்தமானி அறிவித்தல் பெண்களின் ஹிஜாபுக்கும் தடையாக அமைந்தது. இதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து அரசாங்க வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். முகத்தை மூடி ஆடை அணிவதற்கான தடையினை வரவேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளும் அரசியல் தலைமைகளும் காதுகளை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.
இதேவேளை நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட வில்லை. நிகாப் மற்றும் புர்கா அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ‘முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன. முழுமையாக முகத்தை மறைத்தல் என்பது காதுகளையும் சேர்த்து மறைப்பதையே குறிப்பிடுகிறது. எனினும் இது ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளதாக அர்த்தப்படாது. பெண்கள் ஹிஜாப் அணியமுடியும். புர்கா மற்றும் நிகாப் என்பனவே அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
என்றாலும் முஸ்லிம் சமூகம் வர்த்தமானி அறிவித்தலில் திருத்தத்தையே வேண்டி நின்றது. இதனையடுத்து ஜனாதிபதியினால் கடந்த ஏப்ரல் மாதம் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு தெரிவிக்கிறது.
‘ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிமணிகள் ஒருவரை அடையாளம் காண ஏதேனும் வகையில், சிரமமாக்கும் வகையில் முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கைப் பிரஜையால் அணியப்படலாகாது. இவ்வாறு அணிபவர்கள் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஒருவரை அடையாளம் காண காதுகள் உட்பட முழுமுகத்தையும் மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்றவேண்டி நேரிடும். இங்கு முழுமுகம் எனக் குறிப்பிடப்படுவது நெற்றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடி வரை என்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும்.
முகத்தை மூடி ஆடையணியக் கூடாது என நாட்டில் சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் எமது பெண்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும். நீண்ட காலமாக முகத்திரை அதாவது புர்கா, நிகாப் அணிந்து பழக்கப்பட்டு விட்ட எமது பெண்களுக்கு அதனைக் களைவதில் அசௌகரியங்கள் ஏற்படலாம். எம்மால் அசௌகரியங்களுக்கு உள்ளாக முடியாது என்று ஆடை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சட்ட வரையறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரையறைகளை மீறி எமது பெண்கள் ஆடை அணிவதால் புர்கா மற்றும் நிகாப் அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு வருகிறார்கள். இவ்வாறானவர்களில் ஓரிருவர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிலாபத்தில் கைது – விளக்கமறியல்
சிலாபத்தில் முகத்தை மறைத்து ஆடையணிந்து கொண்டு சென்றதாக புகார் செய்யப்பட்ட பெண் ஒருவர் அவரது வீட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிலாபம் – ஜயபிம என்ற கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா சில்மியா (25) என்பவரே அவர். அவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கவலையுடன் எம்மிடம் தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊரில் எனது நண்பியொருவரின் வாப்பாவின் ஜனாஸாவுக்கு அவரது வீட்டுக்கு காலை 7.30 மணிக்கு எனது கணவர் மொஹமட் சாதீக் (24) உடன் சென்றேன். எங்களுக்கு மூன்று மாத குழந்தையொன்றும் இருக்கிறது. குழந்தையையும் என்னுடன் கொண்டு சென்றேன். காலை 7.30 மணிக்கு ஜனாஸா வீட்டுக்குச் சென்று 8.00 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து விட்டேன். நான் முகத்தை மூடி ஆடை அணிந்தே சென்றேன்.
8.30 மணியளவில் ஊர் பள்ளிவாசல் என்று கூறிக்கொண்டு சுமார் ஐந்து, ஆறுபேர் வீட்டுக்கு வந்தார்கள். வீட்டில் எனது கணவரும் இருந்தார். வந்தவர்கள் எனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஏன் முகத்தை மூடி அழைத்துச் சென்றீர்கள். உங்கள் மீது முறைப்பாடு இருக்கிறது. ஏன் பிரச்சினைக்கு ஆளாகிறீர்கள். உங்களால் எங்களுக்குப் பிரச்சினை என்றார்கள். வாக்குவாதப்பட்டு எனது கணவரை தாக்குவதற்கும் முயற்சித்தார்கள். அவர்கள் நாட்டு நடப்பு தெரியாத எங்களுக்கு விளக்கியிருக்க வேண்டும். நல்லபடி பேசியிருக்க வேண்டும். பின்பு அவர்கள் போய்விட்டார்கள்.
9 மணியளவில் பொலிஸார் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது வீட்டில் நான் முகத்தை மூடி ஆடை அணிந்திருக்கவில்லை. சாதாரண உடையில் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தேன். பொலிஸார் நான் முகத்தை மூடி ஆடை அணிவதாகவும் என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் கூறி என்னையும் கணவரையும் அழைத்துச்சென்றார்கள். நான் மூன்று மாத குழந்தையையும் எடுத்துக்கொண்டு சென்றேன்.
எங்கள் மீது யாரோ புகார் செய்தே பொலிஸார் எங்களைக் கைது செய்தார்கள். வீட்டிலிருந்த கறைபடிந்த கத்தியொன்றையும் எடுத்துக்கொண்டார்கள். எங்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள். நீதிவான் எங்களை ஒரு கிழமை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். நான் எனது மூன்று மாத குழந்தையுடனேயே விளக்கமறியலில் இருந்தேன். விளக்கமறியலில் என்னை ஏசினார்கள்.
கறைபடிந்த கத்தியொன்று வீட்டில் இருந்ததற்காக எனது கணவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நீர்கொழும்பு சிறையிலே வைக்கப்பட்டேன். ஒரு வாரத்தில் நான் பிணையில் விடுதலை செய்யப்பட்டேன். ஆனால் எனது கணவர் விடுதலை செய்யப்படவில்லை. அவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் ருனைஸ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் சாதீக்கின் மைத்துனர் மொஹமட் ருனைஸ் சம்பவம் தொடர்பில் விடிவெள்ளிக்கு விளக்கமளித்தார். நான் புத்தளத்தைச் சேர்ந்தவன். மொஹமட் சாதீக் எனது மனைவியின் சகோதரர். எனது மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டமை எனது மனைவியின் தங்கையினது கணவர் மூலமே அறிந்து கொண்டோம். அவர் கட்டாரிலிருந்து பேஸ்புக்கில் விபரம் அறிந்ததாக எங்களுக்கு அறிவித்தார். அவர் கட்டாரிலே வேலை செய்கிறார். அவர் அறிவித்ததன் பின்பே நாங்கள் சிலாபத்துக்குச் சென்றோம். அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் முகத்தை மூடி ஆடை அணிந்ததற்காகவும், வீட்டில் கறைபடிந்த கத்தியொன்று இருந்ததற்காகவும் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள் என்றார்.
மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா
விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருக்கும் மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா விடிவெள்ளிக்கு கருத்து வழங்குகையில்,
‘மொஹமட் சாதீக் எனது சகோதரர். நாங்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள். எனது சகோதரர் 2 வருடங்கள் கட்டாரில் வேலை செய்து நாடு திரும்பியதன் பின்பே திருமணம் செய்தார். இப்போது கடல் தொழில் மற்றும் கூலிவேலை செய்து வருகிறார். எனது சகோதரரும் அவரது மனைவியும் அப்பாவிகள். முகத்தை மூடி ஆடை அணிவதன் பாரதூரத்தை அவள் அறியாதவள். அத்தோடு கறைபடிந்த கத்தியொன்றுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். எனது சகோதரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.
கற்பிட்டியில் கைது – விளக்கமறியல்
முகத்தை மூடி ஆடையணிவது சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் கற்பிட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முகத்தை மறைத்து ஆடையணிந்து சென்றபோது அவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 17 வயது நிரம்பிய அந்தப் பெண் கர்ப்பிணியாவார்.
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் அனுப்புவதற்காக அவர் புகைப்பட நிலையத்துக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள சென்றபோது வீதியில் கடமையிலிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண் கற்பிட்டி பொலிஸாரினால் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது புத்தளம் மேலதிக நீதிவான் அவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவசர கால சட்டத்தின் கீழ் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புள்ளவரா என்பது தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகவும், முன்னாள் குற்றச் செயல்கள் ஏதும் இவருக்கெதிராக இருப்பதா என்பது தொடர்பில் அறிக்கை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் 2120/5, 2121/1 மற்றும் 2123/4 என்பவற்றின் பிரகாரம் இது தண்டனைக்குரிய குற்றம் எனவும் பொலிஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் விவகாரங்களில் சட்ட ஆலோசனைகளை வழங்கிவரும் சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில்,
முகத்தை மறைத்து ஆடை அணிவது எமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறிச்செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். முஸ்லிம்களுக்கு சவால்கள் நிறைந்த இக்கால கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற சிரமங்களுக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது.
முகத்தை மூடுவதாயின் முஸ்லிம் பெண்களாகிய நீங்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவீர்கள். இதனால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுவீர்கள். முகத்திரை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் முகத்தை மூடி ஆடை அணிந்தால் நீங்கள் மஹ்ரம் இல்லாது சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
பெண் என்ற வகையில் முஸ்லிம் பெண்களின் சிரமங்களை நான் அறிகிறேன். 10–15 வருடங்களாக முகத்தை மூடி ஆடை அணிந்து விட்டு திடீரென அமுலுக்கு வந்த வர்த்தமானி அறிவித்தலையடுத்து எப்படி முகத்தை திறந்து கொண்டு செல்வது. இது மிகவும் சிரமமான விடயம் தான். என்றாலும் முகத்திரை அணிந்து கைது செய்யப்பட்டால் கண்ணீருடனே சிறையில் இருக்க வேண்டும்’ என்றார்.
அவதானம் தேவை
முஸ்லிம் சமூகம் அவதானம் மிக்க ஒரு காலகட்டத்தை அடைந்திருக்கிறது. எமக்கெதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் என்றாலே ஏனைய இனத்தினர் சந்தேகக்கண் கொண்டு பார்க்குமளவுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகளால் நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் எமக்கு விட்டுச் சென்றுள்ள எச்சங்கள் இவை.
அரபுக் கல்லூரிகள், அரபு மத்ரஸாக்கள் கல்வியமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடப் போகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக எமது ஆடைகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை காலம் முஸ்லிம் பெண்கள் தாம் நினைத்தவாறெல்லாம் ஆடை அணிந்தார்கள். ஹிஜாப், நிகாப், புர்கா என்று பல வடிவிலான ஆடைகள் அவை. அவற்றுக்கு எந்தத் தடைகளும் இருக்கவில்லை.
புர்கா ஆடை அணிந்து சென்ற எமது பெண்களை பெரும்பான்மையினரில் சிலர் ‘கோனி பில்லாக்கள்’ என்று அழைத்தார்கள். அன்று எந்த எதிர்ப்புகள் எழுந்தாலும் எமது பெண்கள் அச்சம் கொள்ளவில்லை. இன்று நிலைமை தலைகீழாக மாற்றம் பெற்றுவிட்டது.
இன்று புர்கா, நிகாப் அணிவதற்கே சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காதுகளை மூடி அணியும் ஹிஜாபுக்கும், அபாயாவுக்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஹிஜாப் மாத்திரமல்ல அபாயாவுக்கும் கூட பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும், அரச நிறுவனங்களிலும் தடைகள் ஏற்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். எனவே அரசு முஸ்லிம்களின் ஆடை விவகாரத்தில் நாட்டு மக்களுக்கும், பாடசாலைகளுக்கும், அரச நிறுவனங்களுக்கும் வரைபடங்களுடன் தெளிவுகளை வழங்க வேண்டும். விஷேட சுற்று நிருபங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதேவேளை முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் அணிவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவைகள் நாட்டில் சட்ட
ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளன. சட்டத்தை மீறினால் நாம் நிச்சயம் தண்டிக்கப்படுவோம்.
சிலாபத்திலும், கற்பிட்டியிலும் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எமக்குப் பாடமாக அமைய வேண்டும். சிலாபத்தில் 25 வயதான இளம்பெண் ஒருவர் முகத்தை மூடி ஆடை அணிந்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒருவார காலத்தின் பின்பு வெளியில் வந்துள்ளார். தனது 3 மாத காலமேயான குழந்தையுடனே அவர் சிறையில் இருக்க வேண்டியேற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் அவர்மீது கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
இதேபோன்று கற்பிட்டியில் நடந்துள்ள சம்பவமும் எமக்குப் பாடமாக அமைய வேண்டும். முகத்தை மூடி ஆடையணிந்து சென்ற குற்றத்துக்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 17 வயதுதான் ஆகிறது. அத்தோடு அவர் கர்ப்பிணிப்பெண். இளம் பெண்கள் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறான இளம் பெண்களுக்கு உறவினர்களும், அவர்களது கணவர்களும் தெளிவுகளை வழங்க வேண்டும். முகத்தை மூடி வெளியில் செல்வதைத் தடுக்க வேண்டும்.
மிகவும் பின்தங்கிய கிராமப்புறங் களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் நாட்டின் நிலைமைகளை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கலாம். அவர்களை உடன் தண்டிக்காது வழிகாட்ட வேண்டியது அந்தந்தப் பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் உலமாக்களின் கடமையாகும்.
vidivelli