ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து வர அனுமதியளிக்குக

மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

0 723

கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் 7 முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்டக்கிளை நேற்று கல்லூரி அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது.

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து கடமைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து ஆசிரியைகள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவிடம் முறையிட்டிருந்தனர். ஆளுநர் இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கண்டி பிரஜைகள் முன்னணி என்பவற்றின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடினார்.

மேலும், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், கண்டி வலயப் பணிப்பாளர் ஆகியோரையும் அழைத்து கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், மற்றும் சுற்று நிருபத்தைப் பின்பற்றி ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்வதற்கு அனுமதியளிக்குமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பாடசாலை நிர்வாகம் தொடர்ந்தும் அபாயாவுக்கு தடைவிதித்ததால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் கண்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டனர். இதனையடுத்தே நேற்று மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணையொன்று இடம்பெற்றது. இந்த விசாரணையையடுத்தே மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டி அந்தோனியர் மகளிர் கல்லூரியில் அபாயாவை அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

இநத விசாரணையில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியைகள், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லூரி அதிபர், மாகாண கல்வி அமைச்சின் உதவிப் பணிப்பாளர், பெற்றோர் சார்பில் 2 பிரதிநிதிகள், கண்டி பிரஜைகள் முன்னணியின் தலைவர், செயலாளர், போஷகர் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமுதினி விதானகே இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.