அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சகவாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன. 900 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்பு உடனடியாகவே நாட்டில் இனவன்முறைகள் வீரிட்டு எழும் என எதிர்பார்க்கப்பட்டது. தங்களது சுயநலத்துக்காக, நாடு பற்றி எரிய வேண்டுமென இனவாத குழுக்களும், சில அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்களும் காத்திருந்தார்கள். ஆனால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதற்குத் தடையாக இருந்தார். மக்களை பொறுமை காக்கச் செய்தார்.
ஆனால் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்று இரு வாரங்களின் பின்பு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. வன்செயல்களுக்கு இலக்கான முஸ்லிம் கிராமங்களையும், பள்ளிவாசல்களையும், வர்த்தக நிலையங்களையும் வெளிப்பிரதேசங்களிலிருந்து வந்த காடையர்களே உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
வன்முறைகள் இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் வன்முறைகளில் ஈடுபடுமாறு அரசியல்வாதிகளால் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கட்சி ரீதியான பிரதேச சபை உறுப்பினர்கள் இதன் பின்னணியில் இருந்துள்ளார்கள் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குருநாகல், சிலாபம், மினுவாங்கொடை வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு நெருக்கமான குழுவொன்று செயற்பட்டுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவின் கருத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. மினுவாங்கொடையில் 53 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. இவற்றில் 20 கடைகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகின. இத்தனை வன்செயல்களும் ஒரு சில மணித்தியாலங்களில் நடாத்தப்பட்டன. மினுவாங்கொடை நகரின் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்டவேளை நகரசபைத் தலைவரிடம் தீயணைப்பு இயந்திரம் கோரப்பட்ட போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததாகவும் பின்பு இராணுவம் தலையிட்டே தீயணைப்பு இயந்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் மஹிந்த அணியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
குருநாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் திட்டமிட்டதொன்று எனவும் இதன் பின்னணியில் இருந்தவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
வன்செயல்கள் இடம்பெற்ற போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர மற்றும் பிவிதுருஹெல உறுமய கட்சியின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மதுமாதவ அரவிந்த் என்போர் களத்தில் இருந்திருக்கிறார்கள். இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் பாரியளவில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வன்செயல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் வன்செயல்கள் தொடராதிருப்பதற்கு அரசு திட்டங்கள் வகுக்க வேண்டும்.
திட்டமிட்டு நடாத்தப்படும் இனவாதத் தாக்குதல்களின் பின்னணி பற்றி ஆராய்வதற்கு விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து சமூக ஒற்றுமைக்கான மன்றம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
வ்வேண்டுகோளை அரசு உதாசீனம் செய்யக்கூடாது. அளுத்கம, திகன, அம்பாறை, கிந்தோட்டை குருநாகல் மாவட்டம், சிலாபம், மினுவங்கொட என்பன திட்டமிடப்பட்ட சம்பவங்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நாட்டில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல அனைத்து இனங்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.
vidivelli