சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டோரை விடுதலை செய்யவும்
முஸ்லீம் எம்.பி.க்கள் பிரதமர் பொலிஸ் தரப்பிடம் கோரிக்கை
கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்பு சிறு, சிறு காரணங்களுக்காக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், பொலிஸ் தரப்பிடமும் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று முன்தினம் பிரதமருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்கிரமசிங்கவிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.
கலந்துரையாடலில் பங்குகொண்ட முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள சிறு, சிறு காரணங்களுக்கான அநாவசிய கைதுகள் தொடர்பில் விளக்கமளித்தனர். ஹசலக, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை பகுதிகளில் இடம்பெற்றுள்ள நியாயமற்ற கைதுகளை உதாரணங்களாகக் கூறினார்கள். இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குற்றங்கள் என்ன என்பதை ஆராய்ந்து விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்கள்.
இவ்வாறான கைதுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்கிரமசிங்க கைதுகளுடன் தொடர்புபட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவதாகத் தெரிவித்தார்.
சந்திப்பில் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டிராததால் பொலிஸ் மா அதிபருடன் தனியான கலந்துரையாடலொன்றினை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
சந்திப்பில் அமைச்சர்களாக ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் என்போர் கலந்துகொண்டிருந்தனர்.
vidivelli