முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல் திட்டமிட்டதொன்று
பின்னணியிலிருப்பவர்கள் கண்டறியப்படவேண்டும் என்கிறார் நளின்
குருநாகல் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொன்றாகும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பில் கண்டறியவேண்டும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் எமது முதலீடுகள் தடைப்படாமல் எமது வேலைத்திட்டங்களை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியுமாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் திருகோணமலையில் ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றில் எந்த தடையும் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் முதலீட்டாளர்கள் பின்வாங்கி செல்லாதவகையில் அவர்களை நாங்கள் பாதுகாத்திருக்கின்றோம். இது நாங்கள் அடைந்துகொண்ட வெற்றியாகும். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் சுற்றுலா பயணிகளின் வருகை உறுதிப்படுத்தப்படவேண்டும். அதற்கான நம்பிக்கையை நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம்.
மேலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று சில வாரங்களின் பின்னர் எனது குருநாகல் மாவட்டத்தின் கினியம தொகுதியில் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலை வன்மையாக கண்டிக்கின்றேன். அந்த பிரதேசத்தில் இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தது, அந்த பகுதியில் இருக்கும் குளத்தில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட செய்தியாகும்.
குறித்த குளத்தில் அவ்வாறு ஆயுதங்கள் இருப்பதா என கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். என்றாலும் அங்கு எந்தவொரு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. என்றாலும் அன்றைய தினம் பிற்பகல் வேளையில் குளத்தின் வெளிப்பிரதேசத்தில் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. கடற்படையினருக்கு கிடைக்காத துப்பாக்கி ரவைகள் பிரசித்தமான இடமொன்றில் கண்டுபிடிக்கப்படுவதென்றால் அதில் ஏதோ மர்மம் இருக்கவேண்டும்.
அத்துடன் இந்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடிப்படையாகக்கொண்டே அந்த பிரதேசத்தில் 4 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனால் அந்த கும்பல்களின் பின்னணியில் அரசியல் நடவடிக்கைகள் இருக்கவேண்டும். மிகவும் திட்டமிட்டே குருநாகல் மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. பயங்கரவாத தாக்குதலுடன் இனப்பிரச்சினை ஏற்படக்கூடாது என்று கர்தினால் மல்கம் ரஞ்ஜித் மேற்கொண்ட வழிகாட்டல், எமது பிரதேசத்தில் வைராக்கியம் தலைதூக்குவதை தடுக்க முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றேன்.
அத்துடன் எமது மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் சகோதரத்துவம் ஆரம்பகாலம் முதல் பேணப்பட்டு வருகின்றது. இந்த நல்லிணக்கத்தை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதனால் இந்த வன்முறையாளர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளில் அரசியல் செய்வதை விடுத்து நாடுதொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli