அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சித் தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பை மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ள நிலையில் பிரேரணை குறித்து நேற்று கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதுகுறித்து ஆராய நேற்று பிற்பகல் 3 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் கூடிய வேளையில் உடனடியாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபைக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் தாம் முன்வைத்த இந்த பிரேரணையின் உள்ள காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத காரணிகளாக உள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்த முதலில் பாராளுமன்ற தெரிவிக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் மூன்று வாரகாலம் விசாரணை நடத்தி அதன்பின்னர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதம் நடத்த ஒரு நாளை வழங்க முடியும் என சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய விமல், தினேஷ் எம்.பியினர் அரசாங்கம் தொடர்ந்தும் மோசமான நடந்துகொள்வதாக கூறியுள்ளனர். இந்த விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி எந்தக் காரணியும் கூறாது அமைதியாக இருந்துள்ளது.
இறுதியாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் விவாதிக்க எந்த தீர்மானமும் இல்லாது கட்சி தலைவர் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து நேற்று சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்ததுடன் பிரேரணையை அடுத்த வாரமே எடுத்துகொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்கவும் தயங்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.
-Vidivelli