எமது நாட்டில் இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றினைக் கொண்டதாகும். இக்கல்லூரிகள் இதுவரைகாலம் தனித் தனியான நிர்வாகங்களின் கீழ் இயங்கிவருகின்றன. இவற்றின் பாடத்திட்டத்திலும் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது.
இதுவரை காலம் சுதந்திரமாக இயங்கிவந்த அரபுக் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிய தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து சவால்கள் கிளம்பியுள்ளன. அரபுக்கல்லூரிகள் சிலவற்றில் தீவிரவாதக் கொள்கைகள் போதிக்கப்படுகின்றன என்ற சந்தேகம் மாற்று இனத்தவர் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. இதனாலேயே பிரதமர் ரணில விக்கிரமசிங்க அரபுக் கல்லூரிகள் விடயத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்தார். ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களை யடுத்து அரபுக்கல்லூரிகள் தொடர்பில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதால் அவற்றை சட்ட ரீதியான ஒரு கட்டமைப்புக்குள் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமை வேண்டிக் கொண்டார்.
அரபுக்கல்லூரிகளை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் சட்ட ரீதியாக அவசரமாக ஒருங்கிணைக்கப்படவேண்டியதன் அவசியத்தை பிரதமர் அமைச்சர் ஹலீமிடம் விளக்கினார். இதனையடுத்து அவர் விரைந்து செயற்பட்டார். இதற்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் மேலதிக பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் மற்றும் உலமாக்களும், புத்திஜீவிகளும் அடங்கியிருந்தனர். சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு கடந்த 6 ஆம் திகதி பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அரபுக் கல்லூரிகளை சட்ட வரையறைக்குள் உட்படுத்துவதற்கான சட்ட மூல வரைபு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடைபெற்று ஒரு மாதத்தில் அதாவது மே 21 ஆம் திகதி நேற்று அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவைப் பத்திரமாகச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரபுக்கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அலரி மாளிகையில் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளின் பேரிலும் பூரண சம்மதத்துடனும் இத்தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரபுக்கல்லூரிகள் விடயத்தில் சில வேலைத் திட்டங்களில் கல்வி அமைச்சும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்குவதை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்துள்ளார்கள். அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கினாலும் அவற்றின் பாடத்திட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் புத்திஜீவிகளிடமே வழங்கப்படவேண்டும்.
நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரபுக் கல்லூரிகளின் கடப்பாடாகும். அதனை இலக்காகக் கொண்டே அரபுக்கல்லூரிகள் இயங்கிவருகின்றன என்பதனை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இன்று நாட்டில் 317 அரபுக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றிலிருந்து வருடாந்தம் சுமார் 6000 க்கும் மேற்பட்ட உலமாக்கள் உருவாக்கப்படுகிறார்கள். இவர்களில் சுமார் 5 வீதமானோரே அரச தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்கிறார்கள். 10 வீதமானோர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்கிறார்கள். 5 வீதமானோர் பள்ளிவாசல்களில் பணிபுரிவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எஞ்சிய 80 வீதமானோர் தொழில் சந்தையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதால் இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அரபுக்கல்லூரிகளின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபுக்கல்லூரிகளுக்கு அமைச்சர் ஹலீம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அநேக அரபுக்கல்லூரிகள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக்கொள்வதாகவும் அந்நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என அறிய முடியாதுள்ளதெனவும் கூறியிருந்தார். அனைத்து அரபுக்கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அமைச்சரின் கருத்துக்கு சமூகத்திலிருந்து பலத்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
அரபுக்கல்லூரிகள் விடயத்தில் சில வேலைத்திட்டங்களில் கல்வி அமைச்சும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தனியான பிரிவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் செயற்படுமாக இருந்தால் வரவேற்கத்தக்கதாக அமையும்.
-Vidivelli