உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தற்கொலைதாரிகள் அனைவரினதும் அடையாளங்கள் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பிலான முழுமையான அறிக்கை நேற்று மாலை அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்டது. இதனூடாக பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளே இந்த தற்கொலை தாக்குதலை நடாத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
‘குறிப்பாக ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்தியவர் சஹ்ரான் ஹாஷிம் என்பவர் என நாம் பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்திருந்தோம். தற்போது டி.என்.ஏ. சோதனைகளிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் சஹ்ரான் உயிரிழக்கவில்லை என பொய்யான தகவல்களை பரப்பி மக்களை அச்சமடையச் செய்திருந்தன. எனினும் டி.என்.ஏ. சோதனையில் சஹ்ரான் உயிரிழந்துவிட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது’ என அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை மையப்படுத்தி பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவபிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந் நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்ப்ட்டது.
இந் நிலையில் இவை தொடர்பில் சி.ஐ.டி.இன் 15 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில், பல்வேறு வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் தற்கொலை குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் அதனை மேலும் உறுதி செய்ய அவர்கள் தொடர்பில் டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்க சி.ஐ.டி. தீர்மானித்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்ட்டன.
இந் நிலையிலேயே நேற்று மாலை அது தொடர்பிலான முழுமையான டி.என்.ஏ. அறிக்கை சி.ஐ.டி.க்கு அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக வழங்கப்பட்டது.
சாட்சிகளின் பிரகாரம் வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கு அமையவும் டி.என்.ஏ. சோதனைகள் பிரகாரமும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவலயத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்தியவர் இலக்கம் 121/3 சென்ட்ரல் வீதி, மட்டக்குளி எனும் முகவரியைக் கொண்ட அலாவுதீன் மொஹம்மட் முவாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பெற்றோரின் டி.என்.ஏ. மூலக் கூறுகளைப் பெற்று முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்வுகளில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தற்கொலைதாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சகோதரர்கள், சகோதரி சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதேவேளை நீர்கொழும்பு, கடான – கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்தியவர் வாழைச்சேனை, ஏ.எப்.சி. வீதியைச் சேர்ந்த அச்சு முஹம்மது மொஹம்மட் ஹஸ்துன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹஸ்தூனின் பெற்றோரின் டி.என்.ஏ. மூலக் கூறுகள் நீதிமன்ற அனுமதியுடன் பெறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் இவருக்கு உதவியவர்கள் மற்றும் அவரது குடும்ப பின்னணி குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவரது மனைவியே சி.ஐ.டியால் தேடப்பட்டு வந்த நிலையில், சாய்ந்தமருது, வொலிவோரியன் வீட்டுத்திட்டத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டோரில் அடங்கும் புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா எனும் பெண் என பொலிஸார் தெரிவித்தனர். .
அத்துடன் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர் மையவாடி வீதி, புதிய காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த மொஹம்மட் நசார் மொஹம்மர் அசாத் என உறுதி செய்யப்பட்டுள்ளார். இவரது தாயாரின் டி.என்.ஏ. மூலக் கூறுகளைப் பெற்று முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு – கிங்ஸ்பரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்தியவர், புதிய யோர்க் வீதி கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 ஆகிய முகவரிகளைக் கொண்ட மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக் என பொலிஸாரால் அடையாளம் கண்ட நிலையில், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் டி.என்.ஏ. மூலக் கூறுகளுடன் ஒப்பிட்டு செய்த பகுப்பாய்வில் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது மனைவியை சி.ஐ.டி. கைது செய்துள்ள நிலையில் அவர் கணவருக்கு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் உதவி ஒத்தாசை வழங்கினாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஷங்ரில்லா ஹோட்டலில் இரு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் பதிவாகின. அதிலேயே இந்த தற்கொலை தாக்குதல்களை வழி நடாத்தியதாக நம்பப்படும் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதி உயிரிழந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு குண்டுதாரி மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் என சி.ஐ.டி. அடையாளம் கண்டிருந்தது. குடைக்காரன் ஒழுங்கை, மொஹிடீன் பள்ளிவாசல் வீதி – காத்தான்குடி 3 எனும் முகவரியைக் கொண்ட சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மற்றும் அவர்களது 4 வயது மகள் ஆகியோர் சாய்ந்தமருது வீட்டில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது சி.ஐ.டி. பிடியில் உள்ளனர். அவர்களது டி.என்.ஏ. மூலக் கூறுகளையும் சஹ்ரானின் சகோதரியின் டி.என்.ஏ. கூறுகளையும் பெற்று சஹ்ரானின் தலைப்பகுதியில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒப்பீடு செய்தே பகுப்பாய்வில் குறித்த தற்கொலைதாரி சஹ்ரானே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஷங்ரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய மற்றையவர் தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி, மஹவில கார்டின் எனும் முகவரியைக் கொண்ட மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் என்பவராவார். இவரது சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடாத்தியிருந்தார்.
இது தொடர்பில் சி.ஐ.டி.யினர் இவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் இந்த சகோதரர்களின் தந்தையான மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் மற்றும் அவர்களது இரு சகோதரிகளைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்ஷாப்பின் மனைவியையும் சி.ஐ.டி கைது செய்துள்ளது. இந் நிலையில் இவ்விரு தற்கொலை குண்டுதாரிகளினதும் அடையாளம் அவர்களது தந்தையான மொஹம்மட் யூசுப் இப்ராஹீமின் டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒத்துப் போயுள்ளன. அதன்படி அவ்விருவரின் அடையாளங்களும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி, மஹவில கார்டினில் இடம்பெற்ற மூன்று பொலிசாரின் உயிர்களைப் பறித்த தற்கொலை தாக்குதலை ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவரான இல்ஹாம் அஹமட்டின் மனைவியான பாத்திமா ஜிப்ரியா நடாத்தியுள்ளதாக பொலிசார் அடையாளம் கண்டனர்.இதன்போது அவரது மூன்று பிள்ளைகளும் அங்கு உயிரிழந்துள்ளன. இவை அனைத்தும் டி.என்.ஏ. பகுப்பாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தெஹிவளை ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை வெலம்படை -கம்பளை மற்றும் லன்சியாஹேன வெல்லம்பிட்டி ஆகிய இரு முகவரிகளைக் கொன்ட அப்துல் லதீப் ஜெமீல் மொஹம்மட் நடாத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் தற்கொலைதாரியின் மனைவி மற்றும் இரு சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றது. அதன்படி குறித்த தற்கொலைதாரியின் மனைவி, பிள்ளைகளின் டி.என்.ஏ. மூலக் கூறுகளைப் பெற்று செய்த பகுப்பாய்வில் அவரது அடையாளமும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli