எம்.சீ.ரஸ்மின்
ஞாயிறு தாக்குதல் பொதுமக்களுக்கு மாத்திரமன்றி இராணுவத்தினருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாகவே அமைந்திருந்தது. இதேநிலைதான் ஊடகங்களுக்கும். இந்நிலையில் ஊடகங்கள் பயங்கவாதத் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளையும் நேர்த்தியாக அறிக்கையிடுதல் என்பது இயல்பில் சிரமமான விடயமே.
பொதுவான பார்வையில், இலங்கையில் ஊடகச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஊடகத் தொழில்வாண்மை மற்றும் முகாமைத்துவம் என்பன சிறியளவே வளர்ச்சி கண்டுள்ளன. தமது உள்ளடக்கம் மற்றும் அதன் தார்மீகம் தொடர்பில் வாகசகர்களுக்கோ சட்டத்திற்கே பொறுப்புக்கூற வேண்டிய தேவையும் ஊடகங்களுக்கு இல்லை. ஊடகக் கொள்கையாக்கம் கடந்த மூன்று தசாப்தங்களாக பாரிய மாற்றங்கள் எதனையும் சந்திக்கவில்லை. இணைய ஊடகங்களின் ஆதிக்கம் உலகளாவிய ரீதியல் அதிகம் வளச்சியடைந்து வரும் நிலையில் “ கிசு கிசு” அறிக்கைகள் சிங்கள ஊடகங்களை அதிகம் பாதித்துள்ளன. அந்தரங்கத்தை (Privacy) அறிக்கையிடுவது பற்றிய சட்டங்கள் நாட்டில் போதியனவாக இல்லை. அதிகமான ஊடக உரிமை சிலரது கரங்களில் மட்டுமே தங்கியுள்ளன. ஆய்வுகளின்படி, பெரும்பாலான ஊடகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. சில ஊடகங்கள் நட்டம் ஈட்டுவதையே இலக்காகக் கொண்டுள்ளன. வர்த்க மற்றும் அரசியல் சக்திகளே ஊடகங்களின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கின்றன. சில ஊடகங்கள் மாத்திரம் ஊடக வியாபாரத்தை சரிவரச் செய்து இலாபமீட்டுகின்றன. இத்தகைய பின்னணியில், இலங்கை ஊடகங்கள் நேர்த்தியான அறிக்கையிடலை எதிர்பார்ப்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.
இவ்வாறிருக்க, ஞாயிறு தாக்குதலின் பின்னர், ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மொதுவாகத் தலைதூக்கி வந்த ஊடகப் பயங்கரவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதை தெளிவாகக் காண முடிகின்றது. இது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, நடுநிலையாக சிந்திக்கின்ற சிங்களவர்கள் மத்தியிலும் அதிக அவதானத்தைப் பெற்று வருகின்றது. இவ்வாறான பின்புலத்தில், இலங்கை தொலைக்காட்சி ஊடகங்கள் அண்மைய பயங்கரவாதத் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்த தேடுதல் நடவடிக்கைகளையும் அறிக்கையிடும் முறை பற்றியும் அதனை முஸ்லிம் சமூகமும் “முஸ்லிம் தலைவர்களும்” எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பேச வேண்டியது கட்டாயமாகும்.
முன்னேற்றகரமான அறிக்கையிடல்
தொலைக்காட்சி ஊடகங்கள் பல அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெற்றுக் கொடுத்தன. சில அடிப்படையான ஊடக ஒழுக்கநெறிகளையும் பின்பற்ற முயன்றன. பிரதான பயங்கரவாதியாகக் கருதப்படும் சஹ்ரானின் குழந்தையின் முகத்தை பெரும்பாலான ஊடகங்கள் மறைத்தன. மற்றும் சில ஊடகங்கள் அவ்வாறு செய்யவில்லை. சஹ்ரானின் குழுவினரது வன்முறைக் கலந்துரையாடல் ஒன்றை சில ஊடகங்கள் ஒளிபரப்பவில்லை. சிலர் அதில் இடம்பெற்ற உரையாடலை தவிர்த்துக் கொண்டனர். சில ஊடகங்கள் உணர்ச்சியை அதிகம் தூண்டக்கூடிய சில காட்சிகளை மங்கலாகக் காட்டின. தாக்குதல்களைத் தொடர்ந்து உளவளப்படுத்தலுக்கான உரையாடல் நிகழ்ச்சிகளை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. வழமை நிலையை ஏற்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. எவ்வாறாயினும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தொலைக்காட்சி ஊடகங்களின் ஒட்டுமொத்த அறிக்கையிடலுடன் ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட சில முன்னேற்றகரமான கூறுகள் எந்தவகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை.
பொதுவான பார்வை
தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுவரை தொலைக்காட்சி ஊடகங்கள் தமது பிரதான பணி என்ன என்பதை அறிந்து கொள்வதில் குழம்பிப் போயுள்ளன. ஊடகங்களின் பிரதான பணி என்பது ஒருவகையில் அகவயப்பட்ட (subjective) விடயம்தான். எனினும், முரண்பாடு ஒன்றின் “திரைக்குப் பின்னாலுள்ள”, “மறைந்திருக்கின்ற” இயங்கு சக்தி என்ன? முரண்பாட்டுக்குப் பின்னாலுள்ள ஊக்கிகள் எவை? முரண்பாட்டில் அக்கறை கொண்ட தரப்பினர் யார்? என்பதை அறிந்து அறிக்கையிடலை மேற்கொள்வது ஊடகங்களின் பிரதான பணியாகும்.
பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் தேடுதல் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்தன. இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க குறிப்பிட்டது போன்று துப்பாக்கி, கத்தி மற்றுமுண்டான பொருட்களை இராணுவத்தினர் கைப்பற்றியபோது அவற்றை ஒரு நாடகக் கதையாக ஒளிபரப்பி வந்தன. “பந்துக்குப் பந்து வர்ணனை” போல தாக்குதல்களையும் தேடுதல்களையும் பரபரப்பாக ஒளிபரப்பி பீதி, கோபம், வெறுப்பு, பதற்றம், சந்தோசம், நிச்சயமற்ற நிலை என்பனவற்றை அள்ளிக்கொட்டின.
தேடுதல் நடவடிக்கைகளின்போது இராணுவத்தினருடன் இணைந்து களத்தில் குதித்த பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களின் “தனிப்பட்ட வாழ்க்கையை” காட்சிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடந்து கொண்டன. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சில முஸ்லிம் அமைச்சர்கள் இதுபற்றிய எதிர்ப்பினை இரண்டு வாரங்களின் பின்னரே வெளியிட்டனர். அப்போது, ஊடகப் பயங்கரவாதம் என்பது பாரிய அழிவை ஏற்படுத்திவிட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம்கள் தொடர்பான மிகத் தவறான பார்வையை தோற்றுவித்து விட்டன.
சந்தேக நபர்கள் பற்றிய செய்திகள்
அநேகமான தொலைக்காட்சி ஊடகங்கள் சந்தேக நபர்கள் கைதான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் இனம், சமயம் அல்லது மற்றும் அடையாளங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்தின. பல சந்தேக நபர்கள் குற்றவாளிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டப்பட்டனர். பயங்கரவாதிகளாக அடையாளங் காணப்பட்ட நபர்களின் குடும்பங்களின் மீது பெரும்பாலான தமிழ், சிங்கள தொலைக்காட்சிகளின் கவனம் அளவு தாண்டியதாகக் காணப்பட்டது. பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் “சந்தேகத்திற்கு இடமின்றி” ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்கின்ற உறுதிப்பாடு பல அறிக்கையிடல்களில் வெளிவந்தன. சந்தேக நபர்களை குற்றவாளிகளாக உறுதிப்படுத்திக் காட்டுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அத்தனை ஊடகங்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளாக வெளிவரும் பட்சத்தில் அதே அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்தி வெளியிட வேண்டும். அவ்வாறு செய்தாலும் பொறுப்பற்ற ஊடக அறிக்கையிடுதலால் ஏற்பட்ட களங்கம், அவமானம், அச்சம் என்பனவற்றை ஊடகங்கள் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.
பறவாதி அறிக்கையிடல்
தமக்குக் கிடைக்கும் தகவலை அல்லது தாம் கண்டதை எந்தவித உறுதிப்படுத்தலும் இல்லாமல் விழுந்தடித்துக்கொண்டு அவசரத்தில்- முந்திக்கொண்டு செய்தி வழங்குவதையே இதுகுறிக்கின்றது. ஒரு பெண் சந்தேக நபரின் பெயருடன் வேறு ஒருவருக்கு சொந்தமான புகைப்படம் காட்டப்படடது, மிகப் பிரபலமான ஆங்கில நாளிதழ் ஒன்று தனது முன்பக்க ‘கிசுகிசுவை’ அடுத்த நாளே திருப்பி, திருத்திக் கொண்டது. சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தாக்குதலில் 11 இராணுவ அதிகாரிகள் பலியானதாக ஒரு செய்தி வெளியானது. பின்னர் அதனை தவறான செய்தி என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மறுதலித்தார். அமைச்சர் தயாசிரி ஜயசேகர NTJ க்கு சொந்தமான 400 பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் கலாசார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார். பின்னர் அதுவும் மறுதலிக்கப்பட்டது. இவை யாவும் ஊடகங்கள் பறவாதி நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
பரபரப்புச் செய்தி
பரபரப்புச் செய்தி (Sensational News) என்பது வெறுமனே உணர்ச்சியைத் தூண்டி நுகர்வோரின் எண்ணிக்கையைப் பெருக்கி; வர்த்தக விளம்பரத்தை உயர்த்தும் நோக்கில் செய்தியை வழங்குவதாகும். பல தொலைக்காட்சி ஊடகங்கள் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பான தற்கொலைக் குண்டுதாரிகளின் சீசீரிவி காணொலிகளை ஓர் உணர்ச்சியூட்டும் கதையாகக் காட்டின. சிறிய கத்திகள், மடிக்கணினிகள், பொதுவாகக் காணக்கிடைக்கும் வாள்கள் என்பனவற்றையும் ஒருவித அதீத பரபரப்புடன் காட்டினர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்னவென்றே தெரியாமல் அவற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அவற்றை அருகில் எடுத்துக்காட்டினர். வைத்தியசாலைகளில் அல்லலுறும் பாதிக்கப்பட்டவர்களதும் அவர்களது உறவினர்களதும் துயரப்பட்ட முகங்களையும் கண்ணீரையும் மிக நெருங்கிய காட்சிகளில் வெளிப்படுத்தினர். இத்தகைய பரபரப்புக் காட்சிகளை இடைவெளி நிரப்பும் செய்திகளாக மறுபடி மறுபடி காட்டப்பட்டன.
முஸ்லிம்களை நோக்கி நகரும் ஊடகப் பயங்கரவாதம்
இத்தனைக்கும் மத்தியில் மெதுவாகத் தலைதூக்கும் ஊடகப் பயங்கரவாதம் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. பெரும்பாலான தொலைக்காட்சி செய்திகளும் அறிக்கையிடலும் நடந்த தாக்குதலுக்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் முஸ்லிம்களின் தலையில் சுமத்த முயல்கின்றன. சில ஊடகங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளை இலக்குவைத்து அவர்களைப் பழிதீர்க்க முற்படுகின்றன. கூற்றுக்கள், நேர்காணல்கள் மற்றும் நிகழ்வுகளில் முஸ்லிம் சமூகத்தை பழி சொல்வதாக அமையும் காட்சிகளைத் தெரிவு செய்து ஒளிபரப்புகின்றன. தாக்குதலுக்குப் பின்னால் இயங்கும் மேற்குலக சக்திகளின் மூலோபாயங்களை அசட்டை செய்து பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் போஷித்து வைத்திருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
தொலைக்காட்சி ஊடக அறிக்கையிடல்களை மிக நெருக்கமாக அவதானிக்கும்போது “முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த, முஸ்லிம் பள்ளிக்கு அருகில், முஸ்லிம் ஜும்ஆ பள்ளிக்கு அருகில், முஸ்லிம் நபர் ஒருவர், முஸ்லிம் கிராமத்தில்” போன்ற சொற்களுக்குச் சமமான சிங்களச் சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி குறிப்பாக, சிங்களப் பெரும்பான்மை மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் செயலை ஊடகங்கள் செய்து வருகின்றன.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்ட ஹிரு டீவியின் உரையாடல் நிகழ்ச்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் எவ்வாறு இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும். முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் “உங்களுக்கு வெட்கமில்லையா?” என்று கேட்ட ஊடகவியலாளர் இதே கேள்வியை பிரதமரிடமோ, ஜனாதிபதியிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ கேட்டிருக்க வேண்டும். அல்லது அமைச்சர் ரிசாட் இதேகேள்வியை மேற்சொன்னவர்களிடம் கேட்டுவிட்டு வாருங்கள் நான் பதில் சொல்கின்றேன் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
இதேநேரம் கிராமங்களில் கண்டுபிடிக்கப்படும் வாள்கள் தொடர்பில் சிங்கள ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. அதிகளவிலான வாள்கள் ஏன் பள்ளிவாசல்களில் அல்லது பள்ளிவாசலைச்சூழ மற்றும் முஸ்லிம் கிராமங்களில் காணக்கிடக்கின்றன என்பதை விளங்கப்படுத்தச் சென்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் சமூக முன்னெடுப்புகளிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளார்கள்.
அமைச்சர் ஹலீம் ஊடகங்களுக்கு வழங்கிய அசட்டைத் தனமான பதில் சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்.எம். அமீன் தெரிவித்த கருத்து முழுமையாக திரிபுப்படுத்தப்பட்டு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன. ஜனாதிபதிக்கு எமது பெண்களின் உடைகள் தொடர்பான சட்டங்களையும் நிபந்தனைகளையும் முன்வைக்க முடியாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர் சொன்ன கருத்துக்களை சில சிங்கள ஊடகங்கள் தூக்கிப்பிடிக்க முற்பட்டன.
இவற்றில் சரி, பிழை ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளோ, சமூக செயற்பாட்டாளர்களோ அல்லது சமயத் தலைவர்களோ பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்களை பீடித்துள்ள உளவியல் பீதியை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. தவறானவற்றை மாத்திரமே தேடித்திரியும் ஊடகங்களுக்கு முன்னால் அவதானமாக வார்த்தைகளைப் பயன்படுத்தாவிட்டால் அது இறுதியில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பதாகவே அமையும். இந்தநிலையில் பின்வரும் விடயங்கள் சாதாரணமானவையாக இருந்தாலும் அவற்றில் அக்கறை கொள்வது கட்டாயமாகும்.
ஊடகவியலாளர்கள் எத்தகைய கேள்விகளை கேட்கலாம் என்பது பற்றிய முன்னறிவுடன் செயற்பட்டு, அவற்றுக்கான தர்க்க ரீதியான பதில்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு ஊடகங்களைச் சந்திக்க வேண்டும். குறிப்பாக சமயத் தலைவர்கள் உபதேசம் செய்யும் களமாக ஊடகச் சந்திப்புக்களை எதிர்கொள்ள முடியாது. ஊட சந்திப்புகளுக்குச் செல்லும் சகலரும் தமக்கான பேசு குறிப்புகளை (Talking Points) எழுதி, சரிபார்த்து, உரியவர்களிடம் கொடுத்து கருத்துகளைப் பெற்றுக், கிரகித்து திருத்தமாக வெளிப்படுத்துவது கட்டாயமாகும். ஊடகசந்திப்புகளை அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளும் களமாக எடுத்துக் கொள்ள முடியாது.
முஸ்லிம் கவுன்சில் அல்லது வேறும் சிவில் அமைப்பு இத்தகைய அவசரகால நிலையல் முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய முறைபற்றி வழிகாட்டல் தொகுப்பு என்றை வெளியிடுவதும் அதுபற்றி உரியவர்களுக்கு அறிவுறுத்துவதும் பொருத்தமாகும்.
“நாம் தவறு செய்துவிட்டோம்” என வெறுமனே கூனிக்குறுக வேண்டிய அல்லது அழுது புலம்ப வேண்டிய தேவையில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஏன் இவ்வாறு வாழ்கின்றார்கள் என்பது வெறுமனே முஸ்லிம்களின் விருப்பத்தினால் மாத்திரம் ஏற்பட்ட ஒன்றல்ல என்பது உணரப்பட வேண்டும்.
அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த மணித்தியாலங்களை செலவழித்த சிங்கள, தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் கடந்த சில நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையை அறிக்கையிடவில்லை. மாறாக சட்டத்தைக் கையில் எடுக்கும் சில சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு அநீயிழைக்கப்பட்டதாகவே செய்திகள் வெளிவருகின்றன. இந்த இடத்தின் ஊடகக் கண்காணிப்பு மற்றும் ஊடக உள்ளடக்கம் தொடர்பிலான ஆவணப்படுத்தல் பொறிமுறை ஒன்றின் தேவையும் உள்ளது.
(கட்டுரையின் உள்ளடக்கம் கட்டுரையாசிரியரின் தனிப்பட கருத்துக்களையே குறித்து நிற்கின்றது)