கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் மக்கள் மீள்வதற்கு இனவாதிகள் இடமளிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் அவர்களுக்கு காரணமாய் அமைந்துவிட்டன. மீண்டும் நாட்டில் வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுவிட்டன.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாம் அனுமதிக்காத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்களின் வழிகாட்டல்களும் வேண்டுகோள்களும் கிறிஸ்தவ மக்களை சாந்தப்படுத்தியது. அமைதியை உருவாக்கியது. மக்களை அவர் பொறுமை கொள்ளச் செய்தார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலை குலையச் செய்வதற்கு சில இனவாத குழுக்களும் அரசியலுடன் பின்னணியில் இருந்தவர்களும் சந்தர்ப்பம் ஒன்றினை எதிர்பார்த்துக் காத்திருந்த சந்தர்ப்பத்திலே உயிர்த்த ஞாயிறு சம்பவம் யாரும் எதிர்பாராத நிலையில் அரங்கேற்றப்பட்டது. இச்சம்பவம் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தங்கள் இலக்கினை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்திருந்த இனவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
சில தினங்களாக நீர்கொழும்பு, சிலாபம், குருநாகல் மாவட்டம் மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளினால் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலைங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன சேதங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 27 பள்ளிவாசல்கள் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களின் உடமைகள், புனித குர்ஆன் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரை காடையர்கள் வாளினால் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இதே வாளினையே பாதுகாப்பு படையினர் முஸ்லிம்களின் வீடுகளிலிருந்து சோதனை நடவடிக்கைகள் என்ற பெயரில் கைப்பற்றி வருவதுடன் வாள் உரிமையாளர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துமுள்ளனர்.
நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களின் ஆயிரக்கணக்கானவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரங்களை இழந்து இருள் சூழ்ந்த எதிர்காலத்தை முன்னோக்கியிருக்கிறார்கள். அடிப்படைவாதத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற அப்பாவி மக்கள் இவர்கள். பொதுபலசேனாவின் வார்த்தைகளில் கூறுவதென்றால் இவர்கள் சம்பிரதாய முஸ்லிம்கள்.
நாங்கள் இலங்கையிலுள்ள சம்பிரதாய முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. அடிப்படைவாத வஹாபிச முஸ்லிம்களையே எதிர்க்கிறோம். சம்பிரதாய முஸ்லிம்கள் எங்களது சகோதரர்கள் என்று கூறி வந்த அவர்கள் இன்று சம்பிரதாய முஸ்லிம்களை அடித்து விரட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
நீர்கொழும்பு வன்முறைகள்
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நீர்கொழும்பு பகுதியிலே ஆரம்பமானது. கடந்த 5 ஆம் திகதி போருதொட்ட பலகத்துறை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சங்கங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே உருவான முறுகல் நிலையே நீர்கொழும்பு வன்செயல்களுக்குக் காரணமாகும்.
பலகத்துறையில் உல்லாச பயணிகள் வருகை தரும் பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை முஸ்லிம் முச்சக்கர வண்டி சங்கமே சட்ட ரீதியாகப் பதிவு செய்திருந்தது. இந்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்வதற்குச் சென்றபோது அத்தரிப்பிடம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்தே இரு தரப்பினருக்கும் முறுகல் நிலை உருவாகி அது வன்முறையாக மாறியுள்ளது.
பலகத்துறையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 7 கடைகள் சேதமாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இக்கடைகள் உல்லாசப் பிரயாணிகளுக்கு மாணிக்கக் கல், நகைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளாகும். இங்கு ஆரம்பமான வன்முறைகள் உடனடியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கும் பரவின. பெரியமுல்லையில் லாசரஸ் வீதி, செல்லகந்த வீதி, கல்கட்டுவ வீதி, சமகி மாவத்தை, தளுபத்த ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வீடுகள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. வீடுகளிலிருந்து பணம், நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசலும் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தெனியாவத்த அசனார் தக்கியா பள்ளிவாசலை உடைத்து உள் நுழைந்த காடையர்கள் அங்கு குர்ஆன் பிரதிகளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். நீர்கொழும்பு பகுதியில் 58 வீடுகளும் 10 முச்சக்கர வண்டிகளும் 6 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 41 முறைப்பாடுகள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் 20 முறைப்பாடுகள் கட்டான பொலிஸ் நிலையத்திலும் 12 முறைப்பாடுகள் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திலுமென 73 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரதேசத்துக்கு அன்றைய தினம் இரவு 7 மணி முதல் மறுநாள் 6 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்டது என்றாலும் இப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பாதுகாப்பு படையினர் கடமையில் இருந்தபோதே வன்முறையாளர்கள் எவ்வித தடைகளுமின்றி தங்களது இலக்கினை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்கள்.
இந்த வன்முறைகளுக்குக் காரணம் மதுபோதையே என பொலிஸ் விசாரணைகளின் பின்பு தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொலிஸாரின் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி வன்முறைகளுக்குக் காரணம் மதுபோதையே எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு வன்முறைகளை மதுவின் பக்கம் தள்ளிவிட்டு பொலிஸாரும், ஜனாதிபதியும் தங்களது பொறுப்புக்களிலிருந்தும் தவிர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே சிலாபத்தில் வன்முறைகள் ஆரம்பமாகின.
சிலாபம் வன்முறைகள்
சிலாபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றிய பதிவொன்றே அப்பகுதியில் வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளது. இனவாத நோக்கற்ற முகநூல் பதிவு பெரும்பான்மை இளைஞர்களால் திரிபுபடுத்தப்பட்டு முஸ்லிம்கள் அங்கு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளார். மூன்று பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் அன்றைய தினம் மதியம் முதல் மறுநாள் திங்கட்கிழமை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இங்கும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் வன்செயல்கள் தொடர்ந்ததாக அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளார்கள். சிலாபத்தில் மஸ்ஜிதுன் நூர், நூர் வீதி ஜும்ஆ பள்ளிவாசல், மலே பள்ளிவாசல் என்பன தாக்கப்பட்டுள்ளன.
சிலாபத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ‘Don’t laugh more 1 day u will cry’ என்று பதிவேற்றம் செய்திருந்தார். ஆங்கிலத்திலான முகநூல் பதிவேற்றத்தினை தவறாக விளங்கிக்கொண்ட குழுவொன்றே குழப்பம் விளைவித்து வன்முறைகளில் இறங்கியுள்ளது.
‘அளவுக்கதிகமாக சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டும்’ என்ற முகநூல் பதிவினை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் ‘இன்று மட்டும் தான் நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்கிறது’ என பதிவிடப்பட்டுள்ளதாக எண்ணி அதன் உண்மைத் தன்மையை கேட்டு சம்பந்தப்பட்ட வர்த்தகரின் கடைக்கும், பொலிஸுக்கும் சென்று வாதிட்டதினையடுத்தே பிரச்சினை உருவாகியிருக்கிறது. வர்த்தகர் பெரும்பான்மை இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் ஆரம்பமான முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நீர்கொழும்புடன் அமைதியடையவில்லை. அவை சிலாபத்தை நோக்கி வந்து அங்கும் அமைதியடையவில்லை. மறுதினம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வடமேல் மாகாணமெங்கும் பரவியது. வடமேல் மாகாணத்தில் நகரங்களில் மாத்திரமல்ல கிராமங்கள் தோறும் வியாபித்தது.
முகநூல் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்த வர்த்தகர் ஏ.எச்.மொஹமட் ஹஸ்வர் (35) சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 12 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மறுதினம் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண வன்முறைகள்
சிலாபத்தில் கடந்த 12 ஆம் திகதி முகநூல் பதிவொன்றினைக் காரணமாகக் கொண்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைகள் அன்றைய தினமே குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியவை நோக்கி நகர்ந்து 13 ஆம் திகதி திங்கட்கிழமை வடமேல் மாகாணத்தின் பல முஸ்லிம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பரவின.
குறிப்பாக குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டி, நிக்கவரட்டிய, ஹெட்டிபொல, வீரபொக்குன, ஹொரம்பாவ, பண்டாரகொஸ்வத்த, சுனந்தபுர, நாகொல்லாகொட, தோரகொட்டுவ பகுதிகளில் பள்ளிவாசல்களும், வீடுகளும் தாக்கப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டன. கினியம, அனுக்கன, கொட்டம்பபிட்டிய, பூவெல்ல, ஹெட்டிபொல, தோராகொட்டுவ உள்ளிட்ட கிராமங்களிலே அதிகளவு சேதங்கள் பதிவாகியுள்ளன.
சுமார் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. அனுக்கன கிராமத்தைத் தாக்கவந்த காடையர்களிடமிருந்து தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் வயல்வெளிகளிலும், காடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று வியாக்கிழமை வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்டது.
கினியம பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளன. கினியம ஆயிஷா பள்ளிவாசல் வாசலை உடைத்து உட்புகுந்த காடையர்கள் குர்ஆன் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளதுடன் பள்ளிவாசலை சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையிலேயே தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், பாதுகாப்புப் பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேச மக்களும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.
கினியம குளத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கும் முஸ்லிம் தீவிரவாதத்துக்கும் தொடர்பிருக்கிறது எனத் தெரிவித்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
கினியம குளம், சம்பவம் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கு எதுவித பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என பாதுகாப்பு பிரிவு தெரிவித்திருந்த நிலையிலே இந்த வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிலாபம், கொஸ்வத்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொட்டாரமுல்லையில் இடம்பெற்ற வன்செயல்களின் போது 4 பிள்ளைகளின் தந்தையொருவர் வாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொட்டாரமுல்லையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் (45) என்பவரே குரூரமாக கொலை செய்யப்பட்டவர். இவர் தச்சு வேலைத்தளம் ஒன்றின் சொந்தக்காரர். இவரிடம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஐவர் தொழில் செய்து வருகிறார்கள். அவர் அப்பகுதியில் தச்சு வேலையில் பிரபல்யம் பெற்றிருந்ததால் அப்பகுதியிலுள்ள ஏனைய தச்சுத் தொழில் செய்பவர்கள் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவி, பிள்ளைகள் முன்னிலையிலே இவர் தாக்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் தனது தந்தையை அடிக்க வேண்டாம், தாக்க வேண்டாம் எனக் கதறியழுத நிலையிலே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இவர் அப்பகுதி பெரும்பான்மை இனத்தவருடன் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த போதே இந்த அனர்த்தங்கள் நடந்தேறியுள்ளன. இப்பகுதியில் 25 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. 40 க்கும் மேற்பட்ட கும்பலொன்றே பௌஸுல் அமீரைத் தாக்கியுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் வன்முறைகளை நடாத்தியவர்கள் கற்கள், பொல்லுகள், இரும்புக்கம்பிகள், பெற்றோல் கலன்கள், பெற்றோல் குண்டுகள் மற்றும் வாள்களைக் கொண்டு வந்தே தாக்குதல் நடாத்தியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹெட்டிபொல, கொட்டம்பிட்டியில் ஜமாலியா அரபுக்கல்லூரியும் இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த 14 ஆம் திகதி குளியாப்பிட்டியில் இயங்கி வந்த காதிநீதிமன்றக் கட்டடம் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. ஹொரம்பாவ நகரத்தில் அமைந்துள்ள காதிநீதிமன்றக் கட்டடமே தாக்கப்பட்டு ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் 23 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிவாசல்களுக்கான சேதங்கள் தலா ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 13 இலட்சத்துக்கு உட்பட்டவை எனவும் தக்கியாக்களின் சேதங்கள் தலா 5 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை வன்முறைகள்
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மினுவாங்கொடை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி இரவு இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள 41 கடைகளில் 12 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மினுவாங்கொடை வல்லபானயில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பஸ்டா (Pasta) தொழிற்சாலை தீயிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
டயமன்ட் என்ற பெயரிலான இந்தத் தொழிற்சாலைக்கு 700 பில்லியன் சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காடையர்கள் தொழிற்சாலைக்குத் தீயிட்டபோது அங்கு கடமையிலிருந்த 7 ஊழியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியிருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
நோன்பு துறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிற்பகல் 6.15 மணியளவிலே மினுவாங்கொடையில் முதல் தாக்குதல் ஆரம்பமானது. முதலில் பவுஸ் ஹோட்டலே தாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே வன்முறைகள் நகரெங்கும் பரவியுள்ளன. அநேகமானோர் ஹெல்மட் அணிந்து கொண்டு வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்த பின்பும் தாக்குதல்கள் தொடர்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்களிலும் 5 பஸ்களிலும் காடையர்கள் மினுவாங்கொடை நகருக்கு வருகை தந்துள்ளனர்.
அநேகர் வெளியிலிருந்து வந்தவர்கள் என பாதிக்கப்பட்ட மக்களும் வர்த்தகர்களும் தெரிவிக்கிறார்கள்.
மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. மினுவாங்கொடை நகர் மற்றும் அயல் பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கைதுகள்
78 பேர் கைதுவடமேல் மாகாணத்தின் குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டி மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளையடுத்து 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல், நிக்கவெரட்டிய, சிலாபம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் வலயங்களில் இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மஹசொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவும் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணம் மினுவாங்கொடை மற்றும் சில பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு சில அமைப்புகள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்துள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் சட்டத்தின் கீழும் அவசர கால சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இம்மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பொலிஸார் மற்றும் முப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு வன்முறைகளுடன் தொடர்புடைய குழு கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கமைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வன்முறையாளர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படியும் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அரசாங்கத்தையும் பாதுகாப்புப் பிரிவினரையும் கோரியுள்ளது.
நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரபுக் கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் என்பனவற்றுக்கு உரிய நஷ்டஈடுகளை அரசு வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சகோதரர் பௌஸுல் அமீரின் குடும்பத்துக்கு தாமதமில்லாமல் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
vidivelli