நாட்டில் இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை தனியான சட்டத்திற்குள் ஒருங்கிணைப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இன்று அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டில் தனிப்பட்ட ரீதியில் இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்கள் தொடர்பில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவற்றை ஒரு கட்டமைப்புக்குள் அதற்கான ஒரு சட்டத்திற்குள் ஒருங்கிணைக்குமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் எம்எச்.ஏ. ஹலீமுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் வக்பு சபைத் தலைவர் அடங்கிய குழுவொன்று சட்ட மூலத்துக்கான வரைபொன்றினைத் தயாரித்து கடந்த 6 ஆம் திகதி அமைச்சர் ஹலீம் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த வரைபு வெளிநாடுகளில் தற்போது செயற்படும் சட்ட திட்டங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டது. இலங்கையின் பிரிவெனா கல்விச் சட்டத்தில் அடங்கியுள்ள கல்விக் கொள்கையும் உள்வாங்கப்பட்டது.
அரபுக் கல்லூரிகளையும் அரபு மத்ரஸாக்களையும வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வகையில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஏற்கனவே வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையிலேயே பிரதமரின் பணிப்பின்பேரில் புதிய தனியான சட்டமொன்று இயற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நாட்டில் 1669 குர்ஆன் மத்ரஸாக்களும் 317 அரபுக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
vidivelli