அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வந்து அவற்றின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கிழக்கின் ஷரீஆ பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நீண்டநேர கலந்துரையாடலின் பின்பு அவர்களின் ஆலோசனைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆசு மாரசிங்க, காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
நாட்டில் நிலைமை சுமுக நிலைக்குத் திரும்பியுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (இன்று) திறக்கப்படும். அதனால் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
கிழக்கின் ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய விசாரணைகளின் பின்பு தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கவினால் நேற்று பிரதமரிடம் தெளிவுபடுத்தப்பட்டது. அதன் பின்பு கிழக்கு ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில்
பிரதமர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
ஷரீஆ பல்கலைக்கழகத்துக்கு நாம் அனுமதி வழங்கமாட்டோம். அவ்வாறான அதிகாரம் எமக்கில்லை. எம்மால் பட்டம் வழங்கும் நிறுவனமாகவே அனுமதி வழங்க முடியும். இந்த நிறுவனம் ஷரீஆ பல்கலைக்கழகமாக இயங்கமுடியாது என்பதை சட்ட ரீதியாக அறிவிக்க வேண்டும். இதற்காக பல்கலைக்கழக சட்டத்தின் 9 (A) பிரிவில் திருத்தங்களைச் செய்ய வேண்டும். பங்களாதேஷ் சட்டத்துக்கு அமைய அவர்கள் இதனை தனியார் பல்கலைக் கழகமாகவே அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
சமயம், இனம் பற்றி கவனத்தில் கொள்ளப்படாது வேறு ஏற்றுக்கொள்ளப்படும் ரீதியில் மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக சட்டத்தில் 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த விடயமும் பல்கலைக்கழக நிர்வாக சபை மற்றும் அச்சபையின் தகைமைகள் அத்தோடு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் இது தொடர்பில் பாராளுமன்றத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஆலோசனைகளும் கவனத்திற் கொள்ளப்படும்.
அத்தோடு அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களின் கல்வி நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ் விடயத்தில் சில வேலைத்திட்டங்களில் கல்வி அமைச்சும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியேற்படும்.
குறிப்பிட்ட ஷரீஆ பல்கலைக்கழகம் மற்றும் அரபு மத்ரஸாக்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளை முன்வைத்தார்கள். அது தொடர்பில் கலந்துரையாடி நானும் அதற்கு அனுமதி வழங்கினேன்.
இன்று நாட்டின் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலைமைக்குத் திரும்பியுள்ளதால் பாடசாலைகள் நாளை (இன்று) திறக்கப்படும் அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க
கிழக்கு ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக ஆராய்வதற்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதிகாரிகளும் அங்கு சென்று கண்காணித்தோம். அதன் அடிப்படையில் அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிக்கையொன்றினைத் தயாரித்தோம்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையை நாம் 2017 ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்பித்தோம். உயர்கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த கமிட்டியின் அறிக்கை எமக்கு 2017 ஜூலையிலேயே கிடைத்தது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது பணிகளை ஆரம்பித்தோம்.
பேராசிரியர் ரங்திவெல தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த ஐவர் கொண்ட கமிட்டியின் அறிக்கையின்படி விண்ணப்பத்தை ஸ்ரீ லங்கா ஹிரா பவுண்டேசனே சமர்ப்பித்திருந்தது. ஆனால் பின்பு அது மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாவை அழைத்து அவரை பல தடவைகள் விசாரித்தோம். இந்த அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பூரண அறிக்கையை ஜூலை மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமாக அமையவேண்டும் என நாம் கோருகிறோம். இது மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக நிறுவப்பட வேண்டும் என நாம் பிரேரிக்கிறோம்.
vidivelli