சரியான நேரத்தில் சரியான முறையில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தால் இடம்பெற்ற தாக்குதல்களை முற்றாகத் தடுத்திருக்கலாம் என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை (மே–12) சிலாபத்தில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மினுவாங்கொடையில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பொலிஸாரிடம் முஸ்லிம் வர்த்தகர்கள் வேண்டிக்கொண்ட போதிலும் மினுவாங்கொடை மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களில் கலவரம் ஏற்படும் வரைக்கும் இராணுவத்தை தளத்துக்கு அனுப்பாமல் அதிகாரிகள் குருட்டுத் தனமாக செயற்பட்டதாக குறித்த வர்த்தகர் தெரிவித்தார்.
சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு சில இடங்களில் முப்படையினர் இருக்கும் போதே தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதுதான் இங்கு கேள்விக்குரியதும் வேதனைப்பட வேண்டியதுமான விடயமாகும்.
மினுவாங்கொடை பள்ளிவாசல் கூட இரண்டு முறை தாக்கப்பட்டிருக்கிறது. மினுவாங்கொடை நகரைத் தாக்குவதற்கு முன்னராக அங்கிருந்த மதுபானசாலை ஒன்றையே குண்டர்கள் உடைத்திருக்கிறார்கள். அதிலிருந்து மது போத்தல்களை அருந்தி தம்மை வெறியேற்றிய பின்னரே முஸ்லிம்களின் கடைகளை இலக்கு வைத்திருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்திய குழுவை தடுத்து நிறுத்துவது தவறவிடப்பட்டதற்கு பொலிஸார்தான் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மினுவாங்கொடையின் பிரபல உணவகமான பௌஸ் ஹோட்டலின் உரிமையாளர் ரி.ஐ. இஷாம் தெரிவித்தார். “பொலிஸார் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். தாக்குதல் குழுவை கலைக்க அவர்கள் மந்தமாகவே செயற்பட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.
விமான நிலைய வீதியில் உள்ள பௌஸ் ஹோட்டல் 1970 இல் இருந்து இயங்கிவருகிறது. விமான நிலையத்துக்கு செல்பவர்களில் அதிகமானவர்கள் இந்த உணவகத்தை அறிந்து வைத்திருப்பார்கள். மினுவாங்கொடையில் வெசாக் நிகழ்வுகளுக்கு உதவி செய்யும் முக்கியஸ்தர்களுள் ஒருவராக இந்த உணவகத்தின் உரிமையாளர் இருக்கிறார். இஷாம் தெரிவித்ததன்படி இந்த உணவகம் 2 முறைகள் தாக்கப்பட்டிருக்கின்றன.
“முதல் குழு தாக்கி விட்டுச் சென்றதன் பின்னர் சுமார் மாலை 6.15 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் குணசேகர பொலிஸாருடன் எமது உணவகத்துக்கு வந்து பாதிப்புக்களை பார்வையிட்டுச் சென்றார். நாங்கள் அவருடன் பேசும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவர் சென்று சில நிமிடங்களின் பின்னர் திடீரென உணவகத்தைத் தாக்கினார்கள். எமது உயிரையாவாது காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை” என நடந்த சம்பவத்தை இஷாம் விவரித்தார்.
மினுவாங்கொடை நகரிலுள்ள கடைகளில் உள்ள பெயர்ப் பலகைகளைப் பார்க்கும்போது “மொஹிதீன்” “பௌஸ்” போன்ற முஸ்லிம் கடைகள் சாம்பராகியும் “நிமாலி” “ஜயந்தி” போன்ற கடைகள் சேதமின்றியும் காணப்பட்டன.
இலங்கையின் சமூக ஒருமைப்பாடு தொடர்பாக எதிர்மறையான கதைகளே தெரிவிக்கப்படும் இந்தத் தருணத்தில் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இஷாம் மற்றும் பௌஸ் ஹோட்டலின் ஏனைய ஊழியர்களுக்கு சிங்கள குடும்பங்கள் தமது வீடுகளில் தஞ்சம் வழங்கியுள்ளமையானது இன்னும் இலங்கையில் சமாதானத்தையும் அன்பையும் விரும்பும் மக்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
“தாக்குதல் தாரிகள் அகன்ற பிறகு சிங்கள குடும்பங்கள் தான் எங்களுக்கு ஒதுங்க இடம் தந்தார்கள். எங்களது கடந்த காலங்களில் எல்லா சமூகங்களுடனும் எவ்வளவு ஆழமான உறவைப் பேணியிருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது” என இஷான் குறிப்பிட்டார்.
சிங்கள கடைகளும் தாக்கப்பட்டுள்ளன
சந்திம என்பவர் மினுவாங்கொடையில் உள்ள பெரிய ஆடையகமான “எக்கோ”வின் உரிமையாளர் ஆவார். இந்த ஆடையகத்துக்கு சிங்கள பௌத்த பெண்ணொருவரே உரிமையாளராக உள்ள போதும் இதில் பணிபுரிபவர்களுள் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். தாக்குதல்தாரிகள் எக்கோவின் முன் கதவை தாக்கியபோதும் அதற்கு தீ வைக்கவில்லை. முஸ்லிம் கடைகளுக்கு வைக்கப்பட்ட தீ இந்தக் ஆடையகத்துக்குப் பரவியுள்ளது. இதனால் ஆகஸ்ட் வரை விற்பனைக்கிருந்த கையிருப்பு அனைத்தும் தீயில் கருகியுள்ளன.
“ நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் வர்த்தக நிலையங்களைத் தாக்கும் இந்தக் காடையர்களின் செயல் முட்டாள்தனமானது. எனது கடையில் 20 மில்லியனுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பிரிவின் உரிய நேரத்திற்கு வந்திருந்தால் சேதத்தை குறைத்திருக்கலாம்” என சந்திம தெரிவித்தார்.
எம்.எச்.ஜே.பி.(பெரேரா (57) என்பவர் கடந்த 10 வருடங்களாக புருலபிடியவில் கண்ணாடியாலான ஒரு கடையை நடத்தி வருகிறார். இவரது மகள் முஸ்லிம் நபர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அது தான் இவருடைய கடை தாக்கப்பட்டதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
“எனது கடைக்கு வெளியே கிட்டத்தட்ட 20 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவர்கள் தாக்க முற்படும்போது “நான் சிங்களவன், தயவு செய்து தாக்காதீர்கள்” எனக் கத்தினேன். எனது கெஞ்சல்களை அவர்கள் சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் எனது சொத்துக்களை அழித்தார்கள்” என அவர் தெரிவித்தார்.
உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன் வெளியாட்கள் தாக்கியுள்ளார்கள்
பெரும்பாலான தாக்குதல்தாரிகள் உள்ளூர்வாசிகள் ஒரு சிலரின் பங்களிப்புடன் அருகிலுள்ள ஊர்களில் இருந்து வந்தவர்கள் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆழமாக நம்புகின்றன. பௌஸ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் ஏற்கனவே பலமுறை கண்ட முகங்கள் என இஷாம் தெரிவித்திருந்தார்.
“தாக்குதல்தாரிகள் வெளியூரில் இருந்து வந்தவர்கள் என அனைவரும் சொல்கிறார்கள். நான் ஒரு ஆண்கள் குழுவை அடையாளம் கண்டேன். அவர்கள் எங்களது கடையில் சாப்பிட்டவர்கள்தான்” என இஷாம் தெரிவித்தார்.
தனது உணவகத்தின் கல்லாப் பெட்டியிலிருந்தும் தனது ஜீப்பில் இருந்தும் குறிப்பிட்டளவு தொகைப் பணம் காணாமல் போனது பற்றி இஷாம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
“சி.சி.ரி.வி. கமராவில் தாக்குதல்தாரிகள் கடைக்குள் வந்து கமராவுடன் இணைக்கப்பட்டுள்ள டி.வி. ஆர். வயரினை துண்டிப்பது வரைதான் பதிவாகியுள்ளது. கல்லாப் பெட்டியில் இருந்து கிட்டதட்ட 85,000 ரூபா பணமும் லொக்கர்களில் இருந்து 200,000 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது. எனது ஜீப்புக்குள் இருந்த சுமார் 300,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் காணாமல் போயுள்ளன” என இஷாம் தெரிவித்தார்.
கல்லொழுவையை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் நிஜாப்தீன் கோழிக்கடை ஒன்றை திறப்பதற்காக வங்கியில் இருந்து கடன் பெற்று குளிரூட்டி ஒன்றை வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. தனக்கு ஒரேயொரு வாழ்வாதாரமாக இருந்த ஒன்றும் இல்லாமல் போய் விட்டதை எண்ணி அவர் விரக்தியில் உள்ளார். “நான் அப்போதுதான் நோன்பு துறப்பதற்காக வேண்டி கடையை மூடினேன். ஒரு சிலர் கத்தும் சத்தங்கள் கேட்டபோது எனது மனைவி எங்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். வீட்டின் வெளிக் கதவு கூர்மையான கத்தியால் வெட்டப்பட்டிருந்தது. நாங்கள் வெளியே செல்லவில்லை. எனது பேரன் அவனது தாயுடைய பாதுகாப்புக்காக கூடவே இருந்தான்” என நிஜாப்தீன் தெரிவித்தார்.
எப்போது இது முடியும் எவ்வாறு இதற்கு நாம் முடிவு கட்டலாம்?
புருலுபிடியவைச் சேர்ந்த பாதிரியார் டட்லி ஸபரமது, அப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல் எந்தவித அடிப்படையும் அற்றது என்றார். “அரசியல் காரணங்களுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் மக்களுடைய உயிர்களைப் பயன்படுத்தும் அனைவரும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டும். இனவாதத்துக்கு முன்னால் மக்களுடைய உயிர் பொருட்படுத்தப்படாத ஒன்றாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார். தமது சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாதிகளில் இருந்து தூரமாகி இருக்கும் அதேவேளை பிற சமூகங்களின் உதவியின்றி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள். இப்போதுகூட நாட்டை பிரிப்பதுதான் தீவிரவாதிகளுடைய நோக்கம். இலங்கையில் உண்மையின் பக்கம் இருப்பவர்கள் பொறுமையிழந்து தீவிரவாதத்தைக் கடைப்பிடிக்கும் நிலைமையும் வரலாம்.
30 வருட கால யுத்தத்தில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? கிந்தோட்டை, கண்டி மற்றும் அம்பாறை சமூக வன்முறைகளில் இருந்து நாம் எதனைக் கற்றுக் கொண்டோம் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்தவகையான கொள்கையைப் பயன்படுத்தப் போகிறோம்?
இலங்கை சனத்தொகையில் முஸ்லிம்கள் வெறும் 10 சதவீதமே இருக்கிறார்கள். இந்த சமூகம் இது போன்ற கறுப்புப் புள்ளியை எதிர்கொள்வது இது முதல் தடவையல்ல.இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நிலைமை மோசமடையாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
-Vidivelli