மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுடைமையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்த் தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற வெசாக் தின வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கம் தற்போது ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுடைமையாக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சியினர் முழுமையான ஆதரவினை வழங்குவோம். விரைவான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ளாவிடின் எதிர்காலத்தில் மாறுபட்ட விளைவுகள் ஏற்படலாம்.
அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய வெசாக் பண்டிகையினை கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும். நிலைமைகளை வெற்றி கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் தமது பிரதேச பாடசாலைகளில் நாளை மறுதினம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்கள். பெற்றோரின் அச்சம் போக்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் பொது மக்கள் வழங்கிய ஆதரவினை தற்போதும் வழங்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படவில்லை. மக்களின் தேவைகளை அறிந்தே செயற்படுகின்றோம் என்றார்.
-Vidivelli