இஸ்லாத்தின் பெயரில் நாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தி அழிவுகளைச் செய்த நாசகார சக்திகளுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பு பிரிவினர் குறுகிய காலத்தில் கைது செய்தது போன்று முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை அரங்கேற்றியவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி உடன் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாதுகாப்பு பிரிவினரைக் கோரியுள்ளதாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் ‘விடிவெள்ளி’ க்குத் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற இஸ்லாம் அனுமதிக்காத நாசகார செயல்களையடுத்து அதற்கு ஆதரவளித்தவர்கள், தொடர்புபட்டவர்கள், உதவி வழங்கியவர்கள் அனைவரையும் குறுகிய காலத்தில் கைது செய்து விட்டதாக பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் மட்ட பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ள முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்.
சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினரால் முஸ்லிம்களின் வீடுகளும் பள்ளிவாசல்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டது போன்று வன்முறையாளர்களின் வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத நாசகார செயல்கள் அரங்கேற்றப்பட்டதன் பின்பு உலமா சபை பாதுகாப்பு பிரிவினருக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியது.
முஸ்லிம்களின் சக வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள துயரம் மிக்க இந்தச் சூழலில் நாம் தைரியமாக இருக்க வேண்டும். அல்லாஹ் எப்போதும் எங்களுடன் இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவானவர்களல்ல. இஸ்லாத்தின் பெயரால் ஒரு சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயலுக்கு முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பானதல்ல.
இனவாதிகள் வெறியோடு வந்து தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் துஆக்களில் ஈடுபட வேண்டும். அத்தோடு வன்முறைகளால் பாதிக்கப்பட்டோரின் பிரதேசங்களில் அருகில் வாழும் பாதிக்கப்படாத மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் ஆன பொருளாதார மற்றும் உடல் ரீதியிலான உதவிகளை வழங்கலாம். ஆலோசனைகளையும் வழங்கலாம்.
முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் பாதுகாக்கும்படி உலமா சபை நாட்டின் ஆட்சியாளர்களையும், பாதுகாப்பு பிரிவினரையும் வேண்டியிருக்கிறது’ என்றார்.
-Vidivelli