வன்முறை சம்பவங்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் – பிரதேசசபை உறுப்பினர்களும் உள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற அரசியல் தலைவர்களே அந்தந்த பிரதேசசபை உறுப்பினர்களை வன்முறைகளில் ஈடுபடுமாறு தவறான முறையில் வழிநடத்துகின்றனர் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இத்தேபானே தம்மாலங்கார தேரர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,
சட்டத்தை ஒரு போதும் நாம் கையிலெடுக்க முற்படக்கூடாது. அதற்கு நான் இடமளிக்கப் போவதுமில்லை. சரியான முறையில் இந்தப் பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியாதவர்களிடம், மதுபானத்தை வழங்கி அவர்களை வன்முறைக்கு தூண்டும் சிலர் உள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் சில அரசியல் வாதிகளும் கட்சி ரீதியிலான பிரதேசசபை உறுப்பினர்களும் உள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற அரசியல் தலைவர்களே அந்தந்த பிரதேசசபை உறுப்பினர்களை இவ்வாறு தவறான வழியில் கையாளுகின்றனர்.
எனவே, எதிர்வரும் தினங்களில் கொண்டாடப்படவுள்ள முஸ்லிம் மக்களின் பண்டிகையான ரமழான் மற்றும் பௌத்த மக்கள் கொண்டாடும் வெசாக் பண்டிகை ஆகியவற்றை அந்த மக்களை நிம்மதியாக கொண்டாடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
அத்தோடு இவ்வாறு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளால் கலவரமடையாது பொறுமையுடன் செயற்படுமாறு முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு பிரிவினையுடன் செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்துவதோடு, நாட்டை வெகுவிரைவில் மீளவும் சாதாரண நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலைமையை உருவாக்கிய அரசியல் தலைவர்களே அவற்றை சரி செய்ய வேண்டும்.
இத்தனை உயிர்கள் பலியாகியும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டும், வன்முறைகள் ஏற்பட்டும் அரசியல் தலைவர்கள் யாரும் பொறுப்புடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. இன்றும் கூட ஒருவரை ஒருவர் குறை கூறுகின்றார்களே தவிர நாட்டுக்காக ஒன்றிணைய யாரும் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அத்தோடு இவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னரே நாம் அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் அவை குறித்து யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக பாராளுமன்றத்திலுள்ள சகல உறுப்பினர்களதும் சொத்து விபரங்கள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதற்கும் இது வரையில் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்றார்.
இத்தே பானே தம்மாலங்கார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பின் பின்னர் சில தினங்களில் மக்கள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்தனர். எனினும் மீண்டும் சில முரண்பாடுகளால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் பாரிய வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனர் என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
-Vidivelli