வன்முறையாளர்களிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்குவைத்து வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வன்முறையாளர்களிடமிருந்து அரசாங்கம் முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. அத்தோடு வன்முறைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னிப்புச்சபை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து கடந்த 13 ஆம் திகதியிலிருந்து சில முஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவான சொத்துக்களுக்குச் சேதமேற்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் இலக்காகியுள்ள முஸ்லிம்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது:
வன்முறையாளர்களால் சிறுபான்மை முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்படுகின்ற தாக்குதல்களிலிருந்து அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். வன்முறையையும், அச்சத்தையும் பரப்பும் குழுக்களுக்கு எதிராக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதுடன், வன்முறைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த சிலருக்கு தற்போதைய தாக்குதல்களில் சம்பந்தமிருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கைகளில் வெகுவாகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்தத் தாக்குதல்கள் திடீரென ஓர் அழுத்தத்தினால் ஏற்பட்டவை என்று கருதமுடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் தொடர்பிலான அறிகுறிகள் முன்னரே தென்பட்டதுடன், அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற எச்சரிக்கைகளைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அண்மையில் இடம்பெற்றுள்ள பல தாக்குதல்களை தடுத்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
-Vidivelli