நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினரே தாக்குதல் பொலிசாரும் தாக்கவிட்டு வேடிக்கை பார்த்துள்ளனர்
பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினரே பெருமெடுப்பில் வந்து திடீரென இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பொலிசாரும் அவர்களை தாக்கவிட்டு வேடிக்கை பார்த்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் என்னிடம் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினர் கூட தாக்குதல் சம்பவங்கள் முடிந்த பிறகுதான் அப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் தாக்குதலுக்கு இலக்கான கிராமங்களை பார்வையிட்ட பின்னர் ‘விடிவெள்ளி’க்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிடுகையில்,
குருநாகல் மாவட்டத்தில் இனவாத சக்திகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நான் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறேன். இம்மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளுக்குட்பட்ட சுமார் 10 முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. எல்லா பிரதேசங்களிலும் ஒரே விதமான தாக்குதல்களே இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்த தாக்குதல்களின்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களே அதிகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் செல்வந்தர்களது வீடுகளே பெரும்பாலும் தாக்கப்பட்டுள்ளன. இதில் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பள்ளிவாசல்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அங்கு சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்தியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடக்காதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் பிரதமர் மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் ஒன்றை நடாத்தினோம். இதன்போது குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வலியுறுத்தினோம்.
குறிப்பாக இந்த தாக்குதல்களை வெளியிலிருந்து வந்த ஒரு குழுவினர் செய்ததாக கூறினாலும் அதே பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இவற்றுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்களை மக்கள் நன்கு இனங்கண்டுள்ளனர். அத்துடன் அப் பகுதியில் வழக்கமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் இந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்டுள்ளனர். கிடைக்கப் பெற்றுள்ள சிசிரிவி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டும் வாகன இலக்கத்தகடுகளை அடிப்படையாக கொண்டும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்மிடம் உறுதியளித்தார். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சிலரை விடுவித்தமை தொடர்பான விடயம் குறித்தும் நாம் பொலிசாரிடம் வினவினோம். அவர்களை விடுவிக்குமாறு கோரி ஹெட்டிபொலி பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து கூமார் 2000 இற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதியும் நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கிலுமே அவர்களை விடுவித்ததாக எமக்கு கூறப்பட்டது. இவ்வாறான சம்பவங்களை தவிர்க்கும் வகையில், கைது செய்யப்படும் நபர்களை அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்காது தூரப் பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லுமாறு பிரதமர் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இந்தத் தாக்குதல்களானது குருநாகல் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன. எனினும் ஏனைய பகுதிகளுக்கு இவை பரவாதவாறு நாம் களத்தில் நின்று ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கங்களும் பழிவாங்கும் மனப்பாங்கும் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
குண்டுத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவநம்பிக்கைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்தமை, அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த வெறுப்பூட்டும் கருத்துக்கள் என்பன சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்த நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு குழுவினரே இந்தத் தாக்குதல்களை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை காரணமாக கொண்டு தமது ஆத்திரத்தை தீர்க்க சுயலாபங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கும்பல் முயற்சித்து வருகிறது. அதன் விளைவே இந்தத் தாக்குதல்களாகும்.
இந்த இடத்தில் முஸ்லிம்கள் ஆத்திரமடையாமல் உச்சக்கட்ட சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த தருணத்தில் தம்மைச் சூழவுள்ள பௌத்த மதகுருக்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள தலைவர்களுடன் இணைந்து தமது கிராமங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். எம்மைச் சந்தித்த பல பௌத்த பிக்குமார் இச் சம்பங்களுக்காக கவலை வெளியிட்டனர். தமது எதிர்ப்பையும் மீறி இவ்வாறான சம்பவங்கள் நடந்துவிட்டதாக கூறினர்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தணிக்கவும் மீண்டும் சுமுக நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றார்.
விடிவெள்ளி