நாத்தாண்டிய – கொட்டாரமுல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இரவு இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்துமுள்ளனர்.
இந்த நிலையிலேயே கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாரமுல்லை முஸ்லிம் கிராமத்தில் இனவாத வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக, கொட்டாரமுல்லயின் எல்லை கிராமமொன்றில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய பௌசுல் அமீர் கொல்லப்பட்டார். இவரின் வீடு உட்பட, கொட்டாரமுல்ல பகுதியில் சுமார் 25 வீடுகள் நேற்று முன்தினமிரவு தாக்கப்பட்டுள்ளன.
கொட்டாரமுல்லை எல்லை கிராமத்தில் இருக்கும் அமீரின் வீட்டுடன் இணைந்ததாக தச்சுத்தொழில் நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டுவந்தார். நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் அவர் குடும்பத்துடன் வீட்டினுள் இருந்தபோது 40 பேர்கொண்ட கும்பலொன்று வீட்டுக்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கூரிய வாளால் வெட்டப்பட்டே பெளசுல் அமீர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
அங்குள்ள வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் 4 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் ரிழ்வான் மற்றும் கொட்டாரமுல்ல பள்ளிவாசல் செயலாளர் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொட்டாரமுல்லயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தும்மோதர பகுதியிலும் இரண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, வீடுகளும் தாக்கப்பட்டு, தீவைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இனவாததாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அமீரின் ஜனாஸா நேற்று மாலை கொட்டாரமுள்ளை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது, அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட பலரும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.
vidivelli