மினுவாங்கொடையில் ; 27 வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; 12 கடைகள் தீக்கிரை
பள்ளிவாசலுக்கு பலத்த சேதம் ; பிரதேசத்தில் பதற்றம்
பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் நாலா புறங்களிலுமிருந்து மினுவாங்கொடை நகருக்கு வருகை தந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் மினுவாங்கொடை பள்ளிவாசலைத் தாக்கி முழுமையாகச் சேதப்படுத்தினார்கள்.
27 வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 கடைகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன என மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.ஆர்.எம். சவாஹிர், செயலாளர் ஏ.டபிள்யூ. ரஷீத் ஆகியோர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு மினுவாங்கொடை நகரில் இனவாதிகளால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், கடைகளைத் தாக்கிய அவர்கள், பொருட்களை வெளியிலெடுத்து எறிந்ததுடன் சில பொருட்களை கொள்ளையிட்டும் சென்றுள்ளனர். 12 கடைகள் முற்றாக எரிந்துள்ளன. பள்ளிவாசலுக்கு முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடையிலே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல் இரண்டு தடவைகள் தாக்கப்பட்டுள்ளன. 7 மணிக்கு பள்ளிவாசலை கற்களால் தாக்கி, கண்ணாடிகளை உடைத்துள்ளார்கள். பின்பு 8.30 மணியளவில் பள்ளிவாசலின் பிரதான நுழைவாயிலை உடைத்து பள்ளிவாசலினுள் சென்று முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளார்கள். மினுவாங்கொடை நகரில் முஸ்லிம்களின் 3 வீடுகளும் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன.
உள்ளூர்வாசிகளுடன் அநேகமானோர் வெளிலிருந்து வந்தே தாக்குதல்களை நடத்தினார்கள். மினுவாங்கொடையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே வாழ்கிறார்கள். இதனால் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களை அமைதியாகவும் பொறுமையுடனும் இருக்குமாறு வேண்டியுள்ளோம் என்றார்கள்.
சம்பவ இடத்தில் தற்போது விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நகரில் அமைதியற்ற சூழ்நிலை மேலும் நீடிக்காதிருக்கும் வகையில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை, புருல்லபிட்டிய, , கல்லொழுவை, ஜாபாலவத்தை, பொல்வத்தை, பத்தண்டுவன, மிரிஸ்வத்தை, கோப்பிவத்தை ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இவ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மதகுருமார், அரசியல்வாதிகள் விஜயம்
மினுவங்கொடை நகருக்கும் பள்ளிவாசல்களுக்கும் நேற்று அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் விஜயம் செய்து சேத விபரங்களைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
மினுவாங்கொடை பன்சலையின் பிரதான தேரர், மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதி ஆலயங்களின் கிறிஸ்தவ அருட்தந்தைகள், பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து நிர்வாகிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் விஜயம் செய்தனர்.
பென்சி கடை உரிமையாளர்
மினுவாங்கொடை நகரில் பென்சி கடை உரிமையாளரும், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான சுஹைதர் தெரிவிக்கையில், எனது கடை மினுவங்கொடை நகரிலே மத்திய சந்தையில் இருக்கிறது. எனது கடையை மாலை 6.30 மணியளவில் தாக்கினார்கள். எனக்கு சுமார் 50 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மினுவாங்கொடையில் உள்ள முஸ்லிம்களின் கடைகள் அனைத்தையுமே தாக்கி விட்டார்கள் என்றார்.
தொலைபேசி கடை உரிமையாளர்
மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலே எனது தொலைபேசிக் கடை இருக்கிறது. காடையர்கள் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடையை மூடுமாறும் கூறப்பட்டது. நான் கடையை மூடிவிட்டேன். எனது கடை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதில் சுமார் 17 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
vidivelli