பாதுகாப்பு தரப்பு வேடிக்கை பார்க்க ஊரடங்கின் போது கடும் தாக்குதல்
குருநாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொட்டுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகட்டுவ கிராமங்களில் அதிக சேதம்
வட மேல் மாகாணத்திற்குட்பட்ட பல்வேறு முஸ்லிம் கிராமங்கள் மீது வன்முறைக் கும்பல்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் பலத்த சேதங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 15 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதுடன் உடைமைகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, வாரியபொல, ஹெட்டிபொல, பிங்கிரிய, நிக்கவரட்டிய, கொபேய்கனே ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாரவில மற்றும் கொஸ்வத்த பொலிஸ் பிரிவுகளிலுமேயே அதிக சேதங்கள் பதிவகையுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொட்டுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகட்டுவ கிராமங்களிலேயே அதிக சேதங்கள் பதிவாகியுள்ளன.
நிக்கவரட்டி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு சிலர் வெட்டிக் காயப்படுத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. எனினும் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் குறித்த சரியான புள்ளி விபரங்களை நேற்று இரவு வரை உறுதிப்படுத்த முடியவில்லை.
குறிப்பாக வன்முறையாளர்கள் முதலில் சொத்துக்களை இலக்கு வைத்த போதும் பின்னர் உயிர்களையும் இலக்கு வைத்து தாக்குதலை ஆரம்பித்ததாக வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார்.
இதனால் பலர் புனித நோன்புடன் காடுகளிலும் வயல்களிலும் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் வட மேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் உள்ளவர்கள் அச்சத்துடனேயே உள்ளதாக அவர் கூறினார்.
வன்முறையாளர்கள் கற்கள், பொல்லுகள், இரும்புக் கம்பிகள், பெற்றோல் கலன்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளைக் கொண்டு வந்தே தாக்குதலில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குண்டர்கள் தாக்குதல்களை முன்னெடுத்த சமயம் அங்கு பிரசன்னமாகியிருந்த படையினரும் பொலிசாரும் அவற்றை வேடிக்கை பார்த்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல திசைகளிலிருந்தும் குழுக்கள் குழுக்களாக மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் வந்த குண்டர்களே இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் சில முஸ்லிம் கிராமங்களை சிங்கள மக்கள் இணைந்து கடந்த 48 மணி நேரமாக பாதுகாத்து வருவதாகவும் பிரதேச முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கொபேய்கனே பொலிஸ் பிரிவின் பன்னவ முஸ்லிம் கிராமத்துக்குள் உள் நுழையும் அனைத்து வழிகளிலும் சிங்கள மக்கள், வன்முறையாளர்களை உள்ளே நுழைய விடாதவாறு இரு தினங்களாக காவல் கடமையில் இருந்ததாகவும் அதனால் அந்த கிராமத்தில் எந்த அசம்பாவிதங்களும் நேற்று இரவு 7.00 மணி வரை பதிவாகியிருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் வடமேல் மாகாணம் முழுதும் நேற்று மாலை 4.00 மணி வரை நீடித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இரு மணி நேரம் தளர்த்தப்பட்டு மீள நேற்று மாலை 6.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்டது. அது முதல் இன்று காலை 6.00 மணி வரை அந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
எனினும் கம்பஹா மாவட்டத்துக்கு நேற்று இரவு 7.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டம் தவிர்த்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு நேற்று இரவு 9.00 மணி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் அது இன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும், முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்களை நெறிப்படுத்திய, அதில் பங்கேற்றவர்களைக் கைது செய்யவும் இவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
இந் நிலையில் வன்முறைகளில் ஈடுபட எவரேனும் எத்தனித்தால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த முப்படைகளின் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதற்கிடையில் பிந்திக் கிடைத்த தகவல்களுக்கமைய நேற்றிரவு 7 மணியளவில் குருநாகல் மாவட்டத்திற்குட்பட்ட ஹிப்பம்பொல முஸ்லிம் கிராமத்தில் அரபுக் கல்லூரி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பன்னவ கிராமத்தை தாக்குவதற்கு தயாராவதாக கிடைத்த தகவல்களால் அக் கிராமத்தில் பதற்ற நிலையும் தோன்றியது.
vidivelli