தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை சம்பந்தபட்டவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக மேலுமொரு பொலிஸ் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இணைப்பு அதிகாரிகளாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 8 பேர் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் எப்பகுதியிலும் சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போது பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் எம்.ஏ.எம். அர்ஷாத் மௌலவியைத் தொடர்புகொண்டு அவர் ஊடாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் அர்ஷாத் மௌவிக்குத் தெரிவிக்கப்பட்டால் அவை அதிகாரம் வழங்கப் பட்டுள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊடாக பிரச்சினை ஏற்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு ஆராய்ந்த பின்பு உடனடித் தீர்வுகள் வழங்கப்படும்.
பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் அரபு மொழியிலான சஞ்சிகைகள் என்பன கைப்பற்றப்படும்போது மேற்கொள்ளப்படும் கைதுகளின்போது உருவாகும் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி விக்ரமசிங்கவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரது செயலகத்தில் கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
vidivelli