நீர்கொழும்பு, பெரியமுல்லை, பலகத்துறை பகுதிகளில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற முஸ்லிக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களையடுத்து பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு உரிய நஷ்டஈட்டை வழங்கி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் நீர்கொழும்பு – பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகம் நீர்கொழும்பு வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 35 இலட்சம் ரூபா என மதிப்பிட்டுள்ளது. 35 இலட்சம் ரூபாவைத் திரட்டும் பணியில் பள்ளிவாசல் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர். அப்பகுதி மக்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களாக உள்ளனர்.
வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட 71 முஸ்லிம்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் நல்லிணக்கத்தையும் சக வாழ்வினையும் உறுதிசெய்யும் நோக்குடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கி அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெரியமுல்லை ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் இஸ்ஸதுல் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. உரிய நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொண்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கோ செல்வதில்லை என சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதன்மூலம் அப்பகுதியில் சகவாழ்வையும் இன நல்லுறவினையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என 48 பேரை பொலிஸார் இனங்கண்டுள்ளனர். இவர்களில் 27 பேர் நீர்கொழும்பு பகுதியையும் 21 பேர் பலகத்துறையையும் சேர்ந்தவர்கள்.
கொழும்பு – வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினையடுத்து பெரியமுல்லை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து கலந்துரையாடலொன்றினை நடாத்தினார். கலந்துரையாடலின் போதும் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் சமாதான உடன்படிக்கைக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
சமாதான ஏற்பாடுகளுக்காக சத்தியக்கடதாசிகள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. பெரியமுல்லை ஜும்ஆப் பள்ளிவாசல் திரட்டிய இறுதி அறிக்கையின்படி வன்முறைகளினால் 67 வீடுகளும், 13 முச்சக்கர வண்டிகளும், 12 மோட்டார் சைக்கிள்களும் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
சமாதான உடன்படிக்கையின்படி இனங்காணப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றினால் எச்சரிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
vidivelli