அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை தனியான சபையொன்றின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கான சட்டமூல வரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவையில் அது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.
இந்தச் சட்ட மூல வரைபு அவசரமாக தயார் செய்யப்பட்டுள்ளதால் இது தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடியதன் பின்பு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்ட மூல வரைபு தொடர்பில் கலந்துரையாடுவதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்று அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை தனியான சபையொன்றின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது பற்றிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை, தேசிய சூரா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பனவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை தனியான சபையொன்றின் கீழ் கொண்டு வருவதற்கான சட்ட மூல வரைபு கடந்த 6 ஆம் திகதி அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சட்டமூல வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச சபையில் 11 அங்கத்தவர்கள் பதவி வகிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பேரில் உலமாக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், முஸ்லிம் சமய விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, திறன் அபிவிருத்தி அமைச்சு என்பனவற்றினைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கும் வகையில் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli