நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கும் ஆளும்கட்சி முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. உங்களால் ஒருதாய் மக்களாய் இந்த நாட்டில் இருக்கமுடியும் என்றால் வாழுங்கள் இல்லையேல் நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அந்த இடத்துக்கே போய்விடுங்கள். இந்த நாட்டினை நாசமாக்க வேண்டாம் என ஆவேசமாக சபையில் தெரிவித்தார் விமல் வீரவன்ச எம்.பி.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஜெனிவா யோசனைகளுக்கு அமைய 30/1 பிரேரணையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதனை பயன்படுத்தி இங்கு வாய்ப்புகளை உருவாக்கி புதிய பயங்கரவாத சட்டத்தை கொண்டுவருகின்றது. பயங்கரவாத சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து இருக்கும் சட்டத்தை பலப்படுத்த முடியும். அதை விடுத்து சர்வதேச தேவைகளுக்கான நகர்வுகளை இங்கு எடுக்க வேண்டாம். நாம் எதிர்க்கட்சியாக எமது கடமையை செய்து வருகின்றோம். நாம் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்த தவறுகளை நாம் செய்ய மாட்டோம். இப்போதும் நாட்டில் ஒரு அச்சுறுத்தல் சூழலில் நாம் எதிர்க்கட்சியாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளாது ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். அதனைக்கூட விளங்கிக்கொள்ளாது நீங்கள் இவ்வாறு செயற்படக் கூடாது.
எமது ஜனாதிபதி காலத்தில் குண்டு வெடிப்பதை நிறுத்தி இனி குண்டு வெடிக்காத நாட்டினையே நீங்கள் பொறுப்பெற்றீர்கள். ஆனால் இன்று உங்களின் நல்லாட்சியிலும் குண்டு வெடிக்கின்றது. ஆகவே இந்த சம்பவங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள் இருந்தும் அதனை தடுக்க முடியாதது ஏன். கிறிஸ்தவ பாடசாலைகள் மூடப்படுகின்றன, இஸ்லாமிய பாடசாலைகள் மூடப்படுகின்றன. ஆனால் சிங்கள தமிழ் பாடசாலைகள் ஏன் திறக்கப்படுகின்றன. அனைத்து மாணவர்களையும் பாதுகாக்க வேண்டும். பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்ப மாட்டார்கள். குண்டு வெடிக்கும் என்ற அச்சத்தில் அல்ல இந்த அரசாங்கம் மீதான அவநம்பிக்கை காரணமாகவே எவரும் வெளியில் வருவதில்லை. அமைதியாக வாழ விரும்பும் சிங்கள், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாம்.
யசீர் அரபாத்தின் வாகன சாரதியை தன்வசப்படுத்தி மொஸாட் புலனாய்வுத்துறை பணம் கொடுத்தது. ஏன் கொடுத்தது என்றால் யாசீர் பற்றி தகவல் பெற்றுக்கொள்ளவே. அதேபோல் தான் இங்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் எவரையும் விலைக்கு வாங்கி அவர்களின் மூலமாக தகவலை பெற்றுக்கொள்ள அவர்களின் சிலருக்கு பணம் வழங்கப்பட்டிருக்கலாம். அதேபோல் அமைச்சர் கிரியெல்ல வெளியிட்ட துண்டுப்பிரசுரங்களில் ஜனாதிபதியை குற்றம் சுமத்தியதை போலவே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பயங்கரவாத அமைப்புடன் ரிஷாத் தொடர்பில் உள்ளார் என்ற காரணிகளை கூறியுள்ளனர். அதேபோல் தேரர் ஒருவர் ரிஷாத் தான் பயங்கரவாதத்தை வளர்ப்பதாக கூறினார். இந்த ஆட்சியை உருவாக்கிய அனைவரும் இந்த பயங்கரவாதத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார். ‘
இதன்போது ஆளும் தரப்பில் இருந்த அமைச்சர் ரிஷாத் கடும் சினம்கொண்டு விமல் வீரவன்ச எம்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தயவுசெய்து நீங்கள் கூறிய விடயங்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹன்சார்ட் அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும். பொய்யாக காரணிகளை கூறி இனவாதத்தை தூண்ட வேண்டாம் என்றார். இதற்கு பதில் தெரிவித்த விமல் எம்.பி, இந்த கருத்துக்களை நான் கூறவில்லை, உங்களின் தலைவர்கள் தான் கூறுகின்றனர். நான் இனவாதம் பரப்பவில்லை நீங்கள் இந்த நாட்டில் அமைதியாக வாழ விரும்பும் மக்களை அழிக்க முயற்சித்து வருகின்றீர்கள். இன்னும் அடிப்படைவாதம் குறித்து பேச இடமளிக்க முடியாது. கிழக்கில் உள்ள சகல அடிப்படைவாத பாடசாலைகளையும் மூட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அராபியர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் வாழ பழகிக்கொள்ள வேண்டும். தற்கொலை குண்டுதாரிகள் உருவாக்கும் வஹாப்வாத பாடசாலைகளை மூடுங்கள். சாதாரண குடிமகனை தற்கொலை குண்டுதாரியாக மாற்றும் அரபுக் கல்வியை நிறுத்துங்கள். சிங்கள, தமிழ் மக்களுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள். இப்போதாவது உங்களின் சமூகத்தில் உள்ள குறைகள் குறித்து சுய பரிசீலனை செய்துகொள்ள பழகுங்கள். இப்போது கவனிக்காவிட்டால் இன்னும் இன்னும் இந்த நாட்டில் தற்கொலைதாரிகளே உருவாவார்கள். தற்கொலைதாரிகளை உருவாக்கும் நிலையங்களே இந்த நாட்டில் உருவாகும் என்றார்.
அவர் கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருந்த போது ஆளும் தரப்பில் இருந்த முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் கூச்சலிட்டு முரண்பட்டுக்கொண்டிருந்தனர். அரேபியக் கல்வி முறை குறித்து தமது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இதற்குப் பதில் தெரிவித்த விமல் எம்.பி, நீங்கள் அனைவரும் இலங்கையர், அராபியர் அல்ல. முதலில் இந்த நாட்டினை நேசிக்கும் கொள்கைக்கு வாருங்கள். உங்களால் ஒருதாய் மக்களாய் இந்த நாட்டில் இருக்கமுடியும் என்றால் வாழுங்கள் இல்லையேல் நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அந்த இடத்துக்கே போய்விடுங்கள். இந்த நாட்டினை நாசமாக்க வேண்டாம் என்றார்.
-Vidivelli