ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஷங்ரிலா உல்லாச விடுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸஹ்ரானின் சகோதரியுடைய இரத்த மாதிரியைப் பெற்று ஸஹ்ரானின் உடற் பாகங்கள் என கருதப்படும் பாகங்களுடன் ஒப்பிட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யவேண்டும் என கோட்டை நீதவானிடம் புலனாய்வு அதிகாரிகள் அனுமதி கேட்டனர்.
இதற்கமைய தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் எனக் கூறப்படும் ஸஹ்ரானின் உடற்கூறுகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி அது தொடர்பான அறிக்கையை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் சமர்ப்பிக்குமாறு அரசாங்க ஆய்வாளர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள வெடி குண்டுகளை கொண்டு செல்லப் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 7 வாகனங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அரச ஆய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
குறித்த வாகன உரிமையாளர்களின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி இந்த வாகனங்கள் அனைத்தும் பயணிகள் போக்குவரத்துக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஆலோசனை மற்றும் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் தொடர்ந்து குறித்த வாகனங்கள் குண்டுகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படவில்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை விடுவிக்குமாறு நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் பிரபல வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பயங்கரவாத அமைப்புக்காக நிதி பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினையும் விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வர்த்தகர் இப்ராஹீமுடன் பணிபுரிந்த இஷானா என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் கணக்காளரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
-Vidivelli