இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு 3500 ஹஜ் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்து பதிவுக்கட்டணம் தலா 25 ஆயிரம் ரூபா செலுத்தியுள்ள சுமார் 1000 விண்ணப்பதாரிகள் ஹஜ் கடமையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டாவே கிடைக்கப்பெற்றது. 3500 ஹஜ் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அடுத்தவாரம் ஹஜ் முகவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்; சிறு எண்ணிக்கையிலான ஹஜ் விண்ணப்பதாரிகளைக் கொண்டுள்ள ஹஜ் முகவர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயற்பட வேண்டியுள்ளது. 50 ஹஜ் பயணிகளைக் கொண்டதே ஒரு குழுவாகக் கருதப்படும். தற்போது ஹஜ் முகவர்கள் 50 ஹஜ் பயணிகளைக் கொண்ட குழுவாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 10–15 ஹஜ் பயணிகளைக் கொண்டுள்ள ஹஜ் முகவர்களுக்கே 50 பேர் கொண்ட ஒரு குழுவாக அமைத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் செலுத்திய, ஹஜ் பயணத்துக்காகக் காத்திருக்கும் சுமார் 1000 ஹஜ் விண்ணப்பதாரிகள் அடுத்த வருடம் ஹஜ் கடமையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.
-Vidivelli