எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்
3 நாட்களில் சகல பயங்கரவாதிகளையும் பிடிப்பேன் என்கிறார் ஜனாதிபதி
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் தமிழர்களை போராட்டத்திற்கு தள்ளியதைப்போல் இந்த நாட்டுடன் தொடர்பில்லாத ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்திற்குள் தள்ள வேண்டுமா? நாட்டுக்குள் இருக்கும் 150 பயங்கரவாதிகளாக அனைத்து முஸ்லிம்களையும் பார்க்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார். இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக்காட்டுவேன் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி சிறப்புரையை நிகழ்த்தினார். இதில் அவர் கூறுகையில்.
கடந்த 21 ஆம் திகதி தாக்குதலின் போது அதிகமாக பேசப்பட்ட காரணியாக எனது வெளிநாட்டு விஜயத்தையே பேசினர். நான் சிங்கப்பூரில் இருந்தபோது எனக்கு இந்த சம்பவம் தெரியவந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட வேதனையை அடுத்து இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை யோசித்தேன். ஆனால் சர்வதேச பயங்கவராத அமைப்பினால் இது நடந்தது என அப்போது எனக்கு புரியவில்லை. எமது பாதுகாப்பு தரப்பின் கடிதம் ஒன்றும் அப்போது சமூக வலைத்தளங்களில் பரவியது, அதனை நான் அவதானித்தேன். அப்போதுதான் இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்புக்கு தெரிந்துள்ளது என்பதை அறிந்தேன். ஆகவே இதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய விசாரணைக் குழுவை உருவாக்க நினைத்தேன். நான் நாட்டுக்கு வர முன்னர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துவிட்டேன்.
அடுத்த நாள் காலை பாதுகாப்பு குழு கூட்டப்பட்டது, அதற்கு முன்னர் விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தேன். பின்னர் பாதுகாப்பு சபையில் இதுகுறித்து பேசினேன். இது குறித்து பிரதமர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளை தொடர்பு கொண்டு அடுத்த கட்டம் குறித்து பேசினேன். இனியொரு சம்பவம் இடம்பெறாது இருக்கவும் இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை கண்டறிய சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ள்ளேன். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் இடம்பெற்ற சந்திப்புகள், கலந்துரையாடல்களின் போதும், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் அனைவருடன் பேசினேன், அதன் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் அனைவருடனும் பேசினேன், சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரவழைத்து பேசினேன். இதில் சகலரும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் பல யோசனைகள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் சர்வமத தலைவர்களை அழைத்து அவர்களுடனும் பேசி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுத்தேன். பாதுகாப்பு சபை கூட்டத்தில் நாம் இது குறித்து கலந்துரையாடியிருந்தோம்.
பின்னர் ஊடக பிரதானிகளை அழைத்தும் பேசினேன். இப்போதுள்ள நிலைமையில் நாட்டின் சூழ்நிலை குறித்து ஊடகம் கையாள வேண்டிய நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்தோம். பின்னர் வர்த்தக பிரதிநிதிகளை அழைத்து சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் நடவடிக்கை குறித்து பேசினேன். அதற்கு பின்னர் ஆளுநர்கள் அனைவரையும் வரவழைத்து சகல மாகாணங்களின் நிலைமைகள், என்ன செய்ய வேண்டும், பொதுமக்கள் பாதுகாப்பு, மாணவர்களின் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் பேசினேன். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் , முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் என்னை சந்தித்து தேசிய பாதுகாப்பு குறித்து முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஒன்றினையும் வழங்கினார். அதனை நான் அடுத்த பாதுகாப்புக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவை குறித்து எடுக்கவேண்டிய ஆலோசனைகளை வழங்கினேன். அதன் பின்னர் வர்த்தகத் துறை பிரதானிகளை சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த அனைத்து செயற்பாடுகளும் நான் தனியாக எடுத்த தீர்மானம் அல்ல. பிரதமர், அமைச்சரவை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவசியமான பலரை இணைத்து இந்த தீர்மானங்களை முன்னெடுத்தேன். பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கு தேவையான நபர்களை இணைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றேன். பாதுகாப்பு அமைச்சின் பிரதான பதவிகளில் மாற்றங்களை செய்துளேன். பாதுகாப்பு படைகளுக்கு விசேட அதிகாரங்களை கொடுத்துள்ளேன். குற்றவாளிகளை கைதுசெய்யும் சகல நடவடிக்கைகளையும் முன்னேடுத்துள்ளேன். இன்று பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. எனினும் விமர்சனங்கள் இன்னும் உள்ளன. ஆனால் இது குறித்து முழுமையான அறிவுடன் அனைவரும் பேச வேண்டும்.
இந்த பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல. இது சர்வதேச பிரச்சினை, இந்த பிரச்சினை குறித்து பின்னணி தெரியாது பலர் பேசுகின்றனர். கண்மூடித்தனமாக இந்த பிரச்சினை குறித்து பேசுகின்றனர். ஆகவே இது குறித்து அனைவரும் முதலில் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும். இன்று பாதுகாப்பு துறையின் முழுமையான ஒத்துழைப்பில் நாட்டினை மீட்டுள்ளோம் என்பதே உண்மை. இப்போதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பலர் சந்தேக நபர்கள். இதுவரை நேரடிக் குற்றத்தில் சிலர் தொடர்புபட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் முக்கியமான பயங்கரவாதிகள். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் அரச உடைமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தாக்குதலுக்கு சிறு உதவிகளை செய்த நபர்களுக்கு பிரதான பயங்கரவாதிகளினால் ஒரு நபரிடம் 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளன. புலனாய்வுத் துறையினால் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 15 வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட வகையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணை வெற்றிகரமாக முன்னகர்கின்றது.
அதேபோல் இந்த பயங்கரவாத பின்னணியை பற்றி பார்க்கவும் வேண்டும். 9/11 தாக்குதலில் அமெரிக்கா மிகவும் மோசமாக முகங்கொடுக்க நேர்ந்தது. பலமான அமெரிக்காவினால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாமல்போனது. அதேபோல் ஐரோப்பாவில் பல நாடுகளும் இந்த அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருகின்றன. இதையெல்லாம் அவர்களால் தடுக்க முடியவில்லை. மாறாக இந்த பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். இதில் ரஷ்யா மட்டுமே சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. மேலும் நாம் 30 வருடங்கள் யுத்தத்துடன் வாழ்ந்த மக்கள். குண்டுகளுடன் வாழ்ந்துளோம். இப்போது இந்தத் தாக்குதல் தான் எமது முதல் தாக்குதல் அல்ல. இந்த நாட்டில் 6 வது ஜனாதிபதி நான், எனக்கு முன்னர் இருந்த 5 ஜனாதிபதிகளின் காலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன. அதனை மறந்துவிட வேண்டாம். ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும். இன்று சர்வதேச பயங்கரவாதத்திற்கு நாம் அனைவரும் முகங்கொடுத்து வருகின்றோம். இந்த தாக்குதல் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்த தாக்குதலில் இயக்குனர் எங்கிருந்தோ தாம் தான் காரணம் என்றார். ஆகவே இது குறித்து நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். இந்த அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என சர்வதேசம் நம்பிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதலின் பின்னர் மீண்டும் உருவாகியுள்ளார் என்றபோது சர்வதேசமே வியப்பில் உள்ளது. எம்மை விட பலமான நாடுகளுக்கு இது பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சர்வதேச பயங்கரவாதம் குறித்து நான் படித்து தெரிந்த காரணிகள். கடந்த 10 நாட்களில் இவற்றை நான் படித்து அறிந்துகொண்டேன். இந்த நான்கு எழுத்து பயங்கரவாதத்தின் பெயரை நாம் பாவிப்பது அவர்களை நாம் அங்கீகரிகப்பதை போன்று ஆகிவிடும். சர்வதேச தலைவர்கள் எவரும் இதனை அங்கீகரிக்கவில்லை. நானும் அதனையே கையாள்கின்றேன். அதேபோல் இந்த பயங்கரவாதம் எதனை இலக்கு வைக்கின்றது என்றால் இது மேற்கத்தேய கொள்கைக்கு எதிரான போராட்டம். அமெரிக்க பிரஜைகள், வெள்ளையர்கள், கிறிஸ்தவர்கள் தான் இவர்களின் இலக்காக்கும். இப்போது இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டினை பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் சகல அரசியல்வாதிகளின் மூலமாகவும், மதத்தலைவர் அனைவரதும் கடமை. நாட்டின் முஸ்லிம் மக்களை பார்த்தால் சிங்கள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் முஸ்லிம் மக்களும் அதே அச்சத்தில் உள்ளனர். இந்த தாக்கம் தமிழ் மக்களையும் பாதித்துள்ளது எனபது அறிந்துகொள்ள முடிகின்றது.
இன்று நாட்டுக்குள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட 150க்கும் குறைவான பயங்கரவாத நபர்கள் உள்ளதாக புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. அவர்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளுவதா என்பதை யோசிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் காலத்தில் சகல தமிழரும் புலிகள் என்ற கருத்து உருப்பெற்றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்பட்டது. 83 கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை அடுத்து தமிழ் இளைஞர்கள் புலிகளில் இணைந்தனர். நாம் தமிழர் மீதான அவ நம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகால யுத்தத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. ஆகவே இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவதிகள் என பார்க்க வேண்டாம். அதேபோல் எமது பாதுகாப்பு படைகள் மற்றும் எமது புலனாய்வு குறித்து நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். பாதுகாப்பு படைகளுக்கு நான் அதிகாரம் கொடுத்துள்ளேன். நான் இன்று முழுமையான அதிகாரங்களை இராணுவத்துக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் தமது கடமையை சரியாக செய்து வருகின்றனர். புலனாய்வு, பாதுகாப்பு படை, பொலிஸ் துறையை புனர்நிர்மாணம் செய்து வருகின்றேன். கடந்த காலங்களில் பொலிஸ் துறைக்கு அதிகாரம் வழங்கவில்லை. நான் இவற்றை பொறுப்பேற்ற பின்னர் மாற்றியமைத்தேன். எவ்வாறு இருப்பினும் இன்று பாதுகாப்பு படைகள் பலமாக உள்ளன. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சகலரும் கைதுசெய்யப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் இது குறித்து நான் பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன்.
ஆனால் பயங்கரவாதம் என்பது உலகத்தில் எங்கு எப்போது உருவாகும் என்பதை எவராலும் தெரிவிக்க முடியாது. உலக தலைவர்கள் எவராலும் இதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இப்போது நாட்டில் இன ஒற்றுமையே வேண்டும். சகல மக்களுன் இணைந்து செயற்பட வேண்டும். அதனையே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அரசியல் பிரிவினை இல்லாது இதில் நாம் செயற்பட வேண்டும். ஒரு சிலர் என்னையே இந்த அமைப்பின் தலைவர் என்ற வகையில் விமர்சித்து வருகின்றனர்.ஆனால் இந்த விடயத்தில் சகலரும் இணைந்து நாட்டினை மீட்டெடுக்க வேண்டும். யாரும் யாரையும் குற்றம் சுமத்தாது நாட்டின் நிலைமையை விளங்கிக்கொண்டு மக்களுக்கு அமைதியான நாட்டினை உருவாக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli