இலங்கையை மாத்திரமல்ல முழு உலகையும் ஒருகனம் அதிர்ச்சியில் உறைச்செய்த ஏப்ரல் 21 ஆம் திகதிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் உயிர்ப்பலிகள் தொடர்ந்தும் எம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களே கடந்துவிட்ட நிலையில் முஸ்லிம்கள் நாம் இன்று புனித ரமழானில் சங்கமமாகியுள்ளோம்.
‘ரமழான் மாதம் எத்தகையதெனில் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது’ என அல்லாஹ் ரமழான் மாதத்தின் சிறப்பு பற்றி குர்ஆனில் கூறியுள்ளான்.
இத்தகைய சிறப்புமிக்க மாதத்தினை நாம் வரவேற்றிருக்கும் இன்றைய தினத்தில் ஏனைய வருடங்களை விடவும் எமது மகிழ்ச்சியில் கீறலொன்று வீழ்ந்திருப்பதை எம்மால் உணர முடிகிறது. இதுவரை காலம் நாம் கருணை மிக்கவர்கள், பொறுமைசாலிகள், நேர்மையானவர்கள், ஏனைய மதங்களைக் கௌரவப்படுத்து பவர்கள் என நிரூபித்து வந்துள்ளோம். ஆனால் ஏப்ரல் 21 ஆம் திகதி எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் அனைத்தையும் திசைதிருப்பிவிட்டன.
இன்று முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் சந்தேகம் பரப்பப்பட்டுவிட்டது. எமது சொந்த நாட்டில் நாம் அந்நியர்களாக, தீவிரவாதிகளாகவே நோக்கப்படுகிறோம்.
சமூகத்தின் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட, இஸ்லாம் அங்கீகரிக்காத தாக்குதல்களே இதற்குக் காரணமாகும்.
இந்நிலையில் ரமழானில் நாம் நாட்டினதும், அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்புக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். பாதிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களைப் பலிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களின் சோகத்தில் பங்குதாரர்களாக வேண்டும்.
நோன்பு காலத்தில் ஆடம்பரமான இப்தார் ஏற்பாடுகள், பள்ளிவாசல்களில் பாரிய அளவிலான கஞ்சி ஏற்பாடுகள் என்பனவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
எமது நாட்டில் 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் இளைஞர்களின் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பனவற்றில் முழு சிங்கள சமூகமும், முழு தமிழ் சமூகமும் ஈடுபடவில்லை. இந்தப் போராட்டங்களுக்கு முழு சமூகத்தையும் குற்றம் சுமத்த முடியாது. இதேபோன்று 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலைகள் ஒரு சிலராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் முழுவதும் எமது வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் ஒலி பெருக்கிகளும், வானொலிகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் அயலவர்களையும் ஏனைய இனத்தவரையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தக்கூடாது. ஒலி மாசடைவது தவிர்க்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் எமது இளைஞர்கள் பாதைகளிலும் மற்றும் இடங்களிலும் விளையாடுவதைத் தவிர்க்கவேண்டும்.
ரமழான் பொறுமை காக்கும் மாதம் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. நேற்று முன்தினம் நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சம்பவங்கள் பொறுமை இழக்கப்பட்டதனாலேயே நிகழ்ந்துள்ளன.
‘முஸ்லிம் சகோதரர்கள் மீது கை வைக்க வேண்டாம் என கத்தோலிக்க சகோதரர் களிடம் வேண்டிக்கொள்கிறேன். அது எமது கத்தோலிக்க மத தர்மத்துக்குச்செய்யும் நிந்தனையாகும். நாம் மத தர்மத்துக்கு அமைய வாழ்வோமென்றால் எந்த மதத்துக்கும் எதிராக செயற்பட மாட்டோம். அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களை ஆயுதமாகக்கொள்ள வேண்டாம். பொறுமையுடன் செயற்படுங்கள்’ என பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் நீர்கொழும்பு சம்பவத்தினையடுத்து அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாம் மதமும் இதனையே போதித்துள்ளது. நாம் இஸ்லாமிய போதனைகளை சரியாகக் கடைப்பிடித்தால் எந்த மதத்துக்கும் எதிராகவும் செயற்பட மாட்டோம். முஸ்லிம்கள் நாம் இதை நிரூபிக்க வேண்டும். எம்மில் ஊடுருவியுள்ள தீய சக்திகளைக் களைந்தெறிவதன் மூலம் இதனை நிரூபிக்கலாம்.
எமது ஆடம்பர நிகழ்வுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்து துயருற்றுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம். உதவிகள் புரிவோம். எமது இந்தச் செயல்கள் முஸ்லிம்கள் கருணையுள்ளவர்கள். ஏனைய மதங்களையும் அரவணைப்பவர்கள் என்ற மனோநிலையை நிச்சயம் அவர்களிடத்தில் உருவாக்கும்.
இதற்கெனவே அல்லாஹ் எமக்கு ரமழானை இன்று அனுப்பி வைத்துள்ளான். ரமழானின் அருள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி எமது பாதுகாப்பினையும் சக வாழ்வினையும் நிச்சயம் உறுதி செய்யும் என்பதில் நம்பிக்கை வைப்போம்.
-Vidivelli