கிழக்கு ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும்
கவிந்த, அப்புஹாமி எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்று அங்கு அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு திறந்த கல்வி வசதிகளை வழங்கவேண்டும். அத்தோடு சமயத்தை முதன்மையாகக் கொண்டு நாட்டினுள் இயங்கும் கட்சிகள் தடைசெய்யப்படவேண்டும். இதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ள 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
‘‘நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பாதுகாப்புப் பிரிவினர் அப்பாவி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாததினாலேயே உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இவ்வாறான சூழ்நிலையில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் விரல் நீட்டிக்கொண்டிருப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் நாட்டு மக்கள் அனைவரதும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவராக இருக்கவேண்டும்.
கத்தோலிக்க மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சொந்தங்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அடிப்படைவாதிகள் ஏனைய இன மக்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்களை நடத்தலாம். இதனால் மீண்டும் உயிர்கள் காவு கொள்ளப்படலாம். அதனால் நாம் உங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். இவற்றை நீங்கள் கவனத்தில்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனக் கோருகிறோம்.
*கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் அரசினால் கையேற்கப்பட வேண்டும். அங்கு அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு திறந்த கல்வி வசதிகளை வழங்கவேண்டும்.
*சமயத்தின் அடிப்படையில் இயங்குவதற்கு நாட்டினுள் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் இடமளிக்கக் கூடாது. அவ்வாறான கட்சிகள் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும்.
*பிரதான நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியலை முழுமையாக மறந்து இச்சந்தர்ப்பத்தில் நாட்டைப்பற்றி மாத்திரமே சிந்தித்து உரிய தீர்வுகளைப் பொறுப்புடன் நிறைவேற்றிச் செயற்பட வேண்டும்.
*இலங்கையிலுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் அனைவரையும் ஒரு முகாமில் ஒன்றிணைக்க வேண்டும். நாட்டினதும், அவர்களதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.
*நாட்டின் அனைத்து மக்களினதும் வீடுகளில் பொலிஸ் மற்றும் இராணுவம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்புக்காக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
*சட்டம், ஒழுங்கு அமைச்சு பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படல் வேண்டும்.
*நாட்டில் அசாதாரண நிலையொன்று உருவாகாமல் தடுத்து, நாட்டின் சமாதானத்தைப் பாதுகாக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை உட்பட மதத் தலைவர்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்புகளைப் பேணுவதற்கு பாதுகாப்புப் பிரிவில் அதிகாரியொருவரை நியமிக்கவேண்டும்.
*நாட்டிலுள்ள பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.
* இனவாதம் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்கும் அனைத்து சமய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்படவேண்டும்.
*தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் தாங்கள் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தின் பிரதிகள் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.
-Vidivelli