இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடந்த சனிக்கிழமை தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பள்ளத்தாக்கின் 320 இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மையங்கள், நிலக்கீழ் களஞ்சியசாலைகள், ஹமாஸ் அமைப்பின் இராணுவ மத்திய நிலையங்கள் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகியன இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளரான அவிசாயி அட்ராயீ தெரிவித்தார்.
இஸ்ரேலின் வான் தாக்குதல் காரணமாக கடந்த சனிக்கிழமை தொடக்கம் இரு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் உள்ளடங்கலாக 25 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் தொடர்புபட்ட தளங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதனால் பதின்மவயது இளைஞர் ஒருவர் உட்பட 4 பலஸ்தீனர்கள் உயிரிழந்து 51 பேர் காயமடைந்ததை அடுத்தும் காஸா பள்ளத்தாக்கு மீதான தசாப்தகால ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகைக்கு எதிரான ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்றினை அடுத்தும் காஸா பள்ளத்தாக்கில் மோதல்கள் தீவிரமாகின.
இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகள் மீது பலஸ்தீன பகுதிகளிலிருந்து 600 எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மூவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
-Vidivelli