தற்போதுள்ள நிலையில் நாம் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் எங்கள் முன்னுள்ளன. நாம் முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏதும் பாதிப்புகள் நிகழும் பட்சத்தில், அது பயங்கரவாதிகளுக்கு பெரும் வெற்றியாகவே அமையும் என்று தேசிய பாதுகாப்புத் துறை தொடர்பான நிபுணரும் பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வு மையப் பணிப்பாளருமான கலாநிதி ஹரிந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டில் கோர விளைவுகளை ஏற்படுத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் எதிரொலியாக எழுந்துள்ள தேசிய பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக லங்காதீப வார இதழ் ஊடகவியலாளர் பிரியந்த கொடிப்பிலி வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கலாநிதி ஹரிந்த மேலும் கூறியதாவது, இலங்கை முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு இங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியாது. இஸ்லாமிய மக்களூடாகத் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தை இங்கிருந்து விரட்டியடிக்கலாம். அதே போன்றதொரு தவறை நாம் 1983 ஆம் ஆண்டு செய்துள்ளோம். நாம் அன்று தமிழ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னர், தமிழ் மக்களைப் பகைத்துக் கொண்டாம். அதன் பயங்கர விளைவை நாம் 30 வருடங்களாக அல்லல்பட்டு அனுபவித்தோம். இஸ்லாமிய மக்களுடன் பகைமையை ஏற்படுத்திக்கொள்வோமானால் இதனை விடவும் பாரிய விளைவுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது போகும். இன்றைய நிலையில், இஸ்லாமிய தேசத்துடன் தொடர்புள்ள வழிதவறிச் சென்றுள்ள வாலிபர்களை நாம் இனம்கண்டு கொள்வது முக்கியமாகும். எமது தேசிய பாதுகாப்புக் குறித்து இன்று தீர்மானம் எடுக்கின்ற எமது அரசியல் தலைவர்கள் இது விடயமாக சிந்திக்க வேண்டும்.
தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளித்து எமது அரசியல் தவைர்கள் நடந்து கொள்ளும் முறையால் தேசிய பாதுகாப்புக்குத்தான் அச்சுறுத்தலாக அமைகிறது.
நாடொன்றில் ஆட்சி அமையப்பெற்றவுடன் அதன் தலையாய கடமையாக அமைவது தேசிய பாதுகாப்பாகும். பாதுகாப்புத்துறை, இராணுவம் என்பன அரசின் பொறுப்பில் வருகின்றன. நாட்டின் நிலப்பரப்பு, சுயாதீனம் என்பவற்றுக்குப் புறம்பாக அன்றாட தேவையாக பாதுகாப்பு இயந்திரமே பிரதான பாகமாக விளங்குகிறது. இதில் உள்நாட்டு – வெளியுலகப் பாதுகாப்பு ஆகிய இரண்டுமே உள்ளடங்குகின்றன. தேசிய பாதுகாப்பின் அடிப்படை தர்மங்களாக இவை கணிக்கப்படுகின்றன.
வெளியுலகிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதும் உள்நாட்டில் தலையெடுக்கும் அரசியல் ஊடாட்டங்கள் உள்ளிட்ட நாட்டிற்கு எதிராக கிளர்ந்து வரும் சகல அச்சுறுத்தல்கள், சவால்களிலிருந்தும் நாட்டுக்குப் பாதுகாப்பு வழங்குவதுமே தேசிய பாதுகாப்பு எனப்படுகிறது. மக்கள் நாட்டின் ஒரு பகுதியாகும். எனவே மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவை அனைத்தும் சேர்ந்தே தேசிய பாதுகாப்பு எனப்படுகின்றது.
தற்போது உலகிலுள்ள நாடுகள் தேசிய பாதுகாப்பை முன்னிலைப் படுத்திக்கொண்டு அடக்குமுறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றில் மனித உரிமைகள், சிவில் உரிமைகள், மொழிச்சுதந்திரம் போன்றனவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்ற முறைப்பாடும் முன்வைக்கப்படுகின்றது.
உலக நாடுகளில் கடந்த பதினைந்து இருபது வருடங்களாக பாதுகாப்புச் சூழல் பெருமளவில் விஸ்தரிப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும் அதிலும் திருப்தி காணாத சிந்தனையே நிலவி வருவதைக் காண்கிறோம். இலங்கையில் பாதுகாப்பு நிலைமை திருப்தி, அதிருப்தி என்று இரு வகைகளிலும் விமர்சிக்கப்படுகிறது.
30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றி கொண்டமையை திருப்தியாகக் குறிப்பிடப்படுகிறது. அதேவேளை மறுபுறத்தில் தேசிய பாதுகாப்புக் குறித்தும் சவால் உள்ளது. அதே போன்று நல்லிணக்கம் தொடர்பாகவும் சவால் உள்ளது. கடந்த காலங்களில் இவ்விடயங்கள் தொடர்பாகவே பேசப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் இவ்விடயம் மேலும் உக்கிரமடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பே அரசாங்கம் ஒன்றின் பிரதான கடமையாகும். இதனூடாகவேதான் அரசாங்கத்தின் பலம் நோக்கப்படுகிறது. எமது நாட்டின் பாதுகாப்பு ஒருவகையில் அரசியல் ரீதியாக பிளவு பட்ட கதையாகவே உள்ளது. இதே போன்றே எமது நாட்டின் பெரும்பாலான விடயங்களின் அடிப்படை அரசியல் மயமாகவே உள்ளன. அத்துடன் அவற்றில் தனிநபர் தலையீடுகளும் புகுத்தப்பட்டுள்ளன. இதனாலேயே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: தேசிய பாதுகாப்பு குறைந்ததன் பிரதிபலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமல்லவா?
பதில்: கடந்த சில தினங்களுக்கு முன் இடம் பெற்ற நிகழ்வை நாம் இரு வகைகளில் நோக்கலாம். இது யார் செய்த தவறு என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும். இதனை விட இந்த அசம்பாவிதம் ஊடாக எமது தேசிய பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றை சீர்படுத்திக் கொள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்புக் கூறவேண்டியது அரசாங்கமாகும். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உள்ளிட்டோர் மீதுள்ள பொறுப்பாகும். ஆனால் அரசியல் யாப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சகல அதிகாரங்களும் ஜனாதிபதியின் பொறுப்பிலேயே உள்ளன.
எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல்கள் எவை என்பதைத் தேடிப்பார்த்தால் நாம் பல புறத்திலும் சிக்கலுக்குள்ளேதான் தள்ளப்பட்டிருக்கிறோம். எமது நாட்டைச் சூழவுள்ள புதிய பூகோள அரசியல் முறைமையூடாகவேதான் எமது தேசிய பாதுகாப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு தரப்பு சார்ந்தோரும் உள்ளனர். பலம்வாய்ந்த நாடுகளும் உள்ளன. அவர்கள் விரும்புகிற பூகோள அரசியலை முன்னோக்கியே எமது வலயத்தைச் சூழவுள்ள பிராந்தியத்தில் பாதுகாப்பு மூலோபாயச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய எந்த நாடாகவிருந்தாலும் சரி, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய முறைமையே பாதுகாப்புப் போர்வையில் எம்மீது திணிக்கின்றன. எங்களை விட அவர்களுக்கே அத்தேவை பிரதானமாகவுள்ளது. எனவே இந்து சமுத்திரப் பாதுகாப்புச் சவால் எமக்கும் சவாலாகவே உள்ளது. உலகில் தலைதூக்கிய பயங்கரவாத அச்சுறுத்தல் எமக்கும் சவாலாகவே அமைந்துள்ளது. கடந்த தசாப்தங்களில் அது புது முகம் காட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் முஸ்லிம் நாடுகளில் அமைப்புக்கள் ரீதியாக தலைதூக்கின. 2001 செப்டம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் தலைமையிலான நேசநாடுகள் ஒன்றிணைந்து அல்கைதாவுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கின. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தலை தூக்கியது. இவ்வமைப்பின் செயற்பாடு அதிபயங்கரமானது. மனிதாபிமானமற்றது. பாரிய இலக்கொன்றை முன்னெடுத்து இவர்களது நகர்வு அமைந்துள்ளது. அடிப்படைவாத சிந்தனையுள்ள இஸ்லாமிய வாலிபர்கள் இவர்களுடன் இணைந்தனர்.
இஸ்லாமிய தேசம் என்பதே இவர்களின் எண்ணக்கருவாக இருந்தது. உலகின் பல பாகங்களிலிருந்தும் இஸ்லாமிய வாலிபர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று இவ்வமைப்பில் இணைந்து போரில் ஈடுபட்டனர். உலகில் எந்த இடங்களிலும் வன்முறைகளில் ஈடுபடும் வகையில் இவர்கள் தூண்டப்பட்டனர். தமது கொள்கையை ஏற்காதோர், கொள்கைக்கு முரண்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்லவேண்டும் என்று போதனையூட்டுகின்றனர். அப்போதுதான் சுவர்க்கத்தை அடையலாம் என்றும் ஆசையூட்டுகின்றனர். இத்தகைய அமைப்புக்களில் இணைந்த பின்னர் அரசு மற்றும் அரச பாதுகாப்புக் குறித்து எத்தகைய நிலைப்பாடு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்கள். பாதுகாப்பு முறைமை, எந்த நிறுவனமோ, இராணுவ கெடுபிடிகளோ இருந்தாலும் கூட அவையெல்லாம் இவர்களுக்கு வெறும் தூசாகவேதான் தென்படும்.
இத்தகைய தீவிரவாத அச்சுறுத்தல் ஒன்று இலங்கையிலும் சில வருடங்களுக்கு முன்னர் தலைதூக்கியது. இஸ்லாமிய தேசத்துடனான தொடர்புக்கான வித்து இலங்கையிலும் விதைக்கப்பட்டது. இதுதான் நாம் தவறிவிட்ட இடமாகும். இவர்களது அச்சுறுத்தல்கள் குறித்து எமது புலனாய்வுத்துறையினர் முன்னெச்சரிக்கை விடுத்தும் அது அசட்டை செய்யப்பட்டுள்ளது. அதன் பிரதிபலனையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தகைய தீவிரவாத அச்சுறுத்தலை அடக்குவதற்கு அமெரிக்கா போன்ற பலம்வாய்ந்த நாடுகளாலும் இயலாமல் போயுள்ளது.
இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் இலங்கையின் தேசிய பாதுகாப்பு முறைமையிலும் தளர்வை ஏற்படுத்தியமையும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. சோதனைச் சாவடி– செக்பொயின்ட்களும் குறைக்கப்பட்டமையை இங்கு குறிப்பிடவேண்டும். அமெரிக்கா குறிப்பிடத்தக்களவு சுதந்திர நாடாகவிருந்த போதிலும் அங்குள்ள பல பாதுகாப்புத் தடைகளைத் தாண்டியேதான் அந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும். ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிலும் இதே பாதுகாப்பு முறைமையேதான் அமுலில் உள்ளது.
எமது விமான நிலையங்கள் ஊடாக வருவோர், வெளியேறுவோர் யார் யார் என்றெல்லாம் மொனிட்டர் பண்ணும் முறையொன்றும் இங்கிருப்பதாகத் தெரியவில்லை. எமது பாதுகாப்புத்துறை முன்னணியில் உள்ளது. அவர்கள் நல்ல திறமைசாலிகள். ஆனால் அவர்களை வழிநடத்தக்கூடிய சிறந்த அரசியல் தலைமையொன்றே இன்றைய தேவையாகும்.
vidivelli