பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே நல்லது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு
நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்து அதனையே நடைமுறைப்படுத்துவது ஆரோக்கியமானதாகும். எனினும் கால தேவையை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்போமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.
புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் குறித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டினை வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் இப்போது சற்று அச்சுறுத்தலான சூழல் நிலவுகின்றது. இது குறித்து எமது அதிருப்தியையும் நாம் வெளியிட்டுள்ளோம். அதேபோல் இந்த சூழலில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. எனினும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கலந்துரையாடல்கள் இதற்கு முன்னர் உருவாகிய நேரங்களில் தற்போதிருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தில் போதிய திருத்தங்களை செய்து இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆரோக்கியமான விடயமாக இருக்கும் என்பதையே நாம் நிலைப்பாடாகக் கொண்டிருந்தோம். சில அநாவசிய சரத்துக்கள் நீக்கப்பட்டு மக்களை பாதிக்காத அதே வேளையில் தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சரத்துக்களை உள்ளடக்கி இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.
ஏனெனில், புதிதாகக் கொண்டுவர எத்தனிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மக்களை பாதிக்கும் பல விடயங்கள் உள்ளன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. ஆகவேதான் நாம் அவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருந்தோம். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் இறுதியான நிலைப்பாடு ஒன்றினை எட்டவில்லை. இந்த வாரத்துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடும். இதில் இந்த விவகாரம் குறித்து நாம் கலந்துரையாடவுள்ளோம். அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது குறித்த இறுதியான நிலைப்பாட்டினை எட்டும். எவ்வாறு இருப்பினும் மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாம் ஆதரிக்க மாட்டோம் என்றார்.