படையினரின் தேடுதல்கள் போது முஸ்லிம்களுக்கு அசெளகரியங்கள்
பிரதமரை சந்தித்து முஸ்லிம் தூதுக்குழு நேரில் முறைப்பாடு
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு கருதி தினந்தோறும் பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள், கைப்பற்றப்படும் ஆயுதங்கள் உட்பட ஏனைய பொருட்கள் தொடர்பான விபரங்களை மூன்று நாட்களுக்கு ஒருமுறை முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் உட்பட முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். இந்த அவசர சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் சமூக பிரதிநிதிகள், தற்போது பாதுகாப்புப்பிரிவினர் சந்தேகத்துக்கிடமான இடங்கள் என்று தேடுதல் நடவடிக்கைகளின்போது அல்குர்ஆன் அவமதிக்கப்படுகின்றமை, ஹிஜாபை கழற்றுகின்றமை, முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகின்றமை, பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கையின்போது பள்ளிவாசல்களின் புனிதம் கெடுகின்றமை, விசாரணைகளின்போது சி.சி.ரி.வி. கமராக்களை செயலிழக்கச் செய்யுமாறு கோருகின்றமை போன்ற முறைப்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்தனர்.
இதனையடுத்து இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம் இதனைக் கவனத்திற்கொள்ளுமாறு பிரதமர் வேண்டிக்கொண்டார்.
பிரதமரின் உத்தரவுக்கமைய பாதுகாப்புப் பிரிவும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து குறிப்பிட்ட 3 தினங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விபரங்களைப் பரிமாறிக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புகளின்போது ஊடகங்களை பாதுகாப்புப் பிரிவினர் அழைத்துச் செல்லக்கூடாது என முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டிக்கொண்டனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் தவறான கருத்துகளைத் தெரிவிப்பதால் இனங்களின் உணர்வுகள் மேலிடுவதற்கு காரணமாய் அமைகின்றன எனவும் சுட்டிக்காட்டினர்.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒத்துழைத்து வருகின்றது. எனவே முஸ்லிம் சமூகம் சந்தேகங்கொண்டு நோக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வேண்டிக்கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ. ஹலீம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். பௌஸி, முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, உதவித் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
vidivelli