நாட்டில் பயங்கரவாத நிலைமையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து சமயத் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் மதரீதியாக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை அனைத்து மதத் தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவிக்கையில்,
புர்கா அணிவது இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்பட்டிருக்குமாக இருந்தால் அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதனை ஆதரிப்பது சாதாரண விடயமாகும். ஆனால் தமது மதத்தில் கூறப்பட்டுள்ள ஒருவிடயம் ஏனைய மதத்தை பின்பற்றுபவர்களின் தலையைக் கொய்வதைப் போன்று இருந்தால் அதுபற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
அனைத்து மத சம்மேளன தலைவர் இத்தேபானே தம்மாலங்கார தேரர் தெரிவிக்கையில்,
புர்காவை தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதானமான இருவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறிருப்பினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஸ்திரமற்ற நிலைமையை கூடிய விரைவில் சரிசெய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாடு மீண்டும் அழிவை நோக்கி பயணிப்பதற்கு இடமனிக்காமல் எம்மில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
அ.இ.ஐ. உலமா சபையின் ஊடக செயலாளர் பாஸில் பாரூக் தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக புர்கா அணிந்துள்ள பெண்கள் அதனை நீக்கிக் கொள்வதற்கு விரும்பாவிட்டால் அவர்கள் தாராளமாக வீட்டிலேயே இருந்து கொள்ள முடியும். அதே வேளை வெளியிடங்களுக்கு செல்பவர்கள் நிச்சயமாக முகத்தை மறைக்காமல் செல்ல வேண்டியது அவசியமாகும் என்றார்.
-Vidivelli