முக்கிய தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

0 827

நாட்டின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடைசெய்யப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்பு கருதியும், ஒருவரை அடையாளம் காண்பதற்காகவும் வேண்டி இச்சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று முதல் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியதான புர்கா மற்றும் நிக்காப் ஆடைகளை அணியமுடியாது.

அண்மையில் நாட்டில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து 253 பேர் பலியானதைத்தொடர்ந்து ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை அவசரமாக மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்தை பெரும்பான்மையான முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர்.

புர்கா மற்றும் ஹிஜாபைத் தடைசெய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. “புர்கா பற்றி முஸ்லிம் தலைவர்களிடம் வினவினேன். புர்கா முஸ்லிம்களின் சம்பிரதாய பூர்வமான இஸ்லாமிய ஆடை அல்ல என அவர்கள் தெரிவித்தார்கள்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் புர்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நிலையிலே ஜனாதிபதி முஸ்லிம் பெண்கள் முகத்தினை மூடி அணியும் கலாசார உடைக்கு தடை விதித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமைகளையடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்காவைத் தடைசெய்ய வேண்டும் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள வலியுறுத்தி வந்தமையை நாம் அறிவோம். அத்தோடு அனைத்துப் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவியர் புர்கா, நிக்காப் அணிந்து செல்ல வேண்டாம் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் வேண்டியிருந்தார்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகள் இலங்கையில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. முஸ்லிம் பெண்கள் புர்கா, நிக்காப் அணியக்கூடாது என பல அமைச்சர்களும் வலியுறுத்தி வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் தலதா அத்துக்கோரள இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இந்தத் தடைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் ஆதரவாக உள்ளனர். மதத்தலைவர்களும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். இப்போதும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பினால் பல இரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் இத்தடை நியாயமானது என ஏற்றுக்கொள்வார்கள் என அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்தே ஜனாதிபதியின் இந்த தடையுத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும், நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடையணிந்து பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாமென கோரிக்கையொன்றினை விடுத்திருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் முகத்தை மூடி இருப்பவர் யார் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் பீதியில் இருக்கிறார்கள் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் புர்கா, நிக்காப் தொடர்பான அனைத்துப் பீதிகளுக்கும் ஜனாதிபதியினால் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டாண்டு காலம் தங்களது முகங்களை மூடி ஆடை அணிந்து பழக்கப்பட்ட எமது பெண்களுக்கு இது கவலையளிக்கலாம். சிரமமாக இருக்கலாம். ஆனால் தீவிரவாதத்தையும், மனிதப் படுகொலைகளையும் நிறுத்துவதற்கு தாம் பங்காளர்களாகிறோம் என்று அவர்கள் திருப்திப்பட முடியும். ஏனைய சமூகமும் எம்மை சந்தேகக் கண்கொண்டு நோக்குவதைத் தவிர்க்க முடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.