அனைவரையும் கைது செய்து பூண்டோடு ஒழிக்க வேண்டும்
சிங்கள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வார இறுதி சிங்கள பத்திரிகை (அனித்தா)வுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்புலம், விளைவுகள் என்பன பற்றியெல்லாம் விளக்கமளித்திருக்கிறார். அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது.
Q பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் ஏனைய இனத்தவர் முஸ்லிம் சமூகத்தை சந்தேகப் பார்வையோடு நோக்குகின்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டாக வேண்டுமல்லவா?
இவ்வாறான கடும்போக்குத் தீவிரவாத சித்தாந்தத்தை எங்களது சமூகத்தில் திணிப்பதற்கு இந்த சிறு குழுவினர் முயற்சித்துள்ள போதிலும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் அதனால் ஈர்க்கப்படவில்லை என்றே நம்புகின்றோம். இவ்வாறான துவேஷக் கருத்துக்களை மையப்படுத்தி சமயத்தை பின்பற்றுங்கள் என்று கூறுவது எங்களது சமூகத்தில் அறவே எடுபடாது. இதனை அடியோடு பிடுங்கி எறியலாம். இவ்வாறானவர்களை கைது செய்யுமாறு எங்களது சமூகத்திலிருந்தே வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாதது எங்களது புலனாய்வுப் பிரிவினரினதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தரப்பினரினதும் பாரிய பின்னடைவு மற்றும் தோல்வி என்றுதான் கூறவேண்டும்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு பரந்துபட்ட அரசியல் பின்னணிகள் இருந்தன. அவர்களை சுற்றி பாரிய ஆதரவாளர் குழாமொன்று இருந்தது. மக்கள் விடுதலை முன்னணி போராட்டங்களில் ஈடுபட்ட போது அதன் சித்தாந்தத்தில் ஒருவிதமான கவர்ச்சி காணப்பட்டது. ஆனால், இவ்வாறான கொள்கைக்கு அணுவளவேனும், அந்தளவு ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையால்தான் நாங்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்தால் இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம்.
முஸ்லிம் சமூகம் இதுகாறும் இந்த நபர்களை பற்றி அபாய அறிவிப்பு விடுத்திருந்தது உண்மை. ஆனால், இவ்வளவு பெருந்தொகை செல்வம் மற்றும் குற்றமிழைக்கும் சக்தி என்பன ஒரேயடியாக அவர்களுக்கு கிடைத்திருக்குமென எண்ணியிருக்கவில்லை. நாங்களும் இந்தப் பிரச்சினையை மிகவும் சாவதானமாக தீர்த்துக்கொள்ளக் கூடியதென ஆரம்பத்தில் எண்ணியிருக்கக் கூடும். இந்தப் பிரச்சினையின் பாரதூரத்தை சரிவரப் புரிந்துகொள்வதற்கு தவறியமைக்கு அரச உயர் மட்டத்தினரிலிருந்து கீழ் மட்டத்தில் சாதாரண பிரஜை வரை தத்தமது மட்டத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்களாவர்.
Qமுஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தளவு பயங்கரமான குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டது எவ்வாறென ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர்? ஆயினும், உலகிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தி ஒரு சிலர் பாரிய அழிவை திட்டமிட்டு முன்னெடுத்தது தங்களை பாரிய சக்தியாக எடுத்துகாட்ட முயற்சித்துள்ளனர் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது அல்லவா?
இந்த விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உளவுத் துறையினதும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரினதும் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியிருப்பது இதுபோன்ற தொழில்நுட்ப அறிவை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும். இவை மிக நேர்த்தியாக, திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் என்ன, அவற்றின் அளவு எவ்வளவு, தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட இடங்களில் கூடுதலான மனிதப் படுகொலைகளை உண்டுபண்ணக்கூடிய விதத்தில் குரூரமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சிகளை வழங்கியவர்கள் இத்துறையில் பாரிய அறிவையும் அனுபவத்தையும் பெற்ற பயங்கரவாதிகள் என்பது புலப்படுகின்றன. இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளை ஓரிரு மாதங்களுக்குள் செய்வதற்கான சாத்தியங்கள் இல்லை. பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்பட கூடாதென்பதற்காக இது தொடர்பான மேலதிக விளக்கங்களை வெளியிடாமல் தவிர்த்துக்கொள்கின்றேன். ஆயினும், மிகவும் கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்பது நன்கு தெளிவாகின்றது. அவர்கள் இயன்றவரை கூடுதலான மனிதப் படுகொலைகளை செய்து சர்வதேசத்திற்கு கனதியான செய்தியொன்றை சொல்வதற்கு எத்தனித்துள்ளனர். அவர்களால் இது பற்றிய எவ்விதமான நோக்கங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
நியூசிலாந்தில் கிரைஸ்ட்சேர்ச் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடவடிக்கைதான் இதுவென அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பயங்கரவாதிகளின் திட்டம் தொடர்பாக ஊகித்து கூறப்பட்ட வெறும் அனுமானமேயாகும். ஐ.எஸ். அமைப்பு அல்லது வேறு எந்தவொரு அமைப்பும் இவ்வாறான விடயத்தை கூறவில்லை. அதாவது மனிதக் கொலைகளை மட்டுமே மேற்கொள்வது இந்த பயங்கரவாதிகளின் இலக்காகும். மாவனெல்லையில் புத்தர் சிலையை உடைத்து அநியாயம் செய்த சந்தர்ப்பத்திலும் நாம் கவலையடைந்தோம். அன்று முதல் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தவறான கருத்துக்கள் களையப்பட வேண்டுமென்ற விமர்சனமொன்றும் காணப்பட்டது.
யுத்தமொன்றின் போதுகூட குழந்தைகள், பிள்ளைகள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் ஆகியோரை கொலை செய்வது மட்டுமல்ல பயிர் பச்சைகளைக் கூட நாசப்படுத்துவதை இஸ்லாம் தடுக்கின்றது. இவ்வாறான தர்மங்களை இஸ்லாம் கூறும் போது மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் கலாசாரமாக மாற்றுவதற்கு பயங்கரவாதிகள் எத்தனித்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தின் பக்தர்கள் அல்லர். அவ்வாறான கருத்துக்களைக்கூட முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள். இதன் சூத்திரதாரியான ஸஹ்ரான் எனப்படுபவர் காத்தான்குடியிலுள்ள அரபு மத்ரஸாவொன்றில் இருந்தவர். அவரின் அடிப்படைவாத கொடூரப் போக்கு காத்தான்குடியில் இருக்கும்போதே தெரியவந்தது. தமது எதிரணி உறுப்பினரை வாளினால் வெட்ட முயற்சித்துள்ளார். அதன் பின்னர் கொடூர எண்ணம் கொண்ட அவர் காத்தான்குடியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அவர் சில காலம் தலைமறைவாகியிருந்தார். பின்னர் வெளியில் வந்தார். அப்போது அவரின் பின்னால் ஒரு கூட்டம் இருப்பதை மக்கள் போதியளவு அறிந்திருக்கவில்லை. ஆயினும், அவர் தொடர்பாக எதிர்வு கூறப்பட்டிருந்தது.
Q அவ்வாறு நோக்குமிடத்து இக்குழுவினர் சிங்கள சமூகத்தில் காணப்படுவது போன்று தீவிரவாத சிந்தனையுடையவர்கள், ஆயுதத்தைக் கைகளில் ஏந்தி மக்களை அச்சுறுத்த முற்படுபவர்களாவர். அப்படியானவர்களுக்கு மதவாத விஷமூட்டப்பட்டு பயங்கர ஆயுதங்களை வழங்கி மிகவும் மோசமான அழிவை ஏற்படுத்த முயன்றிருப்பது வித்தியாசமான ஒன்றல்லவா?
ISIS சர்வதேச பயங்கரவாத வலையமைப்புக்குள் இவர்கள் எவ்வாறு உள்வாங்கப்பட்டார்கள் என்பதை ஊகித்துக்கொள்ள முடியாதுள்ளது. இவ்வாறானவர்கள் பிரதேச மட்டத்தில் குண்டர்களைப் போல் செயல்படுவதைக் கண்காணித்து இவர்களை உள்வாங்கியிருக்கக் கூடும் என நினைக்கின்றேன். அதன் பின்னர் மதம் என்பது இதுதான் என நினைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். திட்டவட்டமாக இவர்களின் குழுவில் மேலும் சிலர் இருக்கலாம். இதனுடன் தொடர்புபட்ட சகலரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
Q அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களை முன்னெடுத்து ஆடை, அணிகலன்கள் உள்ளிட்ட கலாசாரப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் கடப்பாட்டை முஸ்லிம் சமூகம் கொண்டுள்ளதல்லவா?
அவசியமான விதத்தில் அவ்வாறான மாற்றங்கள் வரவேண்டும். மார்க்கத்தில் திட்டவட்டமாக சொல்லப்படாத விடயங்களை மார்க்கத்தில் உள்ளதாகக் கருதி பின்பற்றத் தேவையில்லை. சகோதர சமூகத்தினர் எங்களை எவ்வாறு நோக்குகின்றனர் என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், அது எங்கள் சமூகத்திலிருந்தே வரவேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.
ண்களின் ஆடை, அணிகள் குறித்துக் கூட விமர்சனங்கள் உள்ளனதானே. ஆயினும், எங்கள் சமயத்தில் இல்லாதவற்றைக் கூட பின்பற்றுவோர் உள்ளனர். அதன் உச்சத்திற்கே சென்று காரணம் கற்பிப்பவர்களும் காணப்படுகின்றனர். ஆனால், அவர்கள் கூறுகின்ற அளவிற்கு மார்க்கத்தில் ஆடை பற்றி உறுதியாக வலியுறுத்தப்படவில்லை. அவை அந்நிய நாட்டு கலாசாரங்களிலிருந்து தழுவப்பட்டவையாகும். வேற்று நாட்டு கலாசாரங்கள் சமயத்தின் பாற்பட்டவையல்ல. நாட்டின் கலாசாரத்தை சமயத்தின் தேவைப்பாடாக புரிந்து கொண்டவர்களும் இருக்கின்றனர். அவற்றை பற்றி பேசும்போது அவையே தங்களது தனித்துவம் மற்றும் பண்பாடு என கூச்சலிடுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், இந்த பேரழிவிற்கு பின் அவர்களோடு பேசிப் பயனில்லை. இப்பொழுதே அவ்வாறானதொரு கருத்தாடல் தலைதூக்கிவிட்டது. ஆயினும், அரசாங்கத்தினால் இவற்றிற்கு தடை ஏற்பட்டால் வேறு விளைவுதான் ஏற்படும். எவராவது பலவந்தமாக எதனையும் திணிக்க முற்பட்டால் நிலைமை வேறு. மாற்றமாக, அவர்களின் மத்தியிலிருந்தே உள்ளங்கமாக மாற்றங்கள் உருவாக வேண்டும். பெண்களின் உரிமையும் அவ்வாறானதே. ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு உச்சகட்ட சுதந்திரம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பெண்களின் உரிமையை கலாசாரம் என்ற கோதாவில் மறைப்பதற்கு சிலர் முயல்கின்றனர். அந்த விடயத்தில் மாற்றங்கள் அவசியமானவை. இந்த பேரழிவு மாற்றத்திற்கான காரணமாகவும் ஆக்கிக் கொள்ளப்படலாம்.
Q வணாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட பின்னரும் புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமல்லவா?
புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்கு கிடைத்த பட்டியலுக்கு ஏற்ப கருமமாற்றியிருக்கிறார்கள். ஆனால், இந்த விடயத்தில் ஓரளவாவது கரிசனையாக இருந்திருக்கலாம். மாவனெல்லை சிலை உடைப்பின் பின்னர் சந்தேக நபர்கள் சிலர் குறித்து பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் அவர்கள் ஒருவரது உறவினருடன் வணாத்தவில்லுவிற்கு போனதாக அறிந்து கொண்டார்கள். அந்த உறவினரின் காதலியின் மூலமாகத்தான் அது தெரியவந்தது. அதாவது வணாத்தவில்லுக்கு செல்வதாக காதலிக்கு செய்தியொன்று அனுப்பப்பட்டிருந்தது. காதலியிடமிருந்து தான் தகவல்கள் பெறப்பட்டன. அதில் உளவுப் பிரிவினர் உஷாரடைந்திருந்தனர். அதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ஆயினும், அவர்கள் வணாத்தவில்லுவில் கவனம் செலுத்திய அதேவேளையில் கொழும்பிலிருந்த பெரும் வர்த்தகப் பிரமுகரின் வீட்டில் இந்த தாக்குதல்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது வியப்புக்குரிய விடயமாகும். அந்த வர்த்தக பிரமுகர் இலங்கை சமூகத்தில் சமய மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தொடர்புகளை பேணிவந்த கண்ணியமாக மதிக்கப்பட்டிருந்த ஒருவராவார். நானும் அவருடன் பேசிப் பழகி இருக்கின்றேன். அவருக்குத் தெரியாமல் அவரது புதல்வர்கள் இவற்றை செய்திருக்கலாமென அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறியிருக்கின்றனர். அது உண்மையோ இல்லையோ அத்தகைய வர்த்தக பிரமுகரின் வீட்டில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பது அனுமானிக்க முடியாத விடயமாகும்.
Qகத்தோலிக்க தேவாலயங்களுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற உறுதியான தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க முடியாமல் போனமை மன்னிக்க முடியாத குற்றமல்லவா?
அதுதான் இங்கு பாரிய கேள்வியை எழுப்புகின்ற விடயமாகும். இதன் காரணமாக சில பதவிகளிலிருந்து சிலரை அகற்றலாம். அதனை செய்து தப்பிவிட முடியாது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென மக்கள் மத்தியில் ஏற்கனவே கருத்துப் பரவியுள்ளது. எனவே நாம் செய்ய வேண்டியிருப்பது எல்லோரும் ஒரு முகப்பட்டு, ஒன்றிணைந்து, மும்முரமாக ஈடுபட்டு இவற்றைச் சரிவர கண்டறிந்து பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க முன்வர வேண்டும். இலங்கைக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும். அந்த உதவிகளையும் பெற்று ஒற்றுமையுடன் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அத்துடன் அந்த அமைப்பில் புதிதாக எவரும் இணைந்து கொள்ளவிடாமல் தடுப்பதற்கும் முடியும் என எண்ணுகின்றேன்.
Qஇந்த நிகழ்வின் பின்னர் அதற்குப் பதிலளிப்பதை விட அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தலாமல்லவா?
ஒக்டோபர் நிகழ்வின் பின்னர் அரசாங்கத்தில் மாற்று கருத்துடையவர்கள் இருக்கத்தக்கதாக நம்பிக்கையை சீர்குலைக்கின்ற இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதனை யாரும் வெளிப்படையாக கண்டுகொள்ளவில்லை. வெளிப்படையாக குற்றம் சாட்டிக்கொள்ள ஆரம்பித்தால் சமூகம் வெறுப்புடன் நோக்கும் என உள்ளக பேச்சுவார்த்தைகளின் போது நான் கூறினேன். அவற்றை சுட்டிக் காட்டியபோது அதுபற்றி சிந்திப்போமென சிலரும் இன்னும் சிலர் அவ்வாறு முடியாதெனவும் கூறினர்.
பாதுகாப்பு சபை கூடுவதில் ஏற்பட்ட சிக்கல், பேரழிவின் பின்னர் படைத்தளபதிகள் சமுகமளிக்காமை முதலான விடயங்கள் தொடர்பாக உரையாடப்பட்டன. இவை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் ஏற்படலாம். இவ்வாறான தருணத்தில் அரசாங்கம், ஒன்றுபட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என நான் நினைக்கின்றேன்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் அச்ச உணர்வும், நம்பிக்கை இழப்பும் மேலும் அதிகரிக்கலாம். இவை தொடர்பாக சிறுபான்மைத் தலைவர்கள் கடுமையாகப் பேசினார்கள். எங்களுக்குள் மோதிக்கொள்ளாது ஒன்றிணைந்து சவால்களை எதிர்நோக்குவோம் எனக் கூறினேன். இது ஒரு தேசிய ஆபத்தாகும். இதன் பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். எதிர்கட்சியினரையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதனூடாகத்தான் இதனை நாம் வெற்றிகொள்ள முடியும்.
vidivelli