முஸ்லிம்கள் வழங்கி வரும் தகவலுக்கமைய தீவிரவாதிகளை முற்றுகையிட முடிகின்றது
விரைவில் அழித்தொழிக்கலாம் என்கிறார் பிரதமர்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்பு பேராயர் கர்தினால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில நடத்திய ஆராதனையில் கலந்துகொண்டேன். ஒருவார காலத்தினுள் தாக்குதல் தொடர்பான தகவல்களைத் திரட்டியுள்ளதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிஹாத் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நாம் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். ஜனாதிபதி, நான், அமைச்சரவை உட்பட முழு அரசாங்கமும் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. மேலும் 30 வருடங்கள் யுத்தமொன்றினை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் கடந்த ஞாயிறு (21) மதிய வேளையிலேயே ஆரம்பித்தோம். குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில மணித்தியாலங்களில் தெமட்டகொடையில் சந்தேக நபர்கள் சிலரைக் கைது செய்தோம். அங்கு எதிலும் அச்சமில்லாத பொலிஸ் அதிகாரிகள் மூவரின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. இது தவிர பாதுகாப்புப் பிரிவினர் எவரதும் உயிர்கள் காவு கொள்ளப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் சம்மாந்துறை, நிந்தவூர் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் ஜிஹாத் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது ஆயுதங்களை எம்மால் கைப்பற்றிக்கொள்ள முடிந்தது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வழங்கிய தகவல்களின் பேரிலேயே அப்பிரதேசத்தை எம்மால் முற்றுகையிட முடிந்தது.
அங்குள்ள வீடுகளிலிருந்து இரசாயனப் பொருட்கள் மற்றும் வெடி பொருட்கள், உபகரணங்களைக் கைப்பற்ற முடிந்தது. ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகளும் அவர்களது பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர். அங்கு 15 பேர் பலியாகியிருக்கிறார்கள். மேலும் சிலர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை இனங்காணுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வானாத்தவில்லுவில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின்போது கைப்பற்றப் பட்ட ஆயுதங்களில்
T 56 துப்பாக்கியொன்றும் இருந்தது. கம்பளையில் முக்கியமான கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இப்போது பல சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
எம்மிடம் 7 உளவுப் பிரிவுகள் இருக்கின்றன. இந்த உளவுப் பிரிவினர் கடந்த மூன்று நான்கு வருடங்களாக உளவுச்சேவையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி தங்களது கடமைகளை முன்னெடுத்து வந்தனர். மற்றும் சி.ஐ.டி பிரிவு இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தி அதிகமான சந்தேக நபர்களை இனங்கண்டுள்ளது. சி.ஐ.டி பிரிவு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் முப்படையினரும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தத் தாக்குதல்களை சிறப்பாகத் திட்டமிட்ட சிறு குழுவொன்றே மேற்கொண்டுள்ளது எனக் கூறமுடியும். அவர்கள் சாதாரண முஸ்லிம்கள் அல்லர். தவறாக வழிநடத்தப்பட்ட அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்ட பிரிவினரே அவர்கள். வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவரைக் கொலை செய்து அவர்கள் இந்த குற்றச்செயல்களை ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் 30 ஆம் திகதி அவர்கள் இந்தக் கொலையைச் செய்தார்கள். அதன் பின்பு மாவனெல்லையில் புத்தர் சிலைகளை உடைத்து அமைச்சர் கபீர் ஹாசிமின் செயலாளருக்கும் வெடி வைத்தனர். வனாத்தவில்லுவில் அவர்களது பயிற்சிமுகாம் இருந்தது. இதன் பின்பே அவர்கள் இந்த அழிவுகளை முன்னெடுத்தார்கள். இதற்கு எதிராக நாம் தற் போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
பல்வேறுபட்ட கல்வி நிலையங்களில் உரிய வேலைவிசா இல்லாத வெளிநாட்டு ஆசிரியர்கள் கடமையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சும், உள்நாட்டலுவல்கள் அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அத்தோடு இந்த அமைச்சுகள் முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடி பல்வேறு சட்டங்களை இயற்றவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றினை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளன.
முஸ்லிம் சமூகம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாகும். அவர்களுக்கு எந்த இடையூறுகளும் செய்யவேண்டாம் என நான் வேண்டிக்கொள்கிறேன். நாமனைவரும் ஒன்றிணைந்து ஜிஹாத் தீவிரவாதத்தை ஒழிப்பதற்குச் செயற்படு வோம்.
இன்டர்போலுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து நாட்டின் எல்லைக்குள் உட்பிரவேசித்தல் மற்றும் வெளியேறல், பொருட்களை கொண்டு வருதல் போன்றவற்றை அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி நடைமுறைப்படுத்துகிறார்கள். தற்போது அதன் முன்னேற்ற அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பைத் தடைசெய்வதற்காக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. இலங்கைக்கு வெளியே இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் வெளிநாடுகளில் தீவிரவாத நடவடிக் கைகளில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் சட்டம் அமுல்படுத்த எமது சட்டத்தில் இடமில்லை. தண்டனைச் சட்டக்கோவை இலங்கைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே ஆன தாகும். 1979 இல் தீவிரவாதத்தை இல்லாமற் செய்வதற்கான சட்டம் இலங்கைக்குள் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகும். தென் இந்தியாவில் முகாம்களில் இருப்பவர்களும் பின்பு இந்த சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள் ளார்கள்.
1974 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சட்டத்துக்கு அமைவாக இங்கு நாம் செயற்பட்டுள்ளோம். அன்று இந்தச்சட்டம் வட அயர்லாந்தின் தீவிரவாதத்துக்காக மாத்திரமே நடைமுறையில் இருந்தது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக நாம் பயங்கரவாத சட்டமூலத்துக்கு விடயங்கள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளோம்.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் இந்தக் குற்றங்களைச் செய்வதற்கு முன்பு அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தடைகள் ஏற்பட்டிருந்தால் அது புதிய சட்டத்தை அங்கீகரித்துக் கொள்ள முடியாமல் போனதே காரணமாகும். இந்தச் சட்டமூலத்தை 2018 ஆம் ஆண்டு நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். தற்போது இந்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சம்பந்தப்பட்ட குழுவில் முடங்கிப்போயுள்ளது. இந்தக் குழுவினர் என்ன செய்கிறார்கள். உடனடியாக இந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க ஏற்பாடு செய்வதற்கு கவனம்எடுப்பேன்.
இந்தச் சட்டத்தை தாமதப்படுத்தியதன் மூலம் தீவிரவாதிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாமற் போயுள்ளது. இப்போதாவது நாங்கள் உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.
இதே போன்று நாங்கள் மேலும் பல புதிய சட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம். இந்த ஜிஹாத் அமைப்பை உடனடியாக இல்லாமற் செய்துவிட வேண்டும். இந்த அமைப்பு கிறிஸ்தவ சமயத்துக்கு மாத்திரம் அல்ல எமது கலாசாரத்துக்கு அமைய முஸ்லிம் சமயத்தை பின்பற்றுபவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. புத்தர் சிலைகளை உடைக்க ஆரம்பித்தார்கள். இந்து கோவில்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன.
அவர்கள் அடிப்படைவாதிகள் என தெளிவாகக் கூறமுடியும். அவர்கள் எந்த சமயத்தையும் சேர்ந்த பிரிவினரும் அல்லர். அதனால் இந்த அடிப்படைவாதத்தை இல்லாமற் செய்வதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுப்போம்.
பெரும்பாலானோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். இயல்பு நிலைக்குத் திரும்பும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இது தொடர்பில் முப்படையினரும் பொலிஸும் மக்களுக்கு அறிவிப்பார்கள். நாம் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு ஒத்துழைப்போம்.
vidivelli