நாட்டை உலுக்கிய தாக்குதல்களின் விளைவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன?

0 1,058

 

கடந்த ஈஸ்டர் தினத்­தன்று நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்­களை இலக்கு வைத்­த­தாக நடத்­தப்­பட்ட தொட­ரலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளா­னது, பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2009 ஆம் ஆண்டு, தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் வெற்­றி­யினைத் தொடர்ந்து இலங்­கையின் மூன்று தசாப்த கால கொடிய யுத்­த­மா­னது முடி­வுக்கு வந்­தது. இதனைத் தொடர்ந்து நில­விய குண்டு வெடிப்புத் தாக்­கு­தல்­க­ளற்ற அமைதிச் சூழ­லா­னது, மேற்­படி தாக்­கு­தலின் மூலம் மீண்டும் நாட்டு மக்­க­ளி­டையே அச்­ச­மான சூழ­லினைத் தோற்­று­வித்­துள்­ளது. பெண்கள் குழந்­தைகள் உள்­ள­டங்­க­லாக சுமார் முன்­னூ­றுக்கு அதி­க­மா­ன­வர்கள் கொல்­லப்­ப­டு­வ­தற்கும் இன்னும் சுமார் ஐநூறு பேர் வரையில் காய­ம­டை­வ­தற்குக் கார­ண­மான மேற்­படி தாக்­கு­த­லா­னது, நாட்டின் பிற சமூ­கங்­களைப் போன்றே இலங்கை முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் பெரும் அதிர்ச்­சி­யி­னையும் ஆழ்ந்த கவ­லை­யி­னையும் ஏற்­ப­டுத்­தி­விட்­டுள்­ளது.
இலங்கை முஸ்­லிம்கள், ஆயுத ரீதி­யான போராட்­டங்­களைப் போஷிக்­கவோ முன்­னெ­டுக்­கவோ முற்­ப­டாத அமை­தியை விரும்பும் சமூ­க­மாகும். பிர­பல எழுத்­தா­ள­ரான விக்டர் ஐவன் ஒரு முறை குறிப்­பிட்­டதைப் போன்று சிங்­கள மற்றும் தமிழ்ச் சமூ­கங்­களின் ஆயுதப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் அவ்­வாறு தோன்­ற­வில்லை! நாட்டின் பாது­காப்பு, ஒரு­மைப்­பாடு, ஜன­நா­யக ரீதி­யான நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றி­னூ­டாக நாட்டின் சட்ட யாப்­புக்குக் கட்­டுப்­பட்ட அர­சியல் மற்றும் சமூக ரீதி­யான முன்­னெ­டுப்­பு­களை வழி­நெ­டு­கிலும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். அண்­மைய காலங்­களில் இலங்கை முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல்கள், வியா­பாரத் தலங்கள், சொத்­துக்கள், உடை­மைகள் மற்றும் சில உயிர்ச் சேதங்கள் சில பேரி­ன­வாத குழுக்­களின் தாக்­கு­தல்­க­ளினால் ஏற்­பட்ட போதும் மிகவும் பொறு­மை­யா­கவும் பொறுப்­பா­கவும் சகோ­தர சமூ­கங்­களின் பெரும்­பான்மை மக்­களின் சகோ­தர வாஞ்சை, அமைதி மற்றும் சக­வாழ்வின் மீதான ஆழ்ந்த பற்­றி­னையும் ஆத­ர­வி­னையும் குறிப்­பிட்ட சில குழுக்­களின் விச­மத்­த­ன­மான செயற்­பா­டு­களில் இருந்து வேறு பிரித்து அறிந்து இலங்கை முஸ்லிம் சமூகம் செயற்­பட்டு வரு­கின்­றது.

ஆகவே, இன ரீதி­யான அச்­சு­றுத்­தல்கள் ஏற்­பட்ட போது அதனை சட்ட ரீதி­யா­கவும் ஜன­நா­யக அர­சியல் ரீதி­யான தீர்­வினைப் பெற்றுக் கொள்­வதின் பால் முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இத்­த­கைய பின்­ன­ணியில், ஈஸ்டர் தின குண்டுத் தாக்­கு­தல்கள் இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் பலத்த அதிர்ச்­சி­யி­னையும் ஆழ்ந்த கவ­லை­யி­னையும் தோற்­று­வித்­துள்­ளது.

இலங்­கையின் புல­னாய்வுப் பிரிவு குறிப்­பி­டு­வதைப் போன்று உள்­நாட்டுக் கடும்­போக்குக் குழு­வினர் இலங்கை வாழ் கிறிஸ்­தவ சமூகம் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் ஆகி­யோரை இலக்கு வைத்­த­தாகக் கட்­ட­வி­ழத்­து­வி­டப்­பட்ட மேற்­படி கொடிய தாக்­கு­த­லா­னது, ஒரு புறம் அத­னது சர்­வ­தேச தன்­மை­யினை வெளிப்­ப­டுத்த முற்­ப­டு­கின்­றது. மறு­புறம் தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் மற்றும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது இலங்கை மண்ணில் என்­ப­துடன் பாதிப்­புக்­குள்­ளா­னது குறிப்­பாக இலங்­கையின் சகோ­தர கிறிஸ்­தவ சமூ­கமும் என்­ப­தனால் உள்­ளகத் தன்­மை­யி­னையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது. ஆக, தற்­போ­தைய சர்­வ­தேச,பிராந்­திய அர­சியல் சூழல், உள்­நாட்டு அர­சியல் சூழல் என்­ப­வற்­றினை விளங்கிக் கொள்­வ­தா­னது மேற்­படி தாக்­கு­தல்கள் உள்­ளக மற்றும் வெளி அர­சி­யலில் எத்­த­கைய விளை­வினைத் தோற்­றுக்கும் என்­ப­தனை கணிப்­ப­தற்குத் துணை போகும். நாம் சற்று விரி­வாக நோக்­குவோம்.

மேற்­படி தாக்­கு­தலைத் தொடுத்த குழு­வா­னது தமது அமைப்­பி­னு­டைய உறுப்­பி­னர்கள் என ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரி­யி­ருந்­த­தாக ரொய்டர் செய்திச் சேவை ஐ.எஸ் அமைப்பின் ஊடக அறிக்­கை­யினைச் சுட்­டிக்­காட்டி செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. மேலும் தாக்­குதல் தொடுத்த உள்­நாட்டுக் குழு­வா­னது, ஐ.எஸ் அமைப்பின் தலை­வரின் பெயரைக் குறிப்­பிட்டு அவ­ருக்கு சத்­தியப் பிர­மாணப் பிர­க­ட­னத்­தினை வெளிப்­ப­டுத்­து­வ­தனைப் போன்ற காணொ­லி­யா­னது ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டன.

ஆக, ஒரு நாட்டின் கிறிஸ்­தவ சமூ­கத்­தினை இலக்கு வைப்­ப­த­னூ­டா­கவும் வெளி­நாட்­ட­வர்­களை இலக்கு வைப்­ப­த­னூ­டா­கவும் ஐ.எஸ் ஆயுதக் குழு­வுக்கு எதி­ராக இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுக்கும் கூட்­டணி நாடு­க­ளுக்கும் அந்­நா­டு­களின் குடி­மக்கள் பெரும்­பாலும் கிறிஸ்­த­வர்கள் என்­ப­த­னாலும் சர்­வ­தேச கிறிஸ்­தவ சமூ­கத்­தினை நோவினை செய்து தமது எதி­ரி­டை­யான (Retaliation) நகர்­வினைப் பறை­சாற்ற முடி­யு­மாகும் என அவ்­வ­மைப்­பா­னது கணித்து இலங்­கையின் அப்­பாவிக் கிறிஸ்­த­வர்­க­ளையும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­க­ளையும் இலக்கு வைத்­தி­ருக்கக் கூடும்.

மேலும் ஐ.எஸ் அமைப்­பா­னது அத­னது ஆரம்ப கால தாக்­கு­தல்­களின் மூலம் குறிப்­பாக ஈராக் மற்றும் சிரி­யாவில் சுவீ­க­ரித்­தி­ருந்த அனைத்து நிலங்­க­ளையும் இழந்­துள்ள நிலையில், அவ்­வ­மைப்­பா­னது துடைத்­தெ­றி­யப்­பட்­டுள்­ள­தான அமெ­ரிக்­காவின் அறி­விப்­பிற்கு இலங்­கையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லி­னூ­டாக தாம் இன்னும் களத்தில் இருப்­ப­தான பிர­தி­ப­லிப்­பினை காட்­டு­வ­தற்கு முற்­ப­டு­வ­தா­கக்­கூடும்.

மறு­த­லை­யாக, அவ்­வ­மைப்­பா­னது வெளி­யிட்ட ஊடக அறிக்­கை­யினை வைத்து ரொய்டர் கருத்து தெரி­வித்­தி­ருந்த போதிலும், தனிப்­பட்ட முறையில் தாம் அதனை உறுதி செய்து கொள்­ள­வில்லை என ரொய்டர் மேலும் தெரி­வித்­தி­ருந்­தது.

மேலும் தாக்­கு­தலை நடத்­திய உள்­நாட்டுக் குழு­வா­னது, ஐ.எஸ் அமைப்பின் தலை­வரின் பெயரில் சத்­தியப் பிர­மா­ணத்­தினை பிர­க­ட­னப்­ப­டுத்தும் காணொலி மற்றும் இலங்கை தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரும் ஊடக அறிக்­கைக்குப் பிரத்­தி­யே­க­மாக வேறு ஆதா­ரத்­தினை வழங்­க­வில்லை என சில ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

மேலும் கூட்­டணி இரா­ணுவ நட­வ­டிக்­கை­யி­னு­டைய தொடர்ந்­தேச்­சை­யான நட­வ­டிக்­கை­க­ளி­னூடு அவ்­வ­மைப்­பா­னது ஆரம்­பத்தில் இருந்­தை­விட தற்­போது மிகவும் பல­வீ­ன­மான நிலையில் இருப்­ப­தனால் இது போன்ற உரிமை கோரல்­களின் மூல­மாக தமது இருப்­பினைக் காட்டும் பறை­சாற்­றல்­களை மேற்­கொண்­டுள்­ள­தாக சில சர்­வ­தேச அர­சியல் மற்றும் பாது­காப்பு அவ­தா­னிகள் சுட்டிக் காட்­டி­யுள்­ள­தனை ஊட­கங்கள் வெளி­யிட்­டுள்­ளன.

ஆக, மேற்­படி தாக்­கு­த­லினைத் தொடுத்த குழு­வி­ன­ருக்கு சர்­வ­தேச ஆயுத அமைப்­பு­க­ளு­ட­னான தொடர்பு குறித்து ஆராய்­வ­தாக அர­சாங்கத் தரப்பு அறி­வித்­துள்ள அதே நேரம் சர்­வ­தேச புல­னாய்வுப் பிரி­வுகள் சர்­வ­தேச தொடர்­புகள் குறித்த ஆய்வு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளன. மேற்­படி தாக்­கு­த­லா­னது, நியூ­ஸி­லாந்தில் பள்­ளி­வா­சல்­களில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்­கான பதி­ல­டி­யாகும் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரின் அறி­விப்பு குறித்து நியூ­ஸி­லாந்து பிர­தமர் தரப்­பி­லி­ருந்து பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

தமது நாட்டில் (நியூ­ஸி­லாந்தில்) நிகழ்ந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வ­ருக்கு உரிய தண்­டனை முஸ்­தீ­பு­களை தாம் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இலங்­கையின் தாக்­கு­த­லினை நியூ­ஸி­லாந்து தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்­து­தற்­கான புல­னாய்வுத் தக­வல்­களைத் தாம் பெற­வில்லை எனவும் குறித்த விசா­ர­ணை­களின் ஆரம்ப கட்­டத்­தி­லேயே இலங்கை அர­சாங்கம் உள்­ளது என பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

விட­யங்கள் இவ்­வா­றி­ருக்­கையில் பிராந்­திய அர­சி­யலில் பல விளை­வு­களை மேற்­படி தாக்­குதல் ஏற்­ப­டுத்த முற்­படும். இந்து பசுபிக் பிராந்­தி­யத்தில் நிகழ்ந்து வரும் அமெ­ரிக்கா,சீனா மற்றும் இந்­தியா ஆகி­ய­வற்­றிற்­கி­டை­யி­லான போட்டி அர­சி­ய­லா­னது, கேந்­திரப் புவியியல் ஸ்தான­மா­கிய இலங்­கையில் தமது மூலோ­பாய இருப்­பினை உறுதி செய்யும் பிர­யத்­த­னத்தில் உள்­ளன.

கடந்த அர­சாங்­கத்தின் போது மூலோ­பாய அர­சியல் மற்றும் பொரு­ளா­தார மேலோங்­கலை இலங்­கையில் மேற்­கொண்ட சீனா­வினை எதிர் சம­நி­லைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அமெ­ரிக்கத் தலை­மைய நாடு­களும் இந்­தி­யாவும் மேற்­கொண்டு வரு­கின்­றன.

இத­ன­டி­யாக ஏற்­க­னவே இலங்­கை­யுடன் பரஸ்­பர வழங்கல் மற்றும் பெறுதல் உடன்­ப­டிக்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கா, அடுத்த கட்­ட­மாக (இலங்­கையில்) ‘படை­களை நிறுத்­துதல் குறித்த உடன்­ப­டிக்கை’ குறித்து சிந்­தித்து வரு­வ­துடன் அதற்­கான கடும் எதிர்ப்­பினை ம.வி.மு வெளி­யிட்டு வரு­கின்­றது. ஆக, தற்­போது எழுந்­துள்ள சர்­வ­தேச ஆயுதக் குழுக்­களின் அச்­சு­றுத்தல் என்­கின்ற நிலை­மை­யா­னது, அமெ­ரிக்­கா­வு­ட­னான அடுத்த கட்ட உடன்­ப­டிக்­கை­யினை மேற்­கொள்­வ­தின்­பா­லான தேவை­யினை பலப்­ப­டுத்­த­முற்­படும். ஏனெனில், மியன்மார்; பிலிபைன்ஸ் போன்ற நாடு­களின் சர்­வ­தேச ஆயுதக் குழுக்­களின் அச்­சு­றுத்தல் குறித்த அறி­விப்­புகள் எழுந்த போது இந்­நா­டுகள் அமெ­ரிக்­கா­வு­ட­னான பாது­காப்பு அல்­லது ராணுவ ரீதி­யான உடன்­பா­டு­க­ளுக்குச் சென்­றுள்­ளன. அல்­லது அமெ­ரிக்கா அத்­த­கைய மூலோ­பாய முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்ள முஸ்­தீ­பு­களை மேற்­கொள்ள முற்­படும் போது சர்­வ­தேச ஆயுதக் குழுக்­களின் அச்­சு­றுத்­தல்கள் உள்­நாட்டு ஆயு­தக்­கு­ழுக்கள் சர்­வ­தேச குழுக்­க­ளுக்கு தமது ஆத­ர­வினைத் தெரி­விக்கும் நிகழ்­வுகள் எழுந்­துள்­ளன.
இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் அது சீனா­விற்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் மூலோ­பாயப் பங்­கா­ளி­யாக இருந்த போதிலும் குறிப்­பாக இலங்கை விட­யத்தில், இலங்கை தமது செல்­வாக்­கிற்­குட்­பட்­ட­தாக இருத்தல் வேண்டும் என்­கின்ற போக்கு மிகைத்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க, அதிகம் அமெ­ரிக்கா சார்­பான நிலைப்­பாட்­டினைக் கொள்­வ­தாக இந்­திய தரப்பின் சிலர் கரு­து­கின்­றனர். எனினும் ஒன்­றுக்­கொன்று போட்­டி­யான வல்­ல­ர­சு­க­ளான இந்­தியா, சீனா­வினை இலங்­கையில் அனு­ம­திப்­பதன் மூலம் ஒரு­வரை ஒருவர் சமப்­ப­டுத்தி மறு­த­லை­யாக அவ்­வி­ரு­வ­ரையும் அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வு­களின் மூலம் மீண்டும் சமப்­ப­டுத்தும் வியூ­கத்­தினை பிர­தமர் கொண்­டி­ருக்க முடியும். ஆக, தற்­போ­தைய சூழ­லா­னது, அர­சாங்­கத்­தினை இந்­தி­யா­வு­ட­னான நெருக்­கத்­தினை மேலும் அதி­க­ரிக்கச் செய்­யக்­கூடும்.

உள்­ளக அர­சியல் சூழலில் மேற்­படி ஈஸ்டர் தினத் தாக்­கு­தல்கள் பல விளை­வு­களைத் தோற்­று­விக்க முற்­படும். பொரு­ளா­தாரப் பின்­ன­டை­வுகள் அதில் பிர­தா­ன­மா­ன­தொன்­றாகும். மேலும், மேற்­படி தாக்­கு­த­லுக்கு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தினை ஒட்டு மொத்­த­மாக குற்­றச் ­சாட்ட இடம் ­வ­ழங்­காத பிர­தி­ப­லிப்­பா­னது சரி­யா­னதும் முதிர்ச்­சி­யா­னதும் வர­வேற்­கத்­தக்­க­து­மான அணு­கு­மு­றை­யாகும்.

எனினும் சாதா­ரண மக்கள் மத்­தி­யி­லான அச்சம், ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தேகக் கண் கொண்டு பார்த்தல் ஒரு­படி மேலே சென்று சாதா­ரண மக்கள் முஸ்­லிம்­களின் மீது பொது இடங்­க­ளி­லான கெடு­பி­டி­களைப் பிர­யோ­கிக்க முற்­ப­டுதல் போன்­றன நிகழ்­வ­தற்கு இட­முண்டு.

இன­வாத சக்­திகள், சமூ­கத்தின் மீதான நெருக்­கு­தல்­களை பிர­யோ­கிக்க முற்­ப­டவும் கூடும். எனினும், கடும்­போக்கு குழு­வொன்­றினை அது சார்ந்த சமூ­கத்தில் இருந்து வேறு பிரிக்கும் பாது­காப்பு நட­வ­டிக்­கைக்கு அச்­ச­மூ­கத்தின் மீது பிர­யோ­கிக்கும் கெடு­பி­டிகள் மறை விளை­வு­களைத் தோற்­று­விக்­கு­மென பாது­காப்பு வல்­லு­னர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

மேலும் மேற்­படி தாக்­கு­தல்­க­ளா­னது உள்­ளக அர­சியல் ரீதி­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்த வல்­லன. மேற்­படி தாக்­குதல் குறித்து புல­னாய்வுப் பிரி­வுகள் எச்­ச­ரித்­தி­ருந்தும் போதிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தது குறித்து பூதா­க­ர­மான சர்ச்சை கிளம்­பி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு மைத்­தி­ரி-­–ரணில் அர­சாங்­கத்தில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட விரி­ச­லா­னது பெரும் யாப்பு நெருக்­க­டி­யினை நாட்டில் தோற்­று­வித்­தது. ஜனா­தி­ப­தி­யினால் திடீ­ரென அகற்­றப்­பட்ட பிர­தமர் ரணில், மீண்டும் உச்ச நீதி­மன்­றி­னூ­டாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவ்­வா­றி­ருக்­கையில், அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தாமே கள­மி­றங்கும் உத்­தே­சத்தில் மைத்­திரி இருக்­கின்றார். எனினும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர், அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்கும் முஸ்­தீ­பு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இன­வாத குழுக்­களின் மூல­மாக முஸ்­லிம்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அத்­து­மீ­றல்கள் எவ்­வாறு ஆட்சி மாற்­றத்­திற்குத் துணை போனதோ அது­போன்று கடும்­போக்கு பௌத்த முன்­னெ­டுப்­புகள் கிறிஸ்­தவ சமூ­கத்­தி­னது அதி­ருப்­தி­யி­னையும் தோற்­று­வித்­தி­ருந்­தது.

ஆக, தமது இருப்பு மற்றும் பாது­காப்பு என்­ப­வற்­றிற்கு சர்­வ­தேச ரீதி­யான ஆயு­தக்­கு­ழுக்­களின் பின்­ன­ணி­யி­லான கடும்­போக்­கா­ளர்­களின் அச்­சு­றுத்தல் என்­கின்ற நில­மை­யா­னது, தற்­போ­தைய சூழலில் குறிப்­பாக இலங்கை கிறிஸ்­தவ சமூ­கத்­தி­னதும் பிற சமூ­கங்­க­ளி­னதும் அர­சாங்கம் மற்றும் ஐ.தே.க மீதான நம்­பிக்­கை­யீ­னத்தை தோற்­று­விக்க முற்­படும். மறு­த­லை­யாக இந்­நாட்டில் பிர­பல ஆயுத இயக்­க­மாகச் செயற்­பட்ட புலி­களை வெற்றி கொண்­ட­தற்­கான உரிமை கோர­லுக்­கான அர­சியல், குறிப்­பாக பிர­தான தேர்தல்களின் போது எப்போதும் சூடான விவாதமாகும்.

ஆக, புலிகளை வெற்றி கொண்ட முஸ்தீபுகளில் பிரதான வகிபாகத்தினை ஆற்றியவர்கள் என்கின்ற வகையில் மஹிந்த தரப்பிற்கும் குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய குறித்த கிறிஸ்தவர்கள் உள்ளடங்கலான மக்கள் ஆதரவினை தற்போதைய சூழல் அதிகரிக்கச் செய்யும். அதே போன்று முன்னாள் போர்த் தளபதியான பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவிற்கு அவருடைய துறைசார் புலமை மற்றும் திறமைக்குப் பொருத்தமான பதவியினை அரசாங்கம் வழங்குவது பற்றி தீர்மானிப்பதற்கான அழுத்தத்தினை மேற்படி சூழல் தோற்றுவிக்கும்.
இறுதியாக, இலங்கை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பானது திறமையான தமது முன்னெடுப்புகளை இதற்கு முன்னர் நிரூபித்துள்ளது என்பதனை யாரும் அறிவர். பிரபல ஆயுத இயக்கமான புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் அவை முன்னெடுத்த நடவடிக்கைகள் பல அசம்பாவிதங்களைத் தடுத்துள்ளன. முன்னாள் அமெரிக்க நிருவாகி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்குக் கூறியுள்ளதைப் போன்று, சர்வதேசத்தினதும் அதனது புலனாய்வுச் சமூகத்தினதும் உதவி இலங்கைக்கு அவசியம் என்கின்ற போதிலும் அது, இலங்கை பாதுகாப்புப் பிரிவுகளது திறமையை குறைத்து மதிப்பிடுவதாக அமையாது.

ஒரு நாட்டின் தேசிய நலன்களின் பிரதானமானது, தேசிய பாதுகாப்பு என்பதாகும். ஆக, அரசியல், கருத்து மற்றும் நிலைப்பாடு ரீதியான ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கிடையிலான வேறுபாடுகளும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அற்ற நிலைமைகளும் தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தும் என்பது வெளிப்படை. எனவே இது குறித்து தீர்வுகள் எட்டப்படல் வேண்டும்.

ஏ.எச்.ரெஸா உல் ஹக்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.