இலங்கையின் வீட்டு மனையாள்களில் ஒருவரான பாத்திமா பஸ்லா அவரது கொழும்பு சுற்றயலில் வீதியின் எதிர்ப்புறத்தில் உள்ள பாரிய மூன்று மாடி வீட்டில் வசிக்கும் நபர்களை செல்வந்த பிரபலங்கள் என்றே நினைத்திருந்தாள். அவர்கள் இந்தளவு அபகீர்த்திமிக்கவர்களாக மாறுவார்கள் என அவள் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.
மஹாவில தோட்டத்தில் வெள்ளை நிற மாளிகையில் வசித்த இரண்டு சகோதரர்கள் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற 350 க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டு தேசத்தை உலுக்கிய தற்கொலை தாக்குதல்களின் முக்கிய இயங்கு நபர்களாக அறியப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் கடந்த ஒரு தசாப்தமாக இலங்கை மக்கள் அனுபவித்து வந்த சார்பளவான சமாதானத்தை நிலை குலைத்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மூன்று தேவாலயங்கள் மற்றும் நான்கு ஹோட்டல்களில் இடம்பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது.
33 வயது நிரம்பிய இன்ஸாப் இப்றாஹீம் என்ற செம்பு தொழிற்சாலை உரிமையாளர் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்த சங்கரிலா ஹோட்டலில் காலை உணவு வேளையில் தனது வெடி பொருட்களை வெடிக்க வைத்ததாக குறித்த குடும்பத்துக்கு நெருக்கமான தகவல் மூலம் ஒன்று கூறியது.
பின்னர் பொலிசார் அந்தக் குடும்பத்தின் வீட்டை சோதனையிடச் சென்ற பொழுது அவரது இளைய சகோதரரான இல்ஹாம் இப்றாஹீம் குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார். இதில் அவர், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த தகவல் மூலம் கூறியது.
அவர்கள் நல்ல மனிதர்கள் போன்றே தோன்றினர் என இப்ராஹீமின் வீட்டுக்கு எதிர்த்திசையில் வசிக்கும் பஸ்லா ராய்ட்டர் செய்தி சேவைக்கு கூறினார். குறித்த வீடு தற்சமயம் சீல் வைக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.
இந்த சகோதரர்களின் பெயர்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் அதிகார தரப்புகள் எந்த ஒரு தற்கொலை தாக்குதல்தாரியினதும் பெயரை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அத்துடன் இது தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் கேட்ட பொழுது அவர்களும் பதில் வழங்கவில்லை.
இந்த சகோதரர்களின் தந்தை முஹம்மட் இப்ராஹீம், இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பான நபர்கள் பற்றிய விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் கூறினர். மிகவும் செல்வந்த வாசனைத்திரவிய வர்த்தகரான இப்ராஹீம் வர்த்தக சமுதாயத்தின் தூண்களில் ஒருவராக கருதப்படுகின்றார். அவருக்கு ஆறு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். அவரை அறிந்த நபர்களால் போற்றப்படும் மனிதராக அவர் உள்ளார்.
“பிரதேசத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு மற்றும் பண உதவி செய்வதில் அவர் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர். அவரின் பிள்ளைகள் இந்த காரியத்தை செய்தது நினைத்துக் கூட பார்க்க முடியாத விடயமாகும்” இவ்வாறு தனது இரு மகள்களையும் அன்புடன் நோக்கியவாறு பஸ்லா கூறினார். “அவர்கள் மேற்கொண்ட செயல் இன்று அனைத்து முஸ்லிம்களும் சந்தேகக் கண் கொண்டு நோக்கப்பட காரணமாக அமைந்து விட்டது”
அந்த குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு தகவல் மூலத்தின் பிரகாரம் 31 வயது நிரம்பிய இல்ஹாம் இப்ராஹீம் வெளிப்படையாக தீவிரவாத கருத்துக்களை கூறுபவராகவும் இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் கூட்டங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் காணப்பட்டார் எனக் கூறியது.
அவரது வர்த்தக முயற்சியாண்மை சகோதரரான இன்ஸாப் வெளியில் தனது கருத்துக்களில் நடுநிலை கொண்டவராகவும் தனது ஊழியர்கள் மற்றும் கஷ்டப்படும் உள்ளூர் குடும்பங்களுக்கு கொடை வழங்கக் கூடியவராகவும் இருந்ததாக குறித்த தகவல் மூலம் கூறியது. நகை உற்பத்தி செய்யும் மிகவும் செல்வந்த நபர் ஒருவரின் மகளை மணம் முடித்த அவருக்கு எந்தவித பணப் பிரச்சினையும் காணப்படவில்லை.
“நான் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானேன், அவர்கள் இவ்வாறான மனிதர்கள் என நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை” என இப்ராஹீமின் வீட்டுக்கு அருகில் பணிபுரியும் வலையமைப்பு பொறியியலாளரான 38 வயது நிரம்பிய சஞ்சீவ ஜயசிங்க கூறினார்.
ஞாயிறு காலை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் இந்து இன தமிழ் பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர் 10 வருடங்களாக நிலவி வந்த சார்பான அமைதியை உலுக்கி உள்ளது. அத்துடன் இது மீண்டும் பிரிவினை வாத வன்முறைகளை மீள எழுப்பலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்ராஹீம் சகோதரர்கள் நாட்டை சீர்குலைத்தமைக்காக நாடு முழுவதும் மக்களின் தூற்றுதல்களுக்கு இலக்கான போதும் அவர்களில் தங்கியிருந்த அவர்களது சமூக மக்களுக்கு அவர்களின் இழப்பு துக்கத்தை ஏற்படுத்தும்.
“ஏனைய முதலாளிகள் போலன்றி அவர் மிகவும் அன்பானவர். நான் அவரிடம் பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்” என சர்வார் என்ற இன்ஸாபின் தற்போது கைவிடப்பட்டுள்ள கொழும்பின் சுற்றயலில் அமைந்துள்ள செம்பு தொழிற்சாலையில் பணி புரிந்த வங்கதேச பணியாளர் கூறினார். “அவர் போய்விட்டார், நான் இப்போது என்னசெய்வேன்?”
(ராய்ட்டர்)