தப்லீக் பணி முடிந்து பஸ்ஸுக்காக காத்திருந்த அரபுக்கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது
குருநாகலில் சம்பவம்
குருநாகல் நகரில் தப்லீக் ஜமாஅத் பணியில் ஈடுபட்டிருந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் நால்வர், நாட்டின் நிலைமைகள் காரணமாக பணியை முடித்து வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குளியாபிட்டிய வலயத்துக்குட்பட்ட அரபுக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவர்கள் தப்லீக் ஜமாஅத் பணிக்காக குருநாகல் நகரை அண்மித்த பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நிலைமைகள் மோசமடைந்ததால் தப்லீக் பணியை இடைநிறுத்தி சகலரையும் வீடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மாணவர்களில் இருவர் புத்தளம் செல்ல வேண்டிய நிலையில் வழி தெரியாது அநுராதபுரம் பஸ்ஸில் ஏறியுள்ளனர். இதனையறிந்த பஸ் நடத்துனர் அவர்களை உடன் பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டுள்ளார். இந் நிலையில் இவர்கள் மீண்டும் குருநாகல் பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த சக மாணவர்கள் இருவருடனும் இணைந்துள்ளனர்.
இவர்கள் நீண்ட ஜுப்பா ஆடையுடனும் கைகளில் பயணப் பைகளுடனும் பஸ் நிலையத்தில் நின்றிருந்த நிலையில், இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவர்களை நோக்கி வந்துள்ளனர்.
பொலிஸார் தம்மை நோக்கி வருவதை கண்டதும் இவர்களில் இருவர் அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளனர். அச் சமயம் இவர்களில் இருவரிடம் அடையாள அட்டைகள் இருந்திருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏன் ஓடினீர்கள் எனக் கேட்டதற்கு, தமக்கு சிங்களம் தெரியாது என்பதாலேயே ஓட முயன்றதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து பொலிசார் இவர்கள் நால்வரையும் கைது செய்து குருநாகல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்து இவர்களை உடன் விடுவிப்பதற்கான முயற்சிகளை குருநாகல் பிரதேச முஸ்லிம் பிரமுகர்கள் முன்னெடுத்த போதிலும் அது பலனளிக்கவில்லை. எனினும் கைதான இம்மாணவர்கள் தொடர்பான விபரங்களை கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி இவர்கள் தொடர்பான விபரங்களை உறுதி செய்த பின்னரே மறுநாள் நால்வரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
vidivelli