Q தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அமைப்பொன்று உரிமை கோரியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் என்ன?
தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. 350 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள். சுமார் 500 பேர் காயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள். இதுவோர் சாதாரண விடயமல்ல, பாரதூரமான விடயமாகும்.
நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பதால் முஸ்லிம்கள் பலசவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சமய ரீதியில் நோக்கப்பட்டால் எமது பள்ளிவாசல்கள், எமது கலாசார உடை என்பனவற்றுக்கும் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்.
அனைத்துச் சவால்களையும் பொறுமை, அன்பு, கருணை, நல்லுறவு மூலம் வெற்றிகொள்ள முடியும். முஸ்லிம்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உணர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது. கிராமங்களிலும், நகரங்களிலும் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். நாட்டில் மீண்டும் இன ரீதியிலான கலவரங்கள் ஏற்படா வண்ணம் அரசாங்கமும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தவேண்டும்.
Q பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினருடனான நல்லுறவை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்பலாம்?
ஆலயங்கள், ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்கு இலங்கையின் குறிப்பிட்ட தீவிரவாத கொள்கையுடைய சிறு குழுவினருக்கே தொடர்புள்ளது. இஸ்லாம் தீவிரவாதத்தையும், மனிதப் படுகொலைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறது.
முஸ்லிம் சமூகத்தில் குறிப்பட்ட தீவிரவாதக் கொள்கையுடைய குழுவினரே இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் முஸ்லிம் சமூகம் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது என்பதையும் நாம் மாற்று சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களில் பங்கு கொள்வதுடன் அவர்களுக்கு உதவிகளும் செய்யவேண்டும். இந்த கொடூரமான தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு நோக்கக்கூடாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதே கருத்தினையே வெளியிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களையும், பின்னணியில் இருந்து செயற்பட்டவர்களையும், பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்வதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட தரப்பினர் எம்மீது கொண்டுள்ள சந்தேகங்களைக் களைவதற்கு உதவியாக இருக்கும். கிறிஸ்தவ மதத்துக்கும், இஸ்லாத்துக்குமிடையில் இருக்கும் நெருங்கிய உறவினைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
Q பள்ளிவாசல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?
அரசாங்கம் அனைத்து மதத்தலங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டில் குழப்பநிலையை உருவாக்குவதற்கு விஷமிகள் பள்ளிவாசல்கள் மீது கல்லெறிதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். அதனால் பள்ளிவாசல் நிர்வாகிகளும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பள்ளிவாசல்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பாதுகாப்பு வழங்குமாறும் பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Q பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க புர்கா தடை செய்யப்படவேண்டும் என தனிநபர் பிரேரணை கொண்டுவரவுள்ளாரே?
ஆம், பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையொன்றினை பாராளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார். இதுவிடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆராய்ந்து தீர்மானமொன்றினை எடுக்கும். தற்போது எமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் புர்கா ஆடையைப் பயன்படுத்தி சில சட்டவிரோத செயல்களும் நடைபெறுகின்றன. புர்கா ஆடை இலங்கை முஸ்லிம்களின் ஆடையல்ல. எமக்கும் பொருத்தமான கலாசார ஆடையொன்றினை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. இக்கட்டான இன்றைய சூழலில் புர்காவைத் தவிர்த்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Q இஸ்லாமிய மத அமைப்புகளை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும்!
இஸ்லாமிய மத அமைப்புகள் கொள்கை ரீதியாக வேறுபட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் கொள்கை ரீதியாக பிளவுபட்டுள்ள அவற்றை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் ஒற்றுமைப்படுவதன் மூலமே எமக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைய முடியும்.
கொள்கை ரீதியில் பிளவுபட்டுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் வக்பு சட்டத்தின் கீழ் வக்பு சபையில் பதிவு செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதுகிறேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சம்பவங்களையடுத்து முஸ்லிம்களை சந்தேகிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த சந்தேகங்களைக் களைய வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.
vidivelli