ஒரு சிலரின் கொடுமையான , கொடூரமான செயல்களுக்காக அப்பழியை எந்த ஒரு சமூகம் மீதும் சுமத்த மாட்டோம்
யாழ்ப்பாண கிறிஸ்தவ திருச்சபை அறிக்கை
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா அன்று நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக யாழ்ப்பாண கிறிஸ்தவ திருச்சபையினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை திருச் சபையின் வட குரு முதல்வர் வணபிதா. சாமுவேல் ஜே. பொன்னையா, கத்தோலிக்க திருச்சபையின் குருமுதல்வர் வணகுரு. பி.ஜெ. ஜெபரட்ணம், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் அங்கிலிக்கன் நிலையியற் குழு உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.ஆர்.எச். ஹூல் , யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் ஜெ.பி. ஜெயதேவன், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உட்பட 38 பேர் ஒப்பமிட்டே இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் முழு வடிவம் வருமாறு:
இயேசுவின் உயிர்ப்பின் திருநாள் நம்பிக்கை, வாழ்வு மற்றும் வன்முறை அற்ற உலகத்தை கொண்டாடும் ஒரு திருநாள்.
எனினும் 2019 இல் இவ் உயிர்ப்பு விழா பாரியளவில் வன்முறை மற்றும் படுகொலைகளால் சீரழிக்கப்பட்டது. இந்நாளில் இலங்கையிலுள்ள ஆலயங்களிலும் விருந்தகங்களிலும் நடைபெற்ற கொடூரமான தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். உறவுகளை இழந்த குடும்பங்கள் மற்றும் உடல் உள காயத்துக்கு உள்ளாக்கப்பட்டோர், கலக்கத்துக்குள்ளாக்கப்பட்டோர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், எமது தோழமையையும் தெரிவிக்கின்றோம்.
இத்திருநாளில் தாக்குதல்களால் கொல்லப்பட்டோரை எண்ணி துயருறும் நாம், இந்த நாட்டில், பத்தாண்டுகளுக்கு முன் நிறைவுற்ற போரின்போது இழக்கப்பட்ட (மரணித்த) அனைவரையும் நினைவுகூருகின்றோம்.
எமது துன்பியல் வரலாற்றை மீள நோக்குகையில், எதிரிகள் என நாம் கருதியவர்கள் தொடர்பாக வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு பற்றிய எமது மனப்பாங்கில் முரண்படுநிலைப் போக்குகள் இருப்பதையும் எதிர்கொள்கிறோம்.
அப்பாவிகளின் உயிர்களை பறிக்கும் எவருடைய வன்முறையையும் நாம் நிராகரிக்கின்றோம், இது மீண்டும் ஒருபோதும் நடைபெறக்கூடாது.
இந்த திருநாள் தாக்குதல்களை கண்டிக்கும் நாம் ‘வாழ்வை’ முன்னுரிமைப்படுத்துகின்றோம். அச்சம், அடக்குமுறை மற்றும் வன்முறை அற்ற வாழ்வுக்காக நிற்க அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த எமது சககுடிமக்கள் எல்லாருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். ஒரு சிலரின் கொடுமையான, கொடூரமான செயல்களுக்காக அப்பழியை எந்த ஒரு சமூகம் மீதும் சுமத்தமாட்டோம்.
இந்த அவலத்திலிருந்து சமூக, பொருளாதார, மத மற்றும் அரசியல் ஆதாயத்தைத் தேடும் அனைவரையும் நாம் நிராகரிக்கின்றோம்.
இக்கொடிய குற்றங்களைப் பற்றிய உண்மை வெளிவரப்படும் போதும் நீதி வழங்கப்படும் வரையும் அதற்குப் பின்னரும் அனைவரையும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கும்படி கேட்டு நிற்கின்றோம்.
எந்த சமூகத்துக்கும் எதிராக கலவரங்கள் அல்லது வன்முறைச் செயற்பாடுகள் நடைபெறாதிருக்க பாதிக்கப்படக் கூடிய நிலையிலுள்ள சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை கோரி நிற்கின்றோம். எமது துக்கம் பழிவாங்கலுக்கான ஓர் அழைப்பல்ல. மாறாக சகவாழ்வுக்கான ஓர் அழைப்பு.
vidivleli