தீவிரவாத பயிற்சி பெற்ற 160 உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் முன்னரே அறிந்திருந்தனர்
உயர்மட்ட உத்தரவு கிடைக்காததால் கைது செய்ய முடியவில்லை என்கிறது புலனாய்வுப் பிரிவு
இலங்கையில் சுமார் 160 பேர் தீவிரவாதப் பயிற்சிகளைப் பெற்றிருந்தமை தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அவர்களை கைது செய்வதற்கான அனுமதி உயரதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை என அரச புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏலவே தீவிரவாத பயிற்சி பெற்ற ஒரு குழுவினரே கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களை நடாத்திய குழுவினரை பயிற்றுவித்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கும் பொலிஸ் தலைமையகத்துக்கும் பரிமாறிய போதிலும் சம்பந்தப்பட்ட தீவிரவாத குழுவினரை கைது செய்வதற்கான உத்தரவு உயர் மட்டங்களிலிருந்து புலனாய்வு விசாரணையாளர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் தெரிய வருகிறது.
குறித்த தீவிரவாத குழுவினர் வணாத்தவில்லுவிலுள்ள 75 ஏக்கர் பரப்பளவான தென்னந் தோட்டத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டமையை கடந்த ஜனவரி மாதம் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கை ஒன்றின் மூலம் கண்டறிந்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாவனெல்லையில் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் பலர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமையவே வணாத்தவில்லுவில் இருந்த பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் ஒருவருக்கு கிடைத்த எஸ்.எம்.எஸ். தகவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே குறித்த இடத்தை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதன்போது சக்திவாய்ந்த 100 கிலோ சீ4 வெடிமருந்துகளையும் ஆறு கொள்கலன்களில் இருந்த நைட்ரஜன்களையும் 99 டெட்டனேட்டர்களையும் குறித்த தென்னந் தோட்ட பயிற்சி முகாமிலிருந்து கடந்த ஜனவரி 16 ஆம் திகதி சி.ஐ.டி.யினர் கைப்பற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இத் தீவிரவாத குழுவினர் குண்டுத் தாக்குதல்களை நடாத்தும் போது ஆயுதங்களை கையாளும் முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் இக் குழுவின் தலைவரான ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த பயிற்சி முகாமுக்கு அடிக்கடி வருகை தந்து குழுவில் புதிதாக இணைந்து கொண்டோருக்கு விரிவுரைகளை நடாத்தியுள்ளமையும் குறித்த முகாமிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli