உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 360ஐ எட்டியுள்ளது. காயமடைந்த சுமார் 160 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன. மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதுடன் வெளியில் நடமாடவும் தயங்குகின்றனர். இத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமன்றி இலங்கைப் பிரஜைகள் அனைவருமே தினமும் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். நினைத்துப் பார்க்கக் கூட முடியாதளவு கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை நடாத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிய குழுவினரே என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் இலங்கை முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளனர். இஸ்லாமிய கலாசார ஆடைகளுடன் முஸ்லிம்களைக் கண்டால் அச்சப்படுகின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது. குருநாகல் நகரில் நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் நின்ற நான்கு அரபுக் கல்லூரி மாணவர்கள் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரமாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
குறிப்பாக அகதி அந்தஸ்துக் கோரி நீர்கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 500க்கும் அதிகமானோர் அவர்கள் தங்கியிருந்த வீடுகளிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் சகலரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கப்பால் சில இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்களும் பதிவாகியுள்ளன. பல கடைகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் மீதும் கல் வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆக, இத் தாக்குதல்களின் பிரதிபலிப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எந்தவிதமான அசம்பாவிதங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருக்காத சந்தர்ப்பத்திலேயே முஸ்லிம்கள் மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் தெற்காசியாவிலேயே இதுவரை இடம்பெற்றிராதளவு பாரிய தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இதன் பின்னரும் முஸ்லிம்களுக்கெதிராக பெரும்பான்மை மக்களின் கோபப்பார்வை திரும்பாது என எம்மால் எதிர்பார்க்காமலிருக்க முடியாது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்காக இந்த நாட்டின் சட்டத்தை யாரும் கையிலெடுத்து செயற்படவும் அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் இதுவரை ஆரோக்கியமான நகர்வுகளையே எடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற நாள் முதல் இரவு வேளைகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. சமூக வலைத்தளங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமானவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இந்த விழிப்பு நிலையும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் தொடர வேண்டும். அதேநேரம் நாட்டு மக்களைக் குடிகொண்டுள்ள அச்சத்தை நீக்கவும் பாதுகாப்பை முற்றாக உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏலவே போதுமான தகவல்கள் கிடைத்திருந்தும் இவ்வாறானதொரு தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் பாதுகாப்புத் தரப்பினரும் அரசாங்கத்தினரும் தோல்வியுற்றுள்ளனர். இதற்காக பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ் மா அதிபரும் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய யார் புதிதாக பொறுப்பான பதவிகளுக்கு வந்தாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய இலங்கையின் அவசரமானதும் அவசியமானதுமான தேவையாகும்.
vidivelli